(மன்னார் நிருபர்)
(30-09-2022)
மன்னார் மாவட்டத்தில் சமூக ரீதியாக உள்ள பிரச்சினைகளை முன்னிருத்தி விழுது அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை பொது வெளியில் வெளிப்படுத்தும் இளையோரின் சமூக ஆய்வுகளை பகிரும் வட்ட மேசை கலந்துரையாடல் விழுது அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் ஜெப நாதன் டலீமா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஒரு மாத கால இடைவெளியில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் வைபவ ரீதியாக விருந்தினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதியை மையப்படுத்தி இடம் பெற்று வரும் சட்டவிரோத மணல் ஆய்வு மற்றும் அகழ்வு தொடர்பான ஆய்வு, முசலி பிரதேச செயலக பிரிவை மையப்படுத்தி பாடசாலை மாணவர்களின் கல்வி இடைவிலகல் தொடர்பான ஆய்வு, பேசாலை கடற்பரப்பை முன்னிறுத்தி இடம் பெற்றுவரும் சட்டவிரோத இந்திய மீனவர்களின் டோலர் மீன்பிடி காரணமாக பேசாலை மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆய்வு மற்றும் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தமக்கான சேவையை பெற்றுக் கொள்வதில் உள்ள சவால்கள் ஆகியவை தொடர்பாக முடிவுகள் இன்றைய தினம் இளைஞர்களால் பகிரப்பட்டது.
குறித்த நிகழ்வில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், நகரசபை உறுப்பினர், முசலி கோட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்,மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மாவட்ட சிவில் சமூக நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.