பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழங்கிவரும் பசுமை அமைதி விருதுகளுக்கான இந்த ஆண்டுக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்த அறிக்கையில்,
காலநிலை மாற்றங்களும் கொரோனாப் பெருங்கொள்ளை நோயும் இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழிவோம் என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்துள்ளன. இயற்கையை நாம் மென்மேலும் சூறையாடினால் பெரும் பிரளயத்துக்குள் உலகம் தள்ளப்படும் என்று ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி இயற்கைச் சூழலை நாம் அபிவிருத்தியின் பெயராலும் உலகமயமாக்கலின் பெயராலும் தொடர்ந்து சூறையாடி வருகிறோம்.
இந்தச் சூறையாடலை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கும் சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவருக்கும் பசுமை அமைதி விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகின்றது.
மாணவர்களிடையே இந்த ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை இணையவழியூடாக 16.10.2022 காலை 6.00 மணி தொடங்கி 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் இலங்கையை வதிவிடமாகக் கொண்ட மாணவர்கள் எவரும் தோற்ற முடியும். தோற்ற விரும்பும் மாணவர்கள் www.tamilnationalgreen.org இணையத்தளத்தின் ஊடாக 05.10.2022 இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இப்பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். இவர்களிலிருந்து முதல் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதிச் சான்றிதளோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். இவர்களில் முதல் 3 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ், சிறப்புப் பரிசுகளுடன் சூழலியல் ஆசான் க. சி. குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். முதலாம் இடத்தைப் பெறும் மாணவர் 1 பவுண் தங்கப் பசுமை அமைதி விருதும், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர் வெள்ளிப் பசுமை அமைதி விருதும், மூன்றாம் இடத்தைப் பெறும் மாணவர் வெண்கலப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்.
சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் நேயச் செயற்பாடுகளில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக உழைத்து வரும் தனிநபர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பரிந்துரையில் தெரிவு செய்யப்பட்டு சிறந்த சூழற்செயற்பாட்டாளருக்கான தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்த பசுமை அமைதி விருதும் ஒரு இலட்சம் ரூபா பொற்கிளியும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார். இந்த ஆண்டுக்கான சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவரைப் பரிந்துரை செய்ய விரும்புபவர்கள் அவர் பற்றிய விபரங்களைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், இல. 109, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது greentamils5@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 31.10.2022 இற்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.