கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் நிதி சேர் நடைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது
இதன் மூலம் சேகரிக்கப்பெற்ற 500000 கனடிய டாலர்கள் இலங்கையில் உள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்
கனடா உதயனுக்கு கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ தெரிவிப்பு…
“இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. ஒரு காலத்தில் வலுவான சுகாதார அமைப்பு வீழ்ச்சியை நெருங்குகிறது, நோயாளிகள் மின் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ஆபத்தில் உள்ளனர். எனவே இந்த இடர் மிகுந்த காலப்பகுதியில் எமது கனடிய தமிழர் சமூகம் இணைந்து இந்த 50000 கனடிய டாலர்களை சேகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு விடயமாகும். இதன் மூலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக தென்னிலங்கை மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை நாம் தெரிவிப்பதாகவும் நான் கருதுகின்றேன்’
இவ்வாறு கடந்த 11-09-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கனடிய தமிழர் நிதி சேர் நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் கனடா உதயன் பிரதம ஆசிரியரோடும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
14வது வருடாந்த தமிழ் கனடிய நடைபயணம் செப்டம்பர் 11, 2022 அன்று ஸ்காபரோவில் உள்ள தொம்சன் ஞாபகார்த்த பூங்காவில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைப்பயணத்தின் மூலம் திரட்டப்பெற்ற நிதி, இலங்கை முழுவதும் உள்ள தெர்தெடுக்கப்பெற்ற 5 மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு பகிர்ந்தளிக்கப்படும். மெற்படி தெரிவு செய்யப்பட்டுள்ள 5 மருத்துவமனைகள் பின்வருமாறு;-
புற்றுநோய் வைத்தியசாலை – தெல்லிப்பளை
மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை – களுபோவில
மாவட்ட பொது வைத்தியசாலை – நுவரெலியா
Kalmunai General Hospital
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்-
புகைப்படங்கள்- கனடா உதயன்- ஈசி 24 நியுஸ் மற்றும் ஐயா4 யு