(24-09-2022)
கடந்த காலங்களில் பகிரங்கமாக கொல்லப்பட்ட பல தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களுக்கு எதிரான கொலை, பயங்கரவாத தடைச்சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.
சிங்கள மக்களின் உரிமை,பண்பாட்டு அம்சங்கள் பாதுகாக்கப்படுவதை போன்று தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல வின் மறைவு மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு மீதான ஒத்திவைக்கப்பட்ட அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிக்கு உயரிய சபையில் தமிழ் மக்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மோசமான முறையில் கொல்லப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மனித குலத்துக்கு எதிரான வகையில் அவர் கொல்லப்பட்டார்.
இலங்கையில் இது புதியதொரு விடயமல்லாத போதும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கிருஷாந்தி படுகொலை செய்யப்பட்டமை,செம்மணி படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன.இருப்பினும் இதற்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் பகிரங்கமாக கொல்லப்பட்டார்.ஜோஷப் பராராசசிங்கம்,சிவநேசன்,ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.ஆனால் இதுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை.பயங்கரவாத தடைச்சட்டம்,கொலைகள் தற்போது சிங்கள மக்கள் மீது திரும்பியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் அவரது உடல் கூட கிடைக்கவில்லை.இராணுவ ஆய்வாளரும்,எழுத்தாளருமான தராகி சிவராமனின் உடல் பாராளுமன்ற பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதுவரை இவர்களுக்கு நியாயம் கிடைக்கப்பெறவில்லை.பத்திரிகையாளர் நடேசன்,பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டார்கள்.பொருளியலாளரான தம்மையா பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுகோரள வின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
உயிரை பாதுகாத்துக் கொல்ல ஒருவர் ஓடும் போது அவர்களை துரத்தி கொலை செய்வது மனிதாபிமானமல்ல,மிருகத்தனமானவர்களினால் அவ்வாறு செயற்பட முடியும்.
இந்த மண்ணிலும் அவ்வாறான மிருகதனமானவர்கள் உள்ளார்கள்.1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பல தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.மலையக மக்களும் கொலை செய்யப்பட்ட வரலாறும் உண்டு.
இந்த நாட்டில் மீண்டும் இவ்வாறான சூழல் ஏற்பட கூடாது.தமிழ்,சிங்கள மக்கள் தங்களின் பிரதேசத்தில் அவரவர் கலாசார பண்பாட்டுடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.சிங்கள மக்களின் உரிமைகள் பேணப்படுவதை போன்று தமிழ் மக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்றார்.