(30-09-2022)
தற்போதைய நெருக்கடி நிலையில், இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்பு களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவை வெளிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையின் போது சீனாவினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், எதிர்காலத்திலும் அவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கடன் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ள நிலையில், இந்த நகர்வுகளில் மிக முக்கியமான இருதரப்பு கடன் வழங்குநர்களின் ஒத்துழைப்புகள் அவசியம் என்பது குறித்தும், இந்த விடயத்தில் இலங்கை மக்களை கருத்தில் கொண்டு சீனாவின் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், சீனாவின் வாழ்வாதார உதவிகள் மற்றும் பொதுவான நலன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். இலங்கையின் நெருக்கடி நிலைமைகளில் சீனா எப்போதுமே இலங்கைக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் எனவும், சீனா எப்போதுமே இலங்கைக்கு நல்ல நண்பன் எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.