2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினரும், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியினரும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை குறித்த இரு குழாமினரும் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ்பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வரவேற்கும் வாகன பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இலங்கை காவல் துறையினரால் வாகன அணிவகுப்பில் வீரர்கள் அணிவகுத்து கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த வாகன அணிவகுப்பு கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம், மிட்லாண்ட் பிளேஸ், கொழும்பு 07 மற்றும் கொழும்பு 07 டொரிங்டன் சதுக்கம் என்பவற்றின் ஊடாக விளையாட்டு அமைச்சின் வளாகத்திலுள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை சென்றடையும்.
இந்த வாகன அணிவகுப்பு கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்டு முற்பகல் 9 மணிக்கு கொழும்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை வலைப்பந்து சம்மேளனம் இணைந்து இந்த வாகனப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களான டயலொக் ஆசி ஆடா நிறுவனம் இதற்கு இணை அனுசரணை வழங்குகின்றது.