முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகினர்.
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
நேற்றையதினம்(21) கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் இருவருக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140, பிரிவு 146 பிரிவு 147 மற்றும் பிரிவு 344 கீழ் பி (B)அறிக்கை ஒன்றினை மன்றில் தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிரேஸ்ட சட்டதரணிகளான அன்ரன் புனிதநாயகம் , கெங்காதரன் , பரஞ்சோதி உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் மன்றில் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதாவது ஏற்கனவே நீதிமன்றம் ஆக்கிய கட்டளையை மீறி குறித்த பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானம் நடைபெற்று வந்ததன் காரணத்தாலேயே இவர்கள் அங்கு சென்று ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
பொலிஸார் இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்யவேண்டி உள்ளதாகவும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணத்தினாலேயே இவர்களை கைது செய்ததாக மன்றில் தெரிவித்தனர். இந்த நிலையில் சட்டதரணிகளின் வாதங்களை அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா ஆட் பிணையில் செல்ல அனுமதித்ததோடு அடுத்த வழக்கானது 2023 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது
ஜெகதீஸ்வரன் டிஷாந்த்