(15-09-2022)
இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு, வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் 51 வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டத் தொடரின் இறுதி தீர்மான அறிக்கையில், இலங்கையின் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண பிரதிநிதி காயத்திரி குமரனிடம் நேரடியாக இந்த மனுவை கையளித்துள்ளனர்.
மக்கள் பணிமனை தவிசாளரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான சுபியான் மௌலவி மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இணைந்து குறித்த மனுவை நேற்று(14) கையளித்துள்ளனர்.
இதேவேளை, மனுவை பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் மூலம் குறித்த மனுவை உடனடியாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.