முன்னாள் ஊடகவியலாளரான இவர் தற்போது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.
இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்த படியால் தற்போது நீதி மன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார்
திரு தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணத்தில் 1985 யூன் 02 திகதி பிறந்தார். இவரின் பாடசாலைக் கல்விக் காலம் என்பது யுத்த இடம்பெயர்வுகள மிகுந்ததாகக் காணப்பட்ட நிலையில் குறித்த வயதுகளில் பரீட்சைகளை எழுதுவதற்கு மட்டுமே இவருக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. வன்னியில் மல்லாவி மத்திய கல்லூரியில் சாதாரன தர பரீட்சையினையும் உயர்தர பரீட்சையினை சமாதான காலப்பகுதியில் யாழ் மத்திய கல்லூரியிலும் தோற்றியுள்ளார்.
உயர்தரம் கல்வி கற்கும் காலத்தில் யாழில் இயங்கிய நமது ஈழநாடு பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றினார். ஆதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊடகக் கற்கையில் இணைந்து ஊடகத்துறையில் கல்வி கற்ற போதும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகளில் ஈடுபாட்டை செலுத்தியதன் காரணமாகவும் ஊடக மாணவர் அமையத்தினை தலைவராகவும் இதர வகையில் மாணவர் உரிமை சார்செயற்பாடுகளில் குரல் கொடுத்தமை நிமிர்த்தம் தொடர்ந்தும் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்தார்.
இவரின் பல்கலைக்கழக கல்வி ஆர்வம் ஊடகத்துறை, மனித உரிமை துறைசார்ந்தும் அமைந்துள்ளது. தற்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் மனித உரிமைகள் கற்கை நிறுவனத்தில் பட்டப்பின் படிப்பு பட்டத்தினை பெற்றுள்ளார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மற்றும் பல்கலாச்சார கற்கையில் முதுகலைமாணி பட்டத்தினை சம காலத்தில் மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கை நிறுவனத்தில் மனித உரிமைகள் மற்றும் சமாதானக் கற்கை டிப்ளோமாவினையும் கலைபீடத்தில் ஊடகத்துறை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். மேலும் நேர்வேஜிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அனுசரணையில் இலத்திரனியல் ஊடகத்தறையிலும் உயர் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
ஊடகத்தறையில் பணியாற்றும் காலப்பகுதியில் இலங்கை இதழியல் கல்லூரியில் குற்றம் மற்றும் நீதித்துறை அறிக்கையிடல், போருக்குப் பின்னரான முரண்பாட்டு நிலை அறிக்கையிடல், முரண்பாடுகளை சமாதான முயற்சிகளுக்குக் iகாயளுதல் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையிடல், போருக்குப் பின்னரான சமாதனம் மற்றும் அபிவிருத்தி, தெற்காசிய ஊடகவியலாளர் கட்டமைப்பின் போருக்குப் பின் மீண்டழுதலும் சட்டமும் போன்ற துறைகளிலும் குறுங்காலப் பயிற்சிகளை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பெற்றுள்ளார். சர்வதேசத்தில் ஊழலுக்கு எதிராகச் செயற்படும் டிரான்பேரன்சி நிறுவனத்தின் புலனாய்வு ஊடக பயிற்றுவிப்பாளர் பயிற்சியினைப் பெற்றதுடன் பின்னர் அந் நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு ஊடக பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். இப்; பயிற்சி ஆட்சியாளர்களை மனித உரிமை ரீதியில் காட்டிக் கொடுக்கும் திட்டமாக கருதப்பட்டு இலங்கையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்டது. மேலும் இவர் பாராளுமன்றத் தேர்தல்(2010) ஜனாதிபதித் தேர்தல்(2015) போன்றவற்றில் உள்நாட்டு காணிப்பளராகவும் பணியாற்றியுள்ளார்.
கொழும்பில் தினக்குரல் பத்திரிகையில் தினக்குரல் வார வெளியீட்டில் யதார்த்தன் என்ற புனை பெயரில் யுத்தத்தின் பின்னராக இடம்பெயர்ந்த மக்களின் மீதன மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வாராவாரம் சமகால அரசியல் கட்டுரைகளை இவர் எழுதினார். அத்துடன் தினக்குரல் வாரவெளியீட்டில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். அக் காலப்பகுதியில் வராவாரம் அசியல் தலைவர்களை நேர்காணலுக்கு உட்படுத்தியும் வந்துள்ளார். 2012 ஆம் ஆண்டிலிருந்து வாராந்தம் வீரகேசரி வாரவெளியீட்டில் அரசியல் கட்டுரைகளையும் மனித உரிமை ரீதியிலான நேர்காணல்களையும் சுதந்திர ஊடகவியலாளராக மேற்கொண்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் கொழும்பில் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்த போது ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக சிவில் அமைப்பக்களின் கோரிக்கைக்கு அமைய இவர் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக தேர்தலில் போட்டியிட்டார். கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் சில காலங்களில் சுய விருப்பில் அப் பதவியில் இருந்து இராஜிநாமாச் செய்ததுடன் வடக்கு மனித உரிமைகள் நிலையம் என்ற மனித உரிமைகள் நிறுவனத்தினைத் தோற்றுவித்து அதன் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். அந் நிறுவனம் வட பகுதியில் இராணுவமயமாக்கத்திற்கு எதிராகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்திலும் பல்வேறுபட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இலங்கையில் இடம்பெற்ற உள்ளராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் (உள்ளராட்சி மன்றம) தவிசாளராகக் கடந்த 4 வருடங்களாக சேவையாற்றி வருகின்றார். யாழ். மாவட்டத்தில் உள்ள அதிக சனத்தொகையினையும் (74 ஆயிரம் ) அதுபோன்று அதிக நிலப்பரப்பினையும் கொண்ட (104 சதுரக் கிலோமீற்றர் ) உள்ளூர் ஆட்சி மன்றத்தின் தவிசாரளாக சேவையாற்றகின்றார். தமிழர் தாயகத்தில் அபிவிருத்தியிலும் அதேசமயம் உள்ளராட்சி மன்ற அதிகாரத்தினை நிலைநாட்டுவதிலும் இவர் தலைமைதாங்கும் பிரதேச சபை முன்மாதிரியாகவுள்ளது. ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்ற மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் தமிழ் மக்கள் சார்ந்த உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறிய சந்தர்ப்பங்களில் இவரின் தலையீடு காரணமாக இவருக்கு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலாவரையில் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக முன்னின்று செயற்பட்டமையினால் அதிக சவால்களை எதிர்கொண்டமை தெரிந்ததே.
மேலும் தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக துணிந்து காத்திரமாக செயற்பட்டமையின் விளைவாக பல வழக்குகள் இலங்கையில் இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக இவரின் சேவையினை கௌரவித்து கனடா உதயன் பத்திரிகையானது இவருக்கு விருதளிக்கின்றது