எமது யாழ் செய்தியாளர்
மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
`தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் கருத்து மோதல்கள் எழுந்துள்ள நிலையிலேயே அந்த அமைப்பின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது. திலீபனின் நினைவேந்தலை ஒரு பொதுக் கட்டமைப்பின் மூலம் அவரது நினைவுத்தூபி உள்ள இடத்தில் முன்னெடுக்கலாம் என்று யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், உன்னதமான அந்த நிகழ்வை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று சர்வ சமைய அமைப்புகளை உள்ளடக்கிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சி செய்யும் தரப்புக்கள் அரசாங்கத்தின் முகவரான ஈ.பி.டி.பியின் தயவில் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அப்படியானவர்களிடம் நினைவேந்தல்களைக் கையளிக்கும் வரலாற்றுத் தவறினை நாம் ஒருபோதும் செய்யப்போவதில்லை.என்று தெரிவித்துள்ளனர்.
”ஆரம்பம் முதலே தியாக தீபத்தின் நினைவேந்தலைத் திட்டமிட்டுக் குழப்பி, எம்மீது சேறு பூசல்களைச் செய்ய முயலும் முகவர் அமைப்புக்களே, நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்னும் போர்வையில் தியாக தீபத்தின் நினைவேந்தலைத் தொடர்ச்சியாகக் குழப்ப முற்படுகிறார்கள். இத்தகைய கபட நோக்கத்துடன் உருவாக்கப்படும் ‘பொதுக் கட்டமைப்பு’ என்னும் சதிமுயற்சிக்கு நாம் துணைபோகமாட்டோம்” என்று அக்கட்சியின் ஊடக அறிக்கை கூறியுள்ளது.
எனினும். நல்லை ஆதீனத்தின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தையடுத்து தியாகதீபம் திலீபனை நினைவேந்தலைச் சிறப்பாக முன்னெடுக்க, மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
இப்படியான சூழலில், திலீபனின் நினைவேந்தலை இதயசுத்தியுடன், உளப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டுமென்றும், அதற்கு அரசியல் சாயம் பூசி அதன் புனிதத்ன்மையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம் என்று பி 2 பி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
”தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன். இவ்வாறாக தியாகத்தின் சிகரமான திலீபன் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமான 15.09.2022 அன்றும் அதற்கு முன்பாக நடைபெற்ற ஒழுங்குபடுத்தல் நிகழ்வுகளின் போதும் இடம்பெற்ற கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலை, தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. தியாகி திலீபன் அறப்போரினை நடத்தி ஆகுதியான நல்லூர் மண்ணிலேயே இச்சம்பவங்கள் நடைபெற்றது மிக வேதனை அளிப்பதாக உள்ளது. அளவிட முடியாத தியாகத்தினை எவருமே தமது வாக்கு அரசியலுக்கு பயன்படுத்துவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் நினைவு நிகழ்வின் போது ஒரு மாவீரரின் தந்தையும், தியாகி திலீபன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட இருந்தவரும், நீண்ட நெடிய போராட்ட வரலாற்றைக் கொண்ட மூத்த போராளியுமான ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் ஒரு மாவீரரின் வணக்க நிகழ்வில் இன்னொரு மூத்த போராளியை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பி 2 பி அமைப்பினரின் அறிக்கை கூறியுள்ளனர்.
”இராசையா பார்த்திபன் இன்னமும் பசியுடனேயே இருக்கின்றான். 35 வருடங்கள் கடந்தும் தியாகி திலீபன் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், எமது உரிமைகளை இழந்து, எமது நிலங்கள் எங்கள் எதிரியினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளோம். தமிழினமே ஓரணியாக அணிதிரண்டு போராடவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே அனைவரும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்த்து, அனைவரும் நினைவெழுச்சி நிகழ்வுகளின் புனிதத்தைக் களங்கப்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நினைவெழுச்சி நிகழ்வுகள் எந்தவொரு அரசியல் கட்சியினதும் தனியுரிமை சொத்தல்ல. இந்நிகழ்வுகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களின் முன்னெடுப்பில் நடைபெறுவதாகவே அமைய வேண்டும்”.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வுகள், அதற்கான பொதுக்கட்டமைப்பு என்பன கட்சி அரசியலைக் கடந்து பொது சமூகமாகிய மாவீரர்களின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் அடங்கியவர்களின் முன்னெடுப்பிலேயே கட்டமைக்கப்படவேண்டும் என்றும் பி 2 பி அமைப்பினர் கோரியுள்ளனர்.
“இவ்விடயத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ளும் களமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என அனைத்துத்தரப்பினரிடமும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்”.
`தியாக தீபம்` தீலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சி அரசியலாக்கப்படுகிறதா என்பது தொடர்பில் உதயனில் திலீபனின் தியாகத்திலும் அரசியல் ஆதாயம் தேடப்படுகிறதா? என்ற கட்டுரை கடந்த வாரம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.