எட்டயபுரம் என்ற எழில்மிகு ஊரில்
எளிமைவாழ் சின்னச் சாமிஐயர்
லட்சுமி அம்மாவென லட்டான தாய்க்கும்
லட்சிய மகனாகப் பிறந்தார்
கட்டுக் கோப்புடன் கல்வி கற்றே!
கானம் பலவகை ஆக்கினார்
எட்டுத் திக்கும் இசைத்த பாடலால்
ஏற்றம் பெற்றது பாரதமே!
பாரதி என்னும் பெயரைப் பெற்றான்
பாரதம் என்ற தேசத்தில்
பாரினில் மக்கள் பண்புடன் வாழ்ந்திட
பாடல்கள் ஆயிரம் பாடினான்
தேச விடுதலை தோன்ற என்றே
தேசிய கீதங்கள் ஆக்கினார்
மாசற்ற வீர மறவனின் வாழ்வை
மாண்புடன் நாமும் வாழ்த்துவோமே!
அச்சமில்லை தொடங்கி அந்திப் பொழுதும்
அக்கினிக் குஞ்சையும் ஆக்கினார்
துச்சாதனன் சபையில் திரௌபதியைப் பாடலாக்கி
துட்ட செயலெனச் சுட்டினார்
வண்டிக் காரன்பா விடுதலைக் காதலுடன்
விதுரனைத் தூது விட்டாரே!
கண்ணன் என்காதலன் கதையைச் சொல்லி
கண்ணம்மா என்காதலி என்றாரே!
பாப்பாப் பாட்டும் பாஞ்சாலி சபதமும்
புதுமைப் பெண்ணையும் காட்டினார்
சாப்பாட்டுப் பஞ்சத்தைச் சந்தித்த போதும்
சலிக்காமல் கவிதைகள் ஆக்கினார்
பாட்டுக் கொருபுலவன் பாரதி என்பார்
பாரதி தாசனின் குருவென்பர்
பாட்டால் பாரத தேசத்தை எழச்செய்த
பாரதியார் புகழைப் பாடுவோமே!
ஆக்கம் …. கவிஞர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.