சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுகின்றார்
பொராட்டக்காரர்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட கோத்தாபாய மாத்திரமல்ல ஒட்டு மொத்த ராஜபக்ச குடும்பமுமே நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்த மோசடி அரசியல்வாதிகளே. இவர்களுள் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரே மோசமான கொள்ளைக்காரர்கள். இவற்றை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டும் வகையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“தேர்தல் நடத்தினால்,மட்டும் இந்தஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முடியாது போராட்டத்தின் மூலம் மட்டுமே ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்தி ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும். எதிர்காலத்தில் முழு நாடும் போராட்டத்தில் குதித்த வேண்டும். .நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளால் தான் தற்பொழுது நாடு மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
போராட்டம் என்ற வார்த்தையை நீக்கி விட்டு, நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் எழுச்சி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை என்றால், அரசாங்கம் ஒன்று இருந்து என்ன பயன்.
கீழ் மட்டத்திற்கு சென்ற மக்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால், போராட்டங்கள் நடப்பதை நிறுத்த முடியாது.
அதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவை என்பது நாட்டு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய மிகப் பெரிய பங்களிப்பை செய்த நிறுவனம். அரசாங்கங்கள் மாறினாலும் இந்த நிறுவனம் நாட்டிற்கு நன்மையை செய்ததை விட தீமையையே செய்தது.
வருடத்திற்கு 6 ஆயிரத்து 500 கோடி நஷ்டத்தில் இயங்கும் காலமும் இருந்தது. 5 ஆயிரத்து 500 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்கிய காலமும் இருந்தது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்தவை உலகில் ஒழுக்கமான செயல்கள் நடக்கும் நாடுகளிலும் நடந்ததில்லை.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக அன்றைய ஜனாதிபதியின் மைத்துனர் கடமையாற்றினார். மனைவியின் சகோதரர். அந்த காலத்தில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுவனத்தின் தலைவரது சம்பளம் 50 லட்சம் ரூபா.
அடுத்ததாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு தலைவர் ஒருவரை நியமித்தது அவரது சம்பளம் 100 லட்சம் ரூபா.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணிப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் இராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
ஓய்வுபெற்ற அவருக்கு வேறு தகுதிகள் எதுவும் இருக்கவில்லை. ஓய்வூதியம் 15 ஆயிரம் ரூபா. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவர்களை அழைத்து அவர்களின் சம்பளம் , கொடுப்பனவுகள் பற்றி விசாரித்தோம்.
அப்போது அந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வீரனை போல் கைகளை கட்டிக்கொண்டு, நான் நிறுவனத்தில் சம்பளத்தை பெறுவதில்லை எனக் கூறினார். நீங்கள் பணிப்பாளர் எப்படி சம்பளத்தை பெறாமல் வேலை செய்கிறீர்கள் என்று நான் கேட்டேன்.
இல்லை நான் கொடுப்பனவை மாத்திரம் பெறுகிறேன் என்றார். கொடுப்பனவு எவ்வளவு என்று கேட்டபோது 30 லட்சம் ரூபாய’ என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரை தனது அலுலகத்தில் பணிக்கு அமர்த்தி இருந்தார். அவர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் சம்பளத்தையும் விமான கொடுப்பனவுகளை பெற்றார்.
எனினும் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்தில் ஊழியராக பணிப்புரிந்தார். 2010 -2015 அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனக்கு பயன்படுத்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்றில் விசேட மல கூடம் அமைக்க 6 பில்லியன் ரூபா பணம் ஒதுக்கினார்.
600 கோடி ரூபா. மலகூடத்தில் தங்கம், வைரம் பதிக்கப்பட்டிருக்குமோ தெரியாது. அவற்றை நாங்கள் இரத்துச் செய்தோம். அத்துடன் எயர் பஸ் விமானங்களை கொள்வனவு செய்ய கபில சந்திரசேன என்ற ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி 20 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றார்.
அந்த இலஞ்ச பணம் யாருடைய வங்கிக் கணக்குக்கு சென்றது என்ற தகவலும் வெளியாகியது. நாமல் ராஜபக்சவின் வங்கிக்கணக்கிற்கும் அந்த பணம் சென்றமை சாட்சியங்களுடன் ஒப்புவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு கேடாக அமைந்தது. அரசியல் தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் அவற்றின் ஊடாக மக்களின் பணத்தை கொள்ளையிட்டனர் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.