தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தில் விதைகளைப் பெற்ற விவசாயிகள் அறுவடையின் பின்னர் விதைகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீள வழங்கும் மாண்புறு உழவர் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (24.09.2022) நவக்கிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது விதைகளை மீளக்கையளித்த விவசாயிகள் மாண்புறு உழவர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்கள் தற்போது வழக்கொழிந்து வருகின்றன. சிறுதானியங்கள் வறண்ட நிலத்துக்குப் பொருத்தமான அதிக கவனிப்புத் தேவையில்லாத போசாக்கு நிறைந்த பயிர்களாகும். நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருக்கும் உணவுப்பற்றாக்குறைவைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களை மீள மூடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் இராசதானியத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இராசதானியத் திட்டத்தில் விதைகளைப் பெறும் விவசாயிகள் அறுவடையின் பின்னர் பெற்றுக்கொண்ட விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீளக் கையளிக்கவேண்டும் என்ற உடன்பாட்டுடன் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விதைகளைப் பெற்று ஆர்வத்தோடு சிறுதானியச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அறுவடையை முடித்த ஒரு தொகுதி விவசாயிகளே தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனிடம் விதைகளைக் கையளித்துள்ளனர்.
நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே. அரசகேசரி கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின், நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் குரக்கன் கஞ்சி வழங்கி உபசரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.