-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.23:
இலண்டன் பிபிசி தமிழோசையில் மண்டல செய்தியாளர்களாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் சார்பில் சதீஷ் பார்த்திபன் என்னும் செய்தியாளர் அவ்வப்பொழுது செய்தி வெளியிட்டு வருகிறார்.
மலேசியாவில் நிகழும் முக்கியமான அரசியல்-சமூக நிகழ்வுகள் குறித்த தகவலை சுடச்சுட பிபிசி தமிழோசையில் வெளியிட்டுவரும் சதீஷ் பார்த்திபனின் சாமர்த்தியத்தைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். இருந்தாலும், தான் சார்ந்திருக்கும் ஆரிய வட்டத்தையும் தினமலர்தனத்தையும் சதீஷ் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்.
பிபிசி தமிழோசை நிருவாகம், அமர்த்தியுள்ள மண்டல செய்தியாளர்களின் பட்டியலைப் பார்த்தால், தமிழீழ செய்தியாளர்களைத் தவிர மற்ற அனைவரும் தமிழ் இனம்-மொழி சார்ந்த தமிழியம் என்னும் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட-வர்களாகவும் பார்ப்பனிய-ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு வெண்சாமரம் வீசுபவர்களுமாகத்தான் இருக்கின்றனர்.
இவர்களைக் கொண்டு, தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் எதிரான செய்திகளை பழத்தில் ஊசியை செறுகுவதைப் போல மிக நுட்பமாக பிபிசி தமிழோசை நிருவாகம் அவ்வப்பொழுது செய்து வருகிறது.
குமரிக் கண்டம் என்பது வெறும் நம்பிக்கைதான் என்றும் அதற்கு அறிவியல்பூர்வமான ஆதரம் இல்லை என்றும் மிகவும் சிரமப்பட்டு ஒரு செய்திக் கட்டுரையை அண்மையில் பிபிசி தமிழோசை வெளியிட்டது.
2021 பிப்ரவரி 11-இல் விக்னேஷ். அ என்பவரின் பெயரில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பின் பற்பல செய்திகள் வெளிவந்தன. தமிழக அரசியல் குறித்த செய்திகளில் அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் ஆளுமையைப் புகழ்ந்து தகவல் இடம்பெறும் அதேவேளை, திமுக மற்றும் கலைஞர் மு.கருணாநிதி-மு.க.ஸ்டாலின் குறித்த செய்திகளில் ஒருவித ‘இருட்டடிப்பு அல்லது தாழ்த்துதல்’ என்னும் அம்சம் நுட்பமான முறையில் இழையோடி இருக்கும்.
இப்பொழுது, தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தியில், மலேசிய திராவிடர்க் கழகத்தை இருட்டடிப்பு செய்தும், ஒருவிதத்தில் மறைமுகமாக இகழ்ச்சிப்படுத்தும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்படிப்பட்ட செய்தியாளர்களாகப் பார்த்துதான் பிபிசி தமிழோசை நிருவாகம் பணியில் அமர்த்துகிறதோ என்னும் ஐயம் அவ்வப்பொழுது எழுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-இல்,
பெரியார் பிறந்த நாள்:
ஈ.வெ.ராவின் தாக்கம் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களிடம் இருக்கிறதா?
-ஓர் அலசல்
என்னும் பெயரில் சதீஷ் பார்த்திபன் எழுதிய செய்திக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
மலேசியாவில் சுயமரியாதைப் பாதையில் பயணிக்கும் சமூக இயக்கமான மலேசிய திராவிடர்க் கழகத்தைப் பற்றி நேரடியாக ஒரேயொரு வாக்கியத்தைக் கூட சதீஷ் பார்த்திபன் குறிப்பிடவில்லை. மலேசியத் திராவிடர்க் கழகம்தான் இந்த நாட்டில் தோன்றிய முதல் மூத்த சமூக இயக்கம். பல கட்டங்களைக் கடந்துதான் இந்த இயக்கம் இந்த நிலையை எட்டியது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகுந்த எழுச்சியுடன் விளங்கிய இந்த இயக்கம், மலேசிய நாடாளுமன்ற மேலவையில்(செனட் சபை) ஓர் உறுப்பினர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு வலுவுடன் திகழ்ந்தது; பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, ஆண்-பெண் சமத்துவம், மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணம் உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து சொல்லி அடித்து முன்னேறிய இந்த இயக்கத்தின் அன்றைய செம்மாந்த நிலை, இன்று சரிந்து கிடக்கிறது என்பது உண்மைதான்.
விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லாமல், தலைமைப் பதவிக்காக என்றைக்கு நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறியதோ, அன்றைக்கே மலேசியத் திராவிடர்க் கழகத்தின் சரிவு தொடங்கியது.
இந்தப் பகுத்தறிவு இயக்கம் இப்பொழுது, மலேசியத் திராவிடர்க் கழகம், மாந்தநேய திராவிடர்க் கழகம், பெரியார் பாசறை என்றெல்லாம் முக்கூறு-களாக பிளவுபட்டிருக்கிறது. இடையில், 2015-இல் மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற பெயரில் திராவிட வாசம் இல்லாமல் தனியாக ஓரமைப்பு உருவானது.
பிளவுபட்ட மலேசியத் திராவிடர்க் கழகத்திற்கு பி.எஸ்.மணியம் தலைவராக இருந்த காலக்கட்டம். கருத்து வேறுபாடு முற்றி, அதிலிருந்து பிரிந்தவர்கள் நாக.பஞ்சு தலைமையில் மாந்தநேய திராவிடர்க் கழகத்தை உருவாக்கி இருந்தனர்.
2014-ஆம் ஆண்டின் நிறைவுக்கட்டம். ஒரு திருமணத்தை நடத்தி வைக்கவும் தொடர்ந்து ஒரு கொள்கை முழக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர் அருள்மொழியை நாக.பஞ்சு அழைத்திருந்தார்.
இதை அறிந்த பி.எஸ். மணியம், உடனே சென்னை பெரியார் திடலுடன் தொடர்புகொண்டு கி.வீரமணியிடம் புகார் செய்தார். மலேசியாவில் நாங்கள்-தான் அதிகாரப்பூர்வ திராவிட இயக்கம். இதிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நிகழ்ச்சியில் எப்படி அருள்மொழி கலந்துகொள்ள முடியும்? எங்களுக்குத் தெரிவிக்காமல் அவர் எப்படி இங்கு வந்தார் என்று அடுக்கடுக்கான கேள்வி-களைத் தொடுத்த பி.எஸ்.மணியத்திற்கு பதில்சொல்லவும் சமாளிக்கவும் முடியாத வீரமணி, உடனே அருள்மொழியுடன் தொடர்புகொண்டு, உடனே கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பும்படி ஆணையிட்டார்.
பி.எஸ். மணியம் ஏற்பாடு செய்யும் மேடையாக இருந்தாலும் நாக.பஞ்சு ஏற்பாடு செய்யும் கூட்டமாக இருந்தாலும் அருள்மொழி பேச இருப்பது என்னவோ பெரியாரைப் பற்றித்தான்; சுயமரியாதை சிந்தனையைத்தான்.
இந்தப் புரிதல்கூட இல்லாத சுயமரியாதை உணர்வாளர்கள்தான், தமிழகம், இந்த மலையகம் உள்ளிட்ட உலகெங்கும் பரவி-விரவி இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், இன்றைய மலேசிய திராவிடர் இயக்கம், இளைத்து-களைத்து சவலைப் பிள்ளையாக இருப்பது என்னவோ உண்மைதான்.
கருஞ்சட்டையினர்க் கூட்டம் என்றால் அரங்கமே திமிரும் நிலை அன்றைய மலாயாவில் இருந்து புதிய மலேசியாவரை நீடித்தது; இன்றைக்கு அந்நிலை இல்லை; தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழாக் கூட்டம் மலேசிய திராவிடர்க் கழக தேசிய தலைமையக ஏற்பாட்டில் கடந்த 17-ஆம் நாள் கோலாலம்பூர், சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்றபொழுது அதில் கலந்து கொண்டவர்கள் வெறும் 40 பேர்தான்.
இந்நிகழ்ச்சிக்காக, பினாங்கிலிருந்து வந்த தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை, தன்னுடைய உரையில் ஆதங்கத்தைதான் வெளிப்படுத்த முடிந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டவர், தமிழக திராவிடர்க் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்.
இன்னும் இரு தினங்களில், மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழாவில் சிறப்புரை ஆற்ற இருப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
இதற்கிடையில், மதிக பினாங்கு மாநிலக் கிளை சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில், துரை. சந்திரசேகரனார் பேருவகைக் கொள்ளும் அளவுக்கு பெருங்கூட்டத்தைத் திரட்டி இருந்தார் டத்தோ ச.த. அண்ணாமலை.
இவ்வாறாக, மலேசியாவில் தந்தை பெரியார்வழி நடக்கும் சுயமரியாதைக் கொள்கையினர், இயக்க ரீதியாக சிறுத்திருந்தாலும் கொள்கை ரீதியாக எழுச்சியுடன்தான் திகழ்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், மலேசியாவில் தந்தை பெரியாரின் வருகையைப் பற்றியும் அதனால் சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் எழுச்சி பெற்றதையும் சொல்லவந்த பிபிசி தமிழோசை, மலேசிய திராவிடர்க் கழகத்தைப் பற்றி ஓரிடத்தில்கூட குறிப்பிடவில்லை.
இந்த இயக்கத்தை வழிநடத்தும் முத்தரப்பினரைப் பற்றியோ, அல்லது அவர்களின் கருத்தைப் பெற்றோ செய்தி வெளியிடாமல், இந்த நாட்டின் மூத்த சமூக இயக்கமான மலேசியத் திராவிடர்க கழகத்தையும் மாந்தநேய திராவிடர்க் கழகத்தையும் அப்பட்டமாக இருட்டடிப்பு செய்துள்ள பிபிசி தமிழோசை, அண்மைக் காலமாக ஆரிய-பார்ப்பனியத்துக்கு வெண்சாமரம் விசும் தன் கோணல் புத்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது.
60 ஆண்டுகளாக தலைமைப்பதவி சண்டையில் மூழ்கிக் கிடக்கிறது என்று மலேசியத் திராவிடர்க் கழகத்தை சிறுமைப்படுத்துவதற்காக மட்டும் மூன்று முறை இந்த இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ள பிபிசி தமிழோசை, இந்த இயக்கங்களின் இன்றையத் தலைவர்களைப் பற்றியோ அல்லது அன்றைய பொறுப்பாளர்கள் குறித்தோ ஒன்றும் குறிப்பிடவில்லை.
இந்தியாவில், பார்ப்பன-ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கமும் கொள்கையும் கொண்ட பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழோசையின் போக்கும் மாறிவிட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்க்காவின் சமயப் பற்றைப்பற்றி குறிப்பிட்டுள்ள பிபிசி, சாமி இல்லை யென்ற பெரியாரின் கொள்கை ஆன்மிக பூமியான மலேசியாவிற்கு பொருத்தமில்லை என்று மொட்டையாகக் குறிப்பிட்டுள்ளது.
சாதியை வரையறுக்கும் நான்கு வேதங்களுக்கு மதம்தான் புகலிடம்; அந்த மதத்திற்கு கடவுளே கட்டியம் கூறுவதால்தான், அப்படிப்பட்ட கடவுள் வேண்டாம் என்றார் பெரியார். சாமி சிலையை செய்கிறவனே அந்த சாமி சிலையைத் தொட்டு வணங்கு முடியாத அளவுக்கு சாதிபேதத்தைக் கட்டியெழுப்பியது பார்ப்பனியம்; அந்த பார்ப்பனியத்தை கட்டிக்காப்பது கடவுள் என்பதால்தான் கடவுள் தேவையில்லை; இல்லவும் இல்லை என்றார்; அவரின் மாந்தநேய சிந்தனையையும் மலேசியத் திராவிடர்க் கழகப் பொறுப்பாளர்களையும் மறைக்க முயன்றுள்ளது பிபிசி..
2015-இல் உருவான தமிழர் தன்மான இயக்கத் தலைவர், தமிழ்ப் புத்திலக்கியப் படைப்பாளி ஒருவர், தமிழ் மலர் நாளேட்டின் நிருவாகியும் பக்தி நெறியாளருமான ஒருவர், ஓர் ஆசிரியர் ஆகியோருன் கருத்தைக் கேட்ட பிபிசி தமிழோசை, அசல் திராவிட இயக்கத்தின் நிகழ்காலப் பொறுப்பாளர்களில் ஒருவரைக்கூட நாடவில்லை.
தந்தைப் பெரியாரைப் பற்றி குறிப்பிடும்பொழுதெல்லாம், ஈ.வெ.ராமசாமி பெரியார், ஈ.வெ.ரா. பெரியார் என்று குறிப்பிட்டு தன் அக்கிரகாரப் புத்தியை, சோ.ராமசாமி பாணியில் வெளிப்படுத்தியுள்ள பிபிசி தமிழோசையின் சாயம் வெளுக்கும் காலம் தூரமில்லை.
சதீஷ் பார்த்திபன் போன்றோரின் துக்ளக்தனமும் குருமூர்த்திகுணமும் காலத்திற்கும் நீடிக்க முடியாது.