(உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை)
யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 தமிழ்க் கிராமங்களை வெலிஓயாவுடன் இணைத்து சிங்கள மயப்படுத்த இரகசியத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அதற்கான ஆவணங்களை கனடா உதயன் கண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் சட்டப்படியாக அன்றி வெறும் சுற்று நிரூபத்தினால் மட்டுமே நிர்வகிக்கப்படும் 114.4 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவான வெலிஓயா என தற்போது அரசினால் அழைக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலமான மணலாறு உள்ளிட்ட பகுதிகள் `மகாவலி எல் வலயம்` என மகாவலி அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது.
இதற்கு எதிராக நீண்ட காலமாகவே தமிழர் தரப்பு குரல்கொடுத்த நிலையில் தற்போதைய கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளையும் வெலிஓயாவுடன் சேர்க்க 2018 ஆம் ஆண்டு இரகசிய திட்டம் வகுக்கப்பட்டபோது நல்லாட்சி அரசிற்கு எதிராக கூட்டமைப்பு குரல் கொடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டிலும் இரகசிய முயற்சி இடம்பெற்றபோதும் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன் பின்பு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ரணில் அரசில் தற்போது மிகவும் இரகசியமாக நகர்த்தப்படுகின்றது என்பது கனடா உதயனின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இதற்காக அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றித் தருமாறு 2022-09-26 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் ரணசிங்க அமைச்சரவை அலுவலகத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.
ரொசான் ரணசிங்கவினால் இரகசியமாக அனுப்பப்பட்ட கடிதத்திற்கு IR/2022/40 என அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கமிட்டு அது அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரம் நிறைவேற்றப்பட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குளாய் முதல் நாயாறு வரையுள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக வெலிஓயா என்னும் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்படும். இவ்வாறு இணைக்கப்படும் கிராமங்களின் கீழ் பாரம்பரியமாக தமிழர்களுக்குச் சொந்தமான 6 ஆயிரம் ஹெக்டேர் நிலம் அதாவது 15 ஆயிரம் ஏக்கர் விழுங்கப்படும்.
இவ்வாறு விழுங்க முயற்சிக்கப்படும் பிரதேசத்தில் 901 தமிழ் குடும்பங்களும், 269 சிங்களக் குடும்பங்களும் ஒரு முஸ்லீம் குடும்பமும் உள்ளதாக அமைச்சின் அமைச்சரவை அறிவித்தலில் அறிக்கையிடப்பட்ட போதும் இங்கே வாழும் சிங்கள குடும்பங்களில் அதிகமானவை கடற்தொழில் செய்வதற்கான அனுமதியின் பெயரில் தங்கி வாழ்பவர்கள் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தமது பூர்வீக நிலமான கொக்குளாய் கிழக்கு, கொக்குளாய் மேற்கு, கருநாட்டக்கேணி, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு ஆகியவற்றுடன் செம்மலை ஆகிய கிராமங்கள் பறிபோவதுடன் வளம் மிக்க பிரதேசங்களையும் இழக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவை தொடர்பில் கருத்துரைத்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், “1983ஆம் ஆண்டிற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 38 குடும்பங்கள் தொழில் புரிந்த நிலையில் இன்று 269 குடும்பங்கள் இருக்கின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஜே.ஆர் மேற்கொண்ட நரித்தனத்தினால் அமைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலையே தற்போது வெலிஒயா என எமது இதய பூமியை விழுங்கி நிற்கின்றது. இந்தச் சிறைச்சாலையில் கொண்டு வந்து இருத்தியவர்கள் ஆரம்பத்தில் கைதிகளேயாகும். அதாவது தமிழர்களையும் சிங்களவர்களையும் மோதவிடுவதற்கு என்றே திட்டமிட்டு உரிவாக்கிய குடியேற்றத்திட்டம்தான் இது” என்று வரலாற்று ரீதியாக விளக்கினார்.
தற்போது வெலிஓயா பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் தொகை 9 ஆயிரம் பேராக பல்கிப் பெருகி நிற்கின்றதனால் அவர்களிற்கு 114 சதுர கிலோ மீற்றர் போதவில்லை. இதறகாக காணி விழுங்கும் அமைச்சுக்களில் ஒன்றான மகாவலி அதிகார சபையின் திருட்டுத்தனமான வர்த்தமானி மூலம் நிலம் பிடித்து அந்த சிங்க மக்களைக் குளிர்விக்க முயற்சிக்கப்படுகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
”இலங்கையில் மகாவலி அதிகார சபை என ஓர் ஆக்கிரமிப்புச் சபை உருவாக்கப்பட்டது முதல் தமிழர்களின் தாயகத்தை விழுங்கி சிங்கவர்களிற்கு தாரை வார்த்தனரே அன்றி ஒரு தமிழனிற்கு இன்றுவரை ஒரு காணி அனுமதிப்பத்திரம் வழங்கியது கிடையாது. இதறகு பெயரா அபிவிருத்தி” எனவும் துரைராசா ரவிகரன் வினவினார்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கனடா உதயனிடம் கருத்து தெரிவிக்கையில், ”இந்த விடயம் ஏற்கனவே பல தடவை தடுக்கப்பட்டதனால் இம்முறை திருட்டுத்தனமாக நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு 6 தமிழ்க் கிராமங்களையும் கபளீகரம் செய்து வெலிஓயா பெருப்பிக்கப்பட்டதும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்படும். அதன் பின்பு அங்கே வாழும் தமிழ் மக்களின் அனைத்து உரிமையும் மறுக்கப்படும்போது அவர்களை அங்கிருந்தும் புலம்பெயர வைக்க முடியும் என அரசு கருதுகின்றது” என்றார்
இந்த சூழலையே ரணில் அரசும் இன்று ஏற்படுத்த முனைகின்றது. இதற்கு அரசோடு ஒட்டி நிற்கும் குழுக்களும் உடந்தையாக செயல்பட்டு தமிழின அழிப்பிற்குத் துணை போகின்றனர் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
இதற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சகல வழிகளிலும் போராடும் எனத் தெரிவித்த அவர், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்களை அழைத்துக் கதைத்தபோது, தான் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நிபந்தனையாகவே தெரிவித்ததாகவும் `அதாவது முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபை பிடித்து வர்த்தமானி அறிவித்தல் விட்டுள்ள பகுதிகளில் குடியேற்றம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனையவை அனைத்தும் விடுவிக்க வேண்டும்` எனச் சுட்டிக்காட்டியதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அந்த அமைச்சின் செயலாளரிடம் இருந்து விபரங்களைப் பெற்று பரிசீலித்து கூறுவதாக தெரிவித்த நிலையில் இதனை தமிழர் தரப்பு அனுமதிக்கவே முடியாது என்றார்.