மன்னார் நிருபர்
(26-09-2022)
தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை(26) மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் இன விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரதம் இருந்து இதே நாளில் உயிர் நீத்தார் தியாக தீபம் திலீபன்.அவருடைய தியாகத்தை மதித்து உளப்பூர்வமான அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் செயலாளரும் நகரசபையின் உப தவிசாளரான ஜான்சன் பிகிராடோ தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
அஞ்சலி நிகழ்வின் பிரதான ஈகைச் சுடரினை முன்னாள் போராளி ஒருவர் ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.
அதனை தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் அணிதிரண்டு உணர்வு ரீதியாக மலரஞ்சலி களை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.