இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையில், தமிழர்களின் நிலங்கள் தொல்லியல் பூமி அல்லது பிரதேசம் என்ற போர்வையில் வலிந்து நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு போராட்டத்தை ஏற்பாடு செய்த குமுளமுனை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் ரட்ணராஜா மயூரன் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இன்று (21) புதன்கிழமை மாலை பொலிசாரால கைது செய்யப்பட்டனர்.
குருந்தூர் மலைப்பகுதியில் 619 ஏக்கர் நிலத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயலும் செயல்பாட்டிற்கு எதிராக இன்று கவணஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த போராட்டங்களை முன்னின்று ஏற்பாடு செய்த ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோர் மாலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தாங்கள் இருவரும் நாளை (22) காலை நீதிமன்றில் நிறுத்தப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிடம் தெரிவித்தார் என்று ரவிகரன் கனடா உதயனிடம் தெரிவித்தார்.
தொல்லியல் திணைக்களத்தின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கலகமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் பெரிய பௌத்த விகாரை ஒன்று வேகமாக கட்டப்பட்டு வருகிறது. அங்கு தமிழர்கள் யாரும் செல்ல முடியாதபடி இராணுவம் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்டுமானத்திற்கு தேவையானவையும், பௌத்த குருமாரும், இராணுவத்தினரும் சென்றுவர முடிகிறது.
இலங்கையிலேயே ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இராணுவப் பிரசன்னம் மிகவும் அதிகமாக உள்ளது.