(உதயனின் சிறப்புக் கட்டுரை)
ஆபத்துக்கள் நிறைந்த துணிச்சலான தனது பயணம் பற்றி : யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
சீனாக்காரர்கள் அடிக்கடி கடற்படை உதவியுடன் வட கடல் பகுதிக்கு சென்று வருவது என்னை சற்று சிந்திக்க வைத்தது. உள்ளூர் கடற்தொழிலாளர்கள் கூட செல்ல அச்சப்படும் பருத்தித்தீவிற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற அவா நீண்ட நாட்களாகவே எனக்குள் இருந்தது. அப்படி அண்மையில் ஆபத்து நிறைந்தது என்று தெரிந்தும் ஒரு ஊடகவியலாளர் என்கிற முறையில் செய்தி சேகரிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக பருத்தித்தீவை நோக்கி சூரிய உதயத்தின் போது பயணத்தேன். இந்தப் பயணத்திற்கு ஒரு படகை ஒழுங்குபடுத்துவதில் இருந்த சிரமங்களே தனிக்கட்டுரையாகும்.
அந்தப் பயணம் மற்றும் நான் நேரில் அவதானித்தவை ஆகியவற்றை கனடா உதயன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடல் கடந்த தீவகப் பகுதியில் பலரும் அறிந்திராத தீவுகளில் ஒன்றான பருத்தித்தீவில் உள்ள கடலட்டைப் பண்ணைகள் சீனாவின் முதலீட்டிலேயே இயங்குவதாகவே நம்புகின்றோம் என தீவக மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு என்பன மக்கள் வாழும் கடல் கடந்த தீவுகளாக உள்ளன. இதேநேரம் கடல் கடந்து மக்கள் வாழாத தீவுகளில் ஒன்றுதான் பருத்தித்தீவு.
இந்த தீவானது எழுவைதீவு மற்றும் அனலைதீவு என்பனவற்றின் இடையே ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தை மட்டும் கொண்டுள்ள தீவாகவும். இந்த தீவை ஒட்டியே 10 ஏக்கரில் கடல் அட்டைப் பண்ணை அமைக்க 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரேயொருவர் அனுமதியைப் பெற்றார். இவ்வாறு பெற்ற அனுமதியும் 2021இல் காலவதியான நிலையில் தற்போது எவரது எந்த அனுமதியும் இன்றி மூவர் கடல் அட்டைப் பண்ணை நடாத்துவதாக அப்பகுதி மீனவ சங்கங்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடுவது என எண்ணி தனியான நேரடிப் பயணத்தை மேற்கொண்டோம்.
இதன் பிரகாரம் பருத்தித்தீவின் அருகே கடலில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டபோது குறைந்தது 40 ஏக்கர் பரப்பளவில் அந்த பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதை காணும் போது அதிர்ச்சி மேலிட்டது. அந்த பண்ணையில் பலர் நிற்கும் நிலையில் உள்ளூராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரும் இருப்பதும் தெளிவாகத் தெரிந்தது.
இவ்வாறு அந்தப் பண்ணையை நடாத்தும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கடற்றொழில் அமைச்சரின் கட்சியை சார்ந்த உறுப்பினராகவே உள்ளார். இதேநேரம் இந்த 40 ஏக்கரிற்கும் மேற்பட்ட பண்ணைகள் ஒரு திசையால் அனலைதீவு இறங்கு துறையை நெருங்குகின்றதோடு மறுபுறத்தில் பருத்தித்தீவு தேவாலாயத்தின் வருடாத்த உற்சவ காலத்தில் படகுகள் செல்லும் பாதையினையும் ஆக்கிரமிக்கின்றன.
இவை தொடர்பில் எழுவைதீவு மீனவர்கள் தெரிவிக்கையில் ”இன்று எமது தீவில் வாழும் மக்களின் 90 வீத தொழில் கடல் தொழில்தான். நாம் எழுவைதீவு கடலையும் இந்த பருத்தி தீவை அண்டிய கடலையும் நம்பியே வாழும் நிலைமையில் இறால் பண்ணைகள் மற்றும் பெரு நண்டுகள் அதிகம் காணப்படும் பிரதேசங்களை வெளிநாட்டு வருமானம் கிடைக்கும் என்னும் பெயரில் பிறருக்கு தாரை வார்க்கப்படுகின்றது” என்றார்
தனது கருத்துக்களை மேலும் பகிர்ந்துகொண்ட அவர் “உண்மையில் கடல் உணவுகளில் இறால் காலத்தில் இறாலும், பெரு நண்டு காலத்தில் பெரு நண்டினையும் எமது மீனவர்கள் பிடிப்பதன் மூலம் அந்தியச் செலவாணியையும் எம்மாலும் ஈட்ட முடியும். ஏனெனில் இன்று பெரு நண்டு ஒரு கிலோ 8 ஆயிரம் ரூபாவிற்கு எம்மிடம் கொள்வனவு செய்யப்படுகின்றது. அதேபோல் நல்ல இறால் 3 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆனாலும் எமக்கு எதுவும் மிஞ்சுவதில்லை” என்றார்.
இவ்வாறு இறாலும் பெரு நண்டும் இயற்கையாக பெருகக்கூடிய இடங்களை கடல் அட்டைப் பண்ணைகளிற்கு தாரை வார்த்துவிட்டு கடற்றொழில் அமைச்சானது இறால் வளர்ப்பிற்கு செயற்கையாக தரையில் பண்ணை அமைக்கின்றனர். இவ்வாறு இயற்கை மீன்பிடிகளை அழித்து செயற்கை பண்ணைகள் அதிகமாக அமைப்பதிலும் எமக்கு சந்தேகம் உள்ளது என அப்பகுதி மீனவர்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டனர்.
இதேநேரம் அனலைதீவு மீனவர் சங்க தலைவர் ஜோன் பொஸ்கோ (குட்டிமாமா) என்பவர் ”எம்மை அழிக்கும் இந்த கடல் அட்டைப் பண்ணைகள் இந்த இடத்தில் வேண்டாம் என என கடற்றொழில் திணைக்களம், பிரதேச செயலகம், நெக்டா ஆகியவற்றுடன் கடற்றொழில் அமைச்சர் வரைக்கும் நேரில் சென்று எமது ஆட்சேபனையை தெரிவித்து விட்டோம். இவ்வாறு ஆட்சேபனையை தெரிவித்துள்ள பண்ணையை அகற்றுமாறு கோரும் காலத்தில் 10 ஏக்கருக்கும் குறைந்த அளவு பண்ணையே காணப்பட்டது. இன்று அனுமன் வால் நீண்டதுபோல் கிலோ மீற்றர் கணக்கிற்கு நீண்டு விட்டது. இதனை யாரிடம் கேட்பது, யார் பார்ப்பது என்பதுகூடத் தெரியவில்லை. எமது சிறிய படகு தொழிலாளர்கள்கூட வெளியேற முடியாத அளவிற்கு பண்ணைகள் அண்மித்துவிட்டன” என்றார்.
பருத்தித்தீவை அண்டிய கடல்ப் பகுதியில் மிகப் பெரும் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைகளிற்கு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளதா என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளரான திருமதி மஞ்சுளாவை கேட்டேன்.
”2018ஆம் ஆண்டு முதல் ஒரு நிறுவனம் விண்ணப்பித்த போதும் அங்கே எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என உள்ளூர் மீனவ அமைப்புக்கள் தெரிவித்தமைக்கு அமைய எம்மால் இதுவரை எந்த ஒரு தனியாளிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ ஒரு இடத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.
அதேவேளை கடல் அட்டைப் பண்ணைக்கான அனுமதி ஏதும் வழங்கப்பட்டதா என தேசிய நீர்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின்ன் வடக்கு மாகாணப் பிரதிப் பணிப்பாளர் நிருபராஜை தொடர்பு கொண்டு கேட்டேன்.
”ஒரு நிறுவனத்திற்கு மட்டும் பரீட்சார்த்தமாக 2020ஆம் ஆண்டு ஒரு வருட நிபந்தனையில் 10 ஏக்கருக்கு வழங்கப்பட்டபோதும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் புதுப்பித்த அனுமதி ஏதும் எம்மால் வழங்கப்படவில்லை” என்றார்.
ஆனால் பருத்தித்தீவில் 40 ஏக்கர் அளவிற்கு கடல் அட்டைப் பண்ணை எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு பதிலேதும் யாரிடமும் இல்லை.
இவ்வாறு மீனவர்களும் திணைக்களங்களும் கை விரிக்கும் கடல் அட்டைப் பண்ணை தொடர்பில் வடக்கு மாகாண மீனவ அமைப்பு என்ற வகையில் விபரம் ஏதும் தெரியுமா இது தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்ப கொண்டீர்களா என்று வட மாகாண மீனவர்கள் சங்கங்களின் தலைவரில் ஒருவரான அ.அன்ராசவிடம் வினவினேன்.
” இது தொடர்பில் உள்ளூர் மீனவ அமைப்புக்களை நேரடியாக அழைத்துச் சென்று உரிய தரப்புக்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அந்த உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகளிற்கு எங்குமே செவிசாய்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் தற்போது ஊடகவியலாளர்களை நேரடியாகவே தொடர்புகொள்கின்றனர். இதேநேரம் அவற்றை தடுக்க வேண்டிய தரப்புக்களின் ஓர் பிரதிநிதியே அங்கே பண்ணையில் நேரடியாக நிற்பதும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது” என்றார்.
இவற்றின் அடிப்படையில் பருத்தித்தீவில் உள்ள கடலட்டைப் பண்ணைகள் சீனாவின் முதலீட்டிலேயே இயங்குவதாகவே நம்புகின்றோம் என தீவக மீனவ அமைப்புக்கள் குற்றம் சாட்டுவதனை ஆராய்ந்த தினத்தில் யாழ் நகரில் இருந்து ஊர்காவற்றுறை வரையில் காரில் பயணித்து வழமையான பயணிகள் சேவை படகில் சீனர் ஒருவர் எழுவைதீவிற்கு பயணிக்க எழுவைதீவில் இருந்து பதிவு செய்யப்படாத படகு ஒன்றின் மூலம் பருத்தித்தீவு கடல் அட்டைப் பண்ணைக்கு இம்மாதம் 2ஆம் திகதி காலையில் சென்று மாலையில் யாழ் நகரிற்கு திரும்பியுள்ளார்.
கடலோர பாதுகாப்புத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் விஷ்ணுவை பல முறை தொடர்பு கொண்டு கேட்டபோதும் ஆவணங்களை சோதித்து பதில் கூறுவதாக தெரிவிக்கப்பட்டதே அன்றி உரிய பதில் அளிக்கவில்லை.
பருத்தித்தீவு இவ்வாறெனில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 760 மக்கள் வாழும் எழுவைதீவின் நிலையும் மிக மோசமாகவே காணப்படுகின்றது. 90 வீதம் கடலை மட்டுமே வாழும் அந்த மக்களில் மிகவும் மூத்த மீனவரைத் தேடினோம். ”60 வருடங்களாக கடல் தொழில் அனுபவத்தில் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி போன்று யுத்த காலங்களில்கூட அவலத்தைச் சந்திக்கவில்லை” என எழுவைதீவைச் சேர்ந்த கடற்றொழிலாளி யேசுதாஸ் எமக்குத் தெரிவித்தார்.
யேசுதாஸிடம் மேலும் பேச்சுக் கொடுத்தேன். அதன்போது ”எனக்கு தற்போது 76 வயது நடக்கின்றது நான் 16 வயதில் கடலில் இறங்கியவன் தற்போது 3 வருடமாக நான் நேரடியாக கடலிற்கு செல்லாது விட்டாலும் வலை தெரிவு, சரிபார்த்தல், படகுகரை உள்ளிட்ட உதவித் தொழிலை பிள்ளைகளுடன் இணைந்து மேற்கொளகின்றேன்”.
தற்போது மண்ணெண்ணை கிழமைக்கு 30 முதல் 40 லீற்றர் கிடைக்கின்றது. உண்மையில் இந்தக் காலம் நண்டுத் தொழில் காலம். நண்டுக்கு சென்று வர இரு நாளிற்கே இந்த எரிபொருள் போதுமானது. எரிபொருளின் விலையும் 380 ரூபாவாக இருந்தபோதும் அந்த விலைக்கும் தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை என்று தொடர்ந்து விளக்கினார் யேசுதாஸ்.
இரண்டு தொழிலாளி பயணிக்க வேண்டும், 20 லீற்றர் எண்ணை வேண்டும், இயந்திரம், படகு ஆகியவற்றுடன் முக்கியமாக பல லட்சம் பெறுமதியான வலை என்பவற்றை பாவித்தே 40 கிலோவிற்கு உட்பட்ட நண்டைப் பெற முடியும். அவ்வாறு பெறும் நண்டு கடந்த வாரம் வரையில் ஒரு கிலோ எம்மிடம் 2 ஆயிரத்து 700 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் இன்று 2 ஆயிரம் ரூபாவிற்கே கொள்வனவு செய்கின்றனர். இதேநேரம் இந்த விலை ஆயிரத்து 900ஆக குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டு விட்டது என்றும் யேசுதாஸ் ஆதங்கப்பட்டார்.
”1974 ஆம் ஆண்டு சிறிமாவின் இறக்குமதிக் காலமோ அல்லது 1983 ஆம் ஆண்டு இனக் கலவர காலமாகட்டும் 1990 ஆம் ஆண்டு, 2006ஆம் ஆண்டு யுத்த காலங்களில் தொழிலிற்கே செல்லாத காலத்தில்கூட நாம் இவ்வாறான நெருக்கடியை சந்திக்கவில்லை”.
இன்று நாட்டில் ஒரு கிலோ கோதுமை மாவு 430 ரூபாவாகவும், 400 கிராம் கொண்ட ஒரு அங்கர் பால்மா பக்கேற் ஆயிரந்து 200 ரூபாவிற்கும் விற்பனையாகின்றது. எம்மால் இவற்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவை உற்பத்தியாளனின் விலை. ஆனால் மீனவன் பிடிக்கும் கடல் உற்பத்திக்கான விலைகள் மட்டும் ஏற்றுமதி செய்யும் முதலாளி தீர்மானிப்பதே விலையாகவுள்ளது. இதேநேரம் தீவகத்தில் வசிக்கும் எமக்கு எந்த நன்மையோ தீமையோ ஏற்பாட்டால் அதற்கு பயணிக்கவும் இந்த எரிபொருளே தேவையான நிலைமையில் நாம் இங்கே வாழ பெரும் நெருக்கடியை சந்திக்கின்றோம் என்றார்.
இவற்றையெல்லாம் ஆவணமாக்கியவாறு மாலை 6 மணிக்கு மீண்டும் ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்தேன்.