எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் அந்த இடத்தில் இன்று நினைவு கூரப்பட்டனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து நடைமுறைப்படுத்தும் நோக்கில், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் பெருமளவிலான இந்திய இராணுவத்தினர் இறக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை குறித்த புரிதல் இல்லாதவர்களாக இருந்தார்கள்.
எனவே `அமைதியைக் காக்க` என்று வந்த இந்தியப் படைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசலும் மனக்கசப்பும் ஏற்பட்டன. எந்த தமிழர்களை காப்பாற்றவென்று வந்த இந்தியப் படை, அவர்களுடனேயே மோதும் சூழலும் ஏற்பட்டது. போராளிக் குழுக்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது இந்தியப் படைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்று தொடர்ச்சியான குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. தமிழர்கள் எங்கு கூடி நின்றாலும் அவர்களை ஆயுததாரிகளாகவோ போராளிக் குழுக்களிற்கு ஆதாரவளிப்பவர்களாகவோ இந்தியப் படைகளால் பார்க்கப்பட்டனர் அந்தக் காலத்தில் அவற்றை நேரில் கூறுகின்றனர்.
அவ்வகையில் பிரம்படியில் இடம்பெற்ற படுகொலைகள் எக்காலத்திற்கும் இரத்தக்கரைப் படிந்தவை. தமிழர்கள் மனதில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்திருப்பவை.
1987-10-12 அன்று பிரம்படியில் இந்திய இராணுவத்தினர் யுத்த டாங்கிளால் சுட்டும் டாங்கிகளை ஏற்றியும் படுகொலை செய்த 52 அப்பாவிப் பொது மக்களின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் இவர்கள் ஞாபகார்த்தமாக தூபி அமைக்கப்பட்ட இடத்தில் இன்று காலை (12 அக்டோபர்) அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள், கிராம மக்கள் ஆகியோருடன் அந்த துயரச் சம்பவத்தை கண்ணுற்றவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதோடு உயிர் நீத்த உறவுகளின் நினைவாக சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
இதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை நினைவு கூற முட்டி மோதிய அரசியல் கட்சிகளோ அல்லது ஏற்பாட்டாளர்களோ எவருமே இங்கே பிரசன்னமாகவில்லை என்பது தொடர்பில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.