யாப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை ஐ நா மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வழிபாட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது மனித உரிமை மீறல் செயலாகும் என்று ஐ நாவின் மனித உரிமைகள் பேராயம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
தற்போது இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் பேராயத்தில் விவாதம் நடைபெற்றுவரும் வேளையில், இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களின் தனிப்பட்ட காணிகளும், பாரம்பரிய நிலங்களும் அபகரிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இம்மாதம் 12 ஆம் திகதி ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் 51 ஆவது அமர்வில், தலைமைப் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றிருந்த துணை ஆணையர் நாடா அல் நஷீஃப் அம்மையார், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று கூறினார். மேலும் மக்களிடமிருந்து வலிந்து கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் தொல்லியல் காரணங்களை மேற்கோள் காட்டி நிலங்கள் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அப்படி வலியுறுத்தப்பட்டும், தமிழர்கள் பாரம்பரிய பூமி பறிபோவது தொடர்வதற்கு இந்துக்களின் புனித பிரதேசங்களில் ஒன்றான குருந்தூர்மலைப் பகுதி அண்மைக் காலத்தில் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இப்போது முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலைப் பகுதியில் இந்துக்களின் நிலத்தையும் அங்குள்ள ஆதிசிவன் அய்யனார் கோவிலையும் பாதுகாக்க போராடியவர்கள் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுவது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் மீறி, சாந்திபோத தேரர் என்ற பிக்கு ஒருவரின் தலைமையில் அங்கு விகாரை கட்டும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக போராடிய தமிழர்கள் இன்று அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலைப் பகுதியில் இடம்பெறும் அத்துமீறிய நில அபகரிப்பிற்கு எதிராக 2022-09-21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது. இதனை முன்னெடுத்த பலர் இலக்கு வைத்து தற்போது கைது செய்யப்படுகின்றனர்.
இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு ஒழுங்கமைத்த இரத்தினராஜா மயூரன், அதிக பங்களிப்பு செய்த துரைராசா ரவிகரன் போராட்டத்தில் முனைப்பில் ஈடுபட்ட கனகரட்ணம் சுகாஸ் எனப் பலரும் தற்போதுவரை இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் இடம்பெறுமா என்ற அச்சமும் நிலவுகிற்து.
முல்லைத்தீவு நீதிமன்றில் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 612 ஏக்கர் காணியை பிக்குகளுக்கும் விகாரைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் துறை சார்ந்த அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இருந்தபோதும் காணி அளவீடு தொடர்பில் அமைச்சர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் நீதிமன்ற தடையினையும் மீறி பிரம்மாண்டமான விகாரை அமைக்கப்பட்டு முடிவுறும் நிலைக்கு கொண்டு வருவதற்கு இராணுவம் தமிழர்களை அப்பகுதிக்கு செல்லவிடாது தடுத்ததே முக்கியக் காரணம் என்று அப்பகுதி நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக 632 ஏக்கர் நிலம் குருந்தூர்மலை பௌத்த பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட முனைப்புகள் இடம்பெறுகின்றது. இவற்றிற்கு எதிராகவே போராட்டம் நடாத்த தண்ணிமுறிப்பு கிராம பொது அமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டது . இதன்போது குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.மயூரன் மற்றும் தண்ணிமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கலைச்செல்வன், தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் ச.சசிகுமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர்.
இதில் குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இ.மயூரன் கனடா உதயனிடம் கருத்து தெரிவிக்கையில், “1953 ஆம் ஆண்டு டி.டிஸ்.சேனநாயக்க காலத்தில் புனரமைக்கப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நெற்செய்கை காணிகள் வழங்கப்பட்டு 70 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரைக்கும் காணிகள் வன வளத் திணைக்களத்தினால் விடுவிப்பு செய்யப்பட்டு விவசாய காணிகளாக பதிவுகள் எங்கும் இல்லை இதன் அடுத்த கட்டமாக 1932 ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களத்தினால் நில அளவை செய்யப்பட்ட வரைபடத்தில் குருந்தூர்மலை தொல்லியல் இடம் என்ற பெயரில்தான் வரைபடம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுகள் ஆவணங்கள் எல்லாம் திரிபு படுத்தப்பட்டு விகாரை தொல்லியல் இடம் என்ற பெயரில் இன்று படம் வெளியிடப்பட்டுள்ளது தமிழர்களின் உயிர்நாடியான திருகோணமலை திரியாய், வெலிஓயா என்ற சொல்லப்படுகின்ற எமது மணலாற்று பகுதியிலும் இதே நடவடிக்கையினைத்தான் செய்துள்ளார்கள்” என்றார்.
இன்று 632 ஏக்கர் நிலத்தினை தொல்லியல் திணைக்களத்திற்குரிய நிலமாக இரவோடு இரவாக யாருடைய அனுமதியும் இன்றி அதாவது பிரதேச செயலம், மாவட்ட செயலகமோ விவசாய திணைக்களத்தின் அனுமதிஇன்றி ஒரு ஞாயிற்றுக்கிழமை கடந்த 11 ஆம் திகதி அதிகாலை வேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை தொல்லியல் திணைக்களம் செய்துள்ளது.
நாட்டில் இன்று அரிசி இல்லை,மாவு இல்லை கஞ்சி குடிக்கும் நிலையில் மக்கள் இருக்கும் போது 632 ஏக்கர் நிலத்தில் அரசாங்கம் செய்யப்போகின்றது என்ற கேள்வியும் தமிழர் தரப்பில் எழுப்பப்படுகிறது
நாட்டில் பொருளாதாரம் நலிவுற்று மக்களுக்கு எந்த விதமான விமோசனும் இல்லாத நிலையில் நாலு லீற்றர் பெற்றோலுடன் நாம் அலைகின்றோம் இந்த நிலையில் 632 ஏக்கர் காணி பிக்குமார்களுக்கு எதற்கு? இது வெளிப்படையான நில ஆக்கிரமிப்பும் இனசமத்துவத்தினை அழிக்கும் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாதிடுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிக்குமார்களுக்கு எவ்வித கவலையும் இல்லையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
”நீதிமன்ற கட்டளைகளையினை கூட புறந்தள்ளுகின்றார்கள் ஒரு காவி உடை தரித்த தேரரால் மாவட்ட நீதிமன்ற கட்டளையினை புறம்தள்ளி தொடர்ச்சியாக இராணுவத்தினை வைத்து கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியும் என்றால் நீதி எங்கே இருக்கின்றது”.
இதனை சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக கருத்தில் எடுப்பதுடன் எமது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதுடன் சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டு வருவதற்கான தார்மீகமான வேலையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மயூரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பாறையில் பட்டிப்பளை ஆற்றில் தொடங்கி இன்று முல்லைத்தீவு மாவட்டம் தாண்டிய நிலையில் இருக்கின்றோம் முல்லைத்தீவில் குள ஆக்கிரமிப்பு நிறைவடைந்து விட்டது . வெகுவிரைவில் வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் வலிகாமத்திலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் அப்போதாவது தமிழ் தலைமைகள் விளித்தெழுகின்றனவா என்பதை சிறிது காலம் பொறுத்திருந்தால் விளங்கிக்கொள்ளமுடியம் என்றும் அவர் கூறினார்.
நில ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்தினால் சுயாதீனமாக தான்தோன்றித்தனமாக அடையாளம் இடப்பட்ட 632 ஏக்கர் எல்லைக்கற்கள் இருக்கின்றன அந்த எல்லைக்கற்களை அளந்து வரைபடமாக வெளியிடுவதற்கு நில அளவைத்திணைக்களத்தின் நில அளவையாளர்கள் வருகை தருவார்கள் அந்த நேரத்தில் இருந்து தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பமாகவும் எமது இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உள்ளங்களும் திரண்டு வந்து எமது வாழ்வியலையும் எமது நிலத்தினையும் பாதுகாக்க நடடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கலைச்செல்வன் கருத்து தெரிவிக்கையில், ”1984 ஆம் ஆண்டு தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இதுவரைக்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலகத்திலும் மாவட்ட செயலத்திலும் முறையிட்டும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கற்களை நடுவதற்கு காரணம் இவர்கள்தான் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை எங்கள் மக்களுக்கான காணியினை வழங்குங்கள் என்று கோரியிருந்தோம் எதுவும் செய்து தரப்படவில்லை குருந்தூர்மலைக்கு செல்லும் முதலாவது காணி எங்களின் காணி இன்று எங்கள் காணியில் தென்னம்பிள்ளை,கிணறு என்பன இருக்கின்றதோடு பழை கட்டடங்கள் என்பனவும் இருக்கின்றது”.
மக்கள் வாழ்கின்ற குடியிருப்பு இடமான தண்ணிமுறிப்பு 51 ஆம் ஆண்டு கண்டோம். இந்த இடத்திலும் தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டி காணியினை அபகரித்துள்ளார்கள் என்று கூறிய கலைச்செல்வன் அதோபோல் குருந்தூர் குளத்தினையும் குளத்தின் கீழ் உள்ள தனியார் வயல் காணிகளையும் அபகரித்து தொல்பொருள் திணைக்களம் கல்லு நாட்டியுள்ளது. இதனை யாரிடம் சொல்வது, அதிகாரம் மிக்க அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
நேற்றைய (21) ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் யாழில் இருந்து சென்ற பலரும் பங்குகொண்டனர்.
இவ்வாறெல்லாம் இடம்பெறும் ஆராஜக செயலிற்கு வெறுமனே ஒரு நாள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நில அபகரிப்பை தடுத்து விட முடியுமா என்ற கேள்வியும் ஒரு தரப்பால் எழுப்பப்படுகிறது. அதேவேளை இடம்பெறவிருந்த நில அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
வலிந்த நில அபக்ரிப்பு என்பதற்கு அப்பாற்பட்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி பிக்கு ஒருவரால் ஒரு விகாரையை தமிழர்கள் நிலப்பரப்பில் கட்ட முடியுமென்றால் இலங்கையில் பௌத்தர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டமா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.