சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் மூலம் பல நாடுகளில் அரசியல்வாதிகள், ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களின் உறவினர்கள், தொழிலதிபர்கள், குற்றக்குழ்க்கள் போன்ற பல்தரப்பினர் எப்படி அரச பணத்தை கையாடல் செய்து, அதை பல நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகின்றனர் என்று அம்பலப்படுத்தியது.
அப்படி நாட்டு மக்களை ஏமாற்றி, வரி ஏய்ப்புச் செய்து, கையூட்டின் மூலம் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை கள்ளமாக பதுக்கி வைத்து வேறு வழியில் முதலீடு செய்வதற்காக சட்டரீதியாக வழிகளைக் கொண்டுள்ள கரிபீயன் தீவு நாடுகள், மொரிஷீயஸ், ஐக்கிய அரபு அமீரகம், மால்டா, மொனாக்கோ போன்ற பல்வேறு நாடுகளில் பல வழிகளில் முதலீடு செய்யப்படுவதை ஐ சி ஐ ஜே (சர்வதேச புலன் விசாரணை செய்தியாளர் கூட்டமைப்பு) அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டு மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணம் மாட மாளிகைகள், சொகுசு படகுகள், தனி விமானங்கள், உல்லாச விடுதிகள், மிகவும் விலையுயர்ந்த ஓவியங்கள் உட்பட கலைப்பொருட்கள், தங்கக் கட்டிகள், பெரும் மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்கள் போன்றவைகளில் முதலீடு செய்யப்படுகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அண்மைய நிலவரத்தை கேட்டு, வெளிப்படைத்தன்மைக்காக சர்வதேச அமைப்பு (Transparency International) அந்தந்த நாடுகளிலுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அவ்வகையில் பண்டோரா ஆவணங்களில் அம்பலப்படுத்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் அத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட்வர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அந்த அமைப்பு இலங்கை அரசுக்கும் எழுதி விளக்கம் கேட்டது.
“பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் மற்றும் முன்னாள் அரச அதிகாரி ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 2 முறைப்பாடுகளை அண்மையில் தாக்கல் செய்தது.” மேலும் குறித்த நபர்களின் சொத்துப் பிரகடனங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைத்துப் பரிசோதித்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா சமீபத்திய கடிதத்தில் கோரியுள்ளது.
சொத்துக்கள் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லையா என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல் இன்றியமையாதது என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மேலும் கூறுகிறது.
ஆனால் இலங்கை அரச தரப்பு இதுவரை அந்த கேள்விக்கு பதிலளித்ததாகத் தெரியவில்லை. பொதுவெளியில் இருக்கும் ஒரு விடயம் தொடர்பில் கேட்க்கப்படும் ஒரு கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பது குறிப்பிட்ட ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதற்கு சான்றாகவே உள்ளது என்பதாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
ஆணைக்குழுவின் தோல்வி
கடந்த வருடம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறவினர் மற்றும் அவரது கணவர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றவில்லை.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரின் உறவினருமான நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களை மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் பயன்படுத்தினர் என்று பண்டோரா பேப்பர்ஸில் வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டதோடு, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக அப்போது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அந்த அறிவித்தலுக்குப் பின்னர் திருக்குமார் நடேசன் இரண்டு முறையாவது ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு ஒரு மாதத்தின் பின்னர், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நவம்பர் 8, 2021 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
பின்னர், இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இறுதி அறிக்கைக்கான திகதியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்றும் அப்போது குறிப்பிடப்பட்டது.
“திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு அறிக்கைகள் தற்போது கிடைத்து வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார். விசாரணைகள் நிறைவடையாததால், அறிக்கைகள் மற்றும் ஏனைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கை வழங்கப்படும் என அப்போது மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் 2021 ஆரம்பத்தில் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார் ஒரு கோடியே 20 ஆயிரத்திற்கும் அதிக ஆவணங்களின் தரவுத்தளமானது வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால் (International Consortium of Investigative Journalists) வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசகராக இருந்த பிரித்தானிய குடியிருப்பாளர் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், நவம்பர் 2021 தொடக்கத்தில் ICIJ ஆல் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.
மாலபேயில் உள்ள HCBT எனப்படும் Horizon College of Business Technology தனியார் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்வதற்கும் பிரிட்டனில் சொத்துக்களை வாங்குவதற்கும் அவர் பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் அவர் நிறுவிய அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் பில்லியன் கணக்கான டொலர்களைப் பயன்படுத்தியதாக பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தின.
பாஸ்கரலிங்கம் 2008 ஆம் ஆண்டு எந்த அரசாங்க பதவியையும் வகிக்காமல், “தனது சொந்த செல்வத்தைப் பயன்படுத்தி” கல்லூரியை நிறுவியதாக, HCBT தலைவர் உபுல் தரனாகம ICIJ இடம் தெரிவித்தார்.
ராமலிங்கம் பாஸ்கரலிங்கம் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என ICIJ தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசகர் பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் தொடர்பில் பண்டோரா பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.
பண்டோரா பேப்பர்ஸ் ராஜபக்சக்களின் சகோதரி நிருபமா மற்றும் அவரது கணவர் மற்றும் பாஸ்கரலிங்கம் ஆகியோர் மீது ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டுக்களை ஐ சி ஐ ஜே சுமத்தியிருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அரசு அதைப் புறந்துள்ளுவது மேலும் நிதி மோசடிகள் இடம்பெறவும், ஊழலை செய்துவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும் என்கிற எண்ணத் தோற்றத்தை ஏற்படுத்தும் என்று செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
117 நாடுகளைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 90 அரச தலைவர்கள், உலகின் பணக்காரர்கள் மற்றும் அதிகாரப் படைத்தவர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளனர். நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட செல்வத்தை மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளமை அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல நாடுகளில் மோசடி வழிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டிற்கு மீண்டு கொண்டு வந்து அது பொதுமக்களிடம் சேர்த்து நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தபட வேண்டுமென்று பன்னாட்டு வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் இலங்கையிலிருந்து ஊழல் நடவடிக்கை மூலம் சேர்க்கப்பட்ட பெருந்தொகையான பணத்தை முறையான விசாரணைகள் மூலம் நாட்டுக்கு கொண்டவர முடியுமானால், அது பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு பேருதவியாக இருக்கும்.
ஆனால் அது செய்யப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி?