(13-09-2022)
காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”ஐ.நா கூட்டத்தொடரில் எங்கள் சார்பாக சுரேன் குருசாமியை அனுப்பியிருக்கிறோம். அவர் ஏற்கனவே அங்கு சென்றிருக்கிறார்.
ஐ. நா தீர்மானத்தின் அடிப்படையிலே எங்களுடைய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் உடைய உறவுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே. ஐ. நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கின்ற ஒரு விளைவினை ஐ.நா சபை மேற்கொள்ள வேண்டும்.
அதிலே குறிப்பாக கூறப்பட்ட விடயம் நாங்கள் எங்களுடைய தேசிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியது என்னவென்றால், மனித உரிமை மீறல்களிலே சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை அளிக்க வேண்டும் என கூறி கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறோம். இது முக்கியமான ஒரு விடயமாக இருக்கிறது.
அந்த வகையிலே புலம்பெயர்ந்த உறவுகளும் தங்களுடைய செயற்பாட்டிலே முனைப்போடு சேர்ந்து இணைந்து செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த விடயங்களை ஐ. நா இந்த கூட்டத்தொடரிலே ஒரு முடிவான முடிவாக எடுக்க வேண்டும். என்பதும் ஐ. நாவினுடைய, அதிலே இருக்கின்ற நாடுகளுக்கும் எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் அனுப்பியிருக்கின்றோம்.
அங்கே வருகின்ற நாட்டவர்களை சந்தித்து எங்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக கூற இருக்கின்றோம். இலங்கை அரசாங்கம் தங்களுடைய செயற்பாட்டிலே இந்த ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயாரில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
ஆகவே இந்தியா, அமெரிக்கா உட்பட ஏனைய ஐ.நா சபையினுடைய அங்கத்துவ நாடுகள் இனப்பிரச்சினை சார்பாக ஐ.நா எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை தர வேண்டும் என்பதும் ஆதரவை பெற முயற்சிகளை மேற்கொள்ளுவதுமாக தான் அங்கு நாங்கள் அனுப்பியிருக்கின்றோம்.
புலம்பெயர்ந்த உறவுகளோடு அது சம்பந்தமான செயற்பாடுகள் தொடர்ந்து நடக்கும்” என மேலும் தெரிவித்தார்.