மன்னார் நிருபர்
07.10.2022
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(07) மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
அதே நேரம் பாடசாலை ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டு சத்தியபிரமாணம் மேற்கொள்ளப்பட்டது
அதனை தொடர்ந்து மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 2022 ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் 2021 ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாக உறுப்பினர்களான அரசகோன் அகிலன் மற்றும் சுப்பிரமணியம் மைக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதே நேரம் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வின் இறுதியில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப் பட்டதுடன் 2021 ஆண்டு மாணவர் தலைவர்களாக சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது