(உதயனின் சிறப்புக் கள ஆய்வுக் கட்டுரை)
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
”ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1.5 மில்லியன் மக்கள் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். அதேவேளை 20 முதல் 50 மில்லியன் மக்கள் வரை சாலை விபத்துக்களில் உயிரிழக்கவில்லை என்றாலும், அந்த விபத்துக் காரணமாக நிரந்தர அங்கவீனர்கள் ஆகின்றனர்” உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
சாலை விபத்துக்களின் காரணமாக, தனிப்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அது ஒரு தேசத்திற்கே கணிசமான அளவிற்குப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த இழப்புகள் மருத்துவ செலவினங்கள் உயிரிழந்தவர்கள் அல்லது அங்கவீனமாக்கப்பட்டவர்களின் மூலம் கிடைக்கப்பெறும் மனித உழைப்பின் மூலமான உற்பத்தி ஆகியவையும், குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்காக பணியிடம் அல்லது பாடசாலை ஆகியவற்றிலிருந்து எடுக்கும் விடுப்பு ஆகியவையும் பாரதூரமான இழப்புகளை ஏற்படுத்துகிறது என்று அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. சாலை விபத்துக்கள் காரணமாக பெரும்பாலான நாடுகளிற்கு தமது தேசிய மொத்த உற்பத்தியில் குறைந்தது 3% அளவிற்கு வீழ்ச்சி ஏற்படுகிறது.
சாலை விபத்துக்களைப் பொருத்தவரை அதில் 90% உயிரிழப்புகள் குறைந்த மற்றும் மத்திய வருவாய் நாடுகளிலிளேயே ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக உயிழப்புகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஆப்ரிக்காவிலும் குறைந்தபட்சம் ஐரோப்பாவிலும் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
5-29 வயதுடைய சிறார்கள் மற்றும் இளவயதினரிடையே உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துக்கள் முக்கிய காரணிகளாக உள்ளன. உலகளவில் நடைபெற்ற ஆய்வுகளில் இதற்கு அடிப்படையாக சில காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவது அதை அளிப்பதற்கான நடைமுறைகளிலுள்ள ஓட்டைகள் மற்றும் அதனால் ஏற்படும் ஊழல்கள், குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் சட்டரீதியாகவுள்ள சிக்கல்கள், பொதுப் போக்குவரத்திலுள்ள பிரச்சனைகள் காரணமாக வளர்முக நாடுகளில் அளவிற்கு அதிகமாக அதிகரித்துள்ள இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சாலையின் இருபுறமும் நடைபாதைகள் இல்லாதது, அப்படி இருந்தாலும் அது முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் மிகவும் முக்கியமாக ஆசியாவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சாரதி அனுமதி பத்திர ஊழல் மிகவும் அதிகமாகவுள்ளது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிகிறது.
உயிரிழப்புகளைப் பொருத்தவரை இளவயதில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக சாலை விபத்துக்களில் பலியகின்றனர். புள்ள்விவரப்படி பார்த்தால் சாலை விபத்துக்களில் சிக்குபவர்களில் 73% ஆண்கள், இது பெண்களைப் பார்க்க மூன்று மடங்கு அதிகம். இதற்கு உடலியல் ரீதியான காரணங்கள் முக்கியமானவை. இயற்கையான துணிச்சல், அந்த துணிச்சலால் ஏற்படும் சிந்தனையற்ற செயல் ஆகியவையே ஆண்கள் அதிகமாக சாலை விபத்துக்களில் சிக்க வழி செய்கிறது.
வீதி விபத்துக்களின் தரவுகளை காணும் போது ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் இலங்கையிலேயே இவை அதிகமாகவுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு இலங்கையில் நடைபெறும் 38,000 விபத்துக்களில் 3000 பேர் உயிரிழக்கின்றனர், 8000 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என்று உலக வங்கி கூறுகிறது. மேலும் கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70% அதிகளவு உயர்ந்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், வடக்கே யாழ்ப்பாணத்தில் நிலைமை என்ன என்கிற கள ஆய்வு மற்றும் தரவுகள் சேகரிப்பில் கனடா உதயன் ஈடுபட்டது.
யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் மாதம் ஒன்றிற்கு 5ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக வைத்தியசாலை தரவுகள் உறுதிசெய்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகள் இடம்பெற்ற விபத்துக்களின் காரணமாக 26 ஆயிரத்து 188 பேர் காயமடைந்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வாறு அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 2010 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான 12 ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த 28 ஆயிரத்து 188 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களிலேயே 623 பேர் மரணமடைந்தும் உள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் 2010ற்கு முந்திய 9 ஆண்டுகளான 2001 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 ஆயிரத்து 556 பேர் படுகாயமடைய 163பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபர தரவுகள் உறுதி செய்கின்றது.
இவற்றின் அடிப்படையில் முதல் 10 ஆண்டுகளினை விடவும் இரண்டாம் 10 ஆண்டில் காயமடைந்தோர் எண்ணிக்கை 250 விகித்த்தினை விட அதிகமாக காணப்படுகின்றது. அத்தோடு மரணம் அடைவோர் தொகை 280 விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு காணப்படும் வீதி விபத்து மரணங்களில் இறுதி இரண்டு ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டு 257 பேர் காயமடைந்து 46 பேர் மரணமடைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக அதிகரித்து ஆயிரத்து 604 பேர் காயமடைய 80 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் புள்ளிவிவரம் உறுதி செய்கின்றது.
அவ்வகையில் 2020 ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டு விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புக்கள் அதிகரித்தமைக்கான காரணம் என்ன என போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளரான மருத்துவர் யமுனானந்தாவைத் தொடர்பு கொண்டு கட்டுரை ஆசிரியர் கேட்டார்.
”வீதி விபத்துக்கள் அதிகரித்த வாகனங்கள் முதல் பல்வேறு காரணங்களால் இடம்பெற்ற போதும் உண்மையில் 2020ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டில் விபத்துக்கள் அதிகரிக்கவில்லை. மாறாக 2020ஆம் ஆண்டு விபத்துகள் குறைவடைந்தன என்பதே உணமையாகும். ஏனெனில் 2020 ஆம் ஆண்டு அதிகரித்த கொரோனா காரணமாக ஊரங்கு சட்டம் மற்றும் நடமாட்ட முடக்கம் நடைமுறையில் இருந்தமையினால் வாகனங்கள் பயணிக்கவில்லை” அதனால் விபத்துக்கள் ஏற்படவில்லை என்றார்.
இவை அனைத்தும் போரின் பின்பு அமைக்கப்பட்ட வேகப் பாதைகள் மற்றும் அதி நவீண ரக வாகனங்களின் அதிகரிப்போடு ஒவ்வொரு வீட்டிலும் இரண்டிற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பாவனையே முக்கிய காரணமாக இருப்பதோடு இன்று உத்தியோகத்தர்கள் அன்றி சாதரண தினக்கூலி பணியாளர்வரை மோட்டார் சைக்கில் பயணிக்க வேண்டியுள்ளது போன்றவைகளே காரணங்கள் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் வரி செலுத்தும் தரவுகளின் அடிப்படையில் இன்று 7 லட்சம் மக்கள் வாழும் சூழலில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 327 மோட்டார் சைக்கிள் உள்ளமை உறுதி செய்யப்படுகின்றது. இதேநேரம் முச்சக்கர வண்டிகள் 13 ஆயிரத்து 599 உள்ளதோடு 6 ஆயிரத்து 18 கார் மற்றும் சிறு வான்கள் உள்ளது.
இதேபோன்று ஏனைய வாகனங்கள் உட்பட குடாநாட்டில் மட்டும் இன்று பதிவு செய்யப்பட்டவையாக ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 344 வாகனங்கள் உள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
இதேநேரம் குடாநாட்டு வீதிகளில் பயணிக்கும் அதிக டிப்பர் வண்டிகள், பேருந்துகள் மற்றும் லீசிங்கில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் அந்த நிறுவனங்கள் உள்ள தெற்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதனால் இந்த எண்ணிக்கையில் உள் அடங்கவில்லை எனபதோடு குடாநாட்டில் உள்ள பல ஆயிரம் படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையில் உள்ள வாகனங்களும் வடக்கு மாகாணப் பதிவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த என்னதான் தீர்வு என மாவட்டத்தின் மூத்த பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
”25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான வாகனம் நின்ற காலத்தில் அமைத்த வீதிகள் இன்று 2 லட்சத்தையும் தாண்டிய வாகன நெரிசல் மற்றும் கனரக வாகன அதிகரிப்பு பிரதான காரணமாக உள்ளதனால் வீதிகள் அகலப்படுத்தப்பட்டால் மட்டுமே விபத்தினை குறைக்க முடியும் அல்லது ஒரு வழிப் பாதைகள் மூலமோ குறித்த வாகனத் தடை மூலம் மட்டுமே எதிர்காலத்தில் விபத்தினை தடுக்க முடியும்” என்றார்.
இதேநேரம் வீதிகளை அகலப்படுத்துவது என்பதும் தற்போதைக்கு சாத்தியமில்லை. அதாவது ஒரு பரப்பு காணி நகரில் லட்சத்தை தாண்டி கோடியை எட்டிவிட்டது. அதனால் மக்கள் நிலத்தை விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை. அதே நேரம் உணவுக்கும் மருந்துக்குமே காசு இல்லாத அரசும் நிலத்திற்கு பணம் வழங்க மாட்டாது என்றார்.
அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பிற்கு பொறுப்பான முகமைகளுக்கு போதியளவிற்கு அதிகாரங்களும் வளங்களும் அளிக்கப்பட வேண்டியது அத்தியாவசியாமனது. அதற்கும் வீதி விபத்துக்களிற்கும் நேரடியான தொடர்புகள் உள்ளன. உரிய அதிகாரங்களும் வளங்களும் இல்லாத நிலையில், வீதி விபத்துக்களை தடுக்க போதிய வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ள இயலாது.
சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை 50% அளவிற்கு இலங்கை குறைக்க வேண்டுமாயின் அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 2 பில்லியன் டொலர்கள் தேவைப்படும்.
ஆனால் நாடு இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இந்த 2 பில்லியன்களைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா என்றும் யாழ் குடாநாட்டில் இளைஞர்களிடையே அதியுயர் இரண்டு சக்கர வாகனங்களுக்கான மோகமும் குறையுமா என்பதே இப்போதுள்ள கேள்வி.