ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட முன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.அதில் இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு இந்தியா ஐநாவில் கேட்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.இந்தியா அவ்வாறு நடுநிலை வகிக்கக்கூடும் என்ற ஊகம் ஏற்கனவே இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் ராணுவ ஆய்வுக் கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. இந்தியா அதைத் தடுக்க முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. அதனால் கோபமடைந்த இந்தியா தனது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இலங்கைத்தீவில் நிலைமை சரியாக இல்லை என்றும் கூறியது.இந்த அறிவிப்பினால் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதமளவில் இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிக தொகையினர் இந்தியாவில் இருந்து வருகின்றார்கள்.எனவே பொருளாதார ரீதியாக அது இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு வகை மென் அழுத்தம்தான்.
இதைவிடக் கடுமையான அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டிருந்தது. ஆனால் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்தார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகளை அணுகி ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றும் விதத்தில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கேட்டிருந்தார்கள்.
அதேசமயம், இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூகங்களோடு இணைந்து அந்த கோரிக்கையை தமிழகத்தை நோக்கியும் மத்திய அரசாங்கத்தை நோக்கியும் முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இலங்கை விவகாரத்தில் தலையிட்டு கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் தயார் இல்லை என்று தெரிகிறது. தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாமா என்று சில ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் முயற்சித்தார்கள். அதுவும் வேலை செய்யவில்லை. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தயாராக இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாக தெரிகிறது.
அதேசமயம் தமிழகத்தில் பலமாக காலூன்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியானது, ஈழத் தமிழர்களின் விவவகாரத்தை தனது கையில் எடுத்து திராவிட கட்சிகளை எப்படி ஒதுக்கலாம் என்று திட்டமிட்டு உழைக்கின்றது. அக்கட்சிதான் மத்திய அரசாங்கத்தில் ஆளுங்கட்சியாக உள்ளது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாடானது ஜெனிவாவில் இந்தியாவின் பிரதிநிதி ஆற்றிய உரைக்கு வெளியே போகாது.
இப்படிப்பட்டதொரு பின்னணியில்,வழமை போல ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வைகோ ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதன் பின் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தரான அன்புமணி ராமதாஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.சீமானின் கட்சி அப்படி ஒரு அறிக்கை விடத் தயாராக இருக்கவில்லை. அக் கட்சி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சிலவற்றோடும் தனி நபர்களோடும் இறுக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது. எனினும் அக்கட்சிகூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுவதற்கு அல்லது குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தயாராக இருக்கவில்லை. அக்கட்சியோடு தொடர்புடைய புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவுக்கு ஐநா தீர்மானத்தையோ ஜெனிவா அரசியலையோ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. எனவே ஒன்றுக்கும் உதவாத ஜெனிவாத் தீர்மானத்தைப் பற்றி அலட்டிக் கொள்வதற்கு அவர்களும் தயாரில்லை. சீமானும் தயாரில்லை என்று தோன்றுகிறது.
இப்படியாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஜெனிவா தீர்மானம் பொறுத்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி கோரிக்கைகளை முன்வைக்கத் தயக்கம் காட்டின.
அதேசமயம் தமிழக செயற்பாட்டாளர்கள் சிலர் இலங்கையில் இருந்தும் அவ்வாறான ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து தமிழ்க் கட்சிகளை நோக்கியும் இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கியும் மேற்படி கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அதற்கு இலங்கையில் உள்ள தமிழ்ச் செயல்பாட்டாளர்கள் தயாராக இருக்கவில்லை. ஏனென்றால், ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கூட்டுக் கோரிக்கைகளை முன்வைத்தன. அக்கோரிக்கைகளுக்கு இன்று வரையிலும் மத்திய அரசாங்கம் நேரடியாகப் பதில் கூறவில்லை. இத்தனைக்கும் அக்கோரிக்கைகளை முன் வைத்த கட்சிகளுக்குள் இந்திய அமைதி காக்கும் படையின் காலகட்டத்தில் இந்தியாவோடு நெருங்கிச் செயற்பட்ட இயக்கங்களும் உண்டு.
மேலும் அந்தக் கூட்டுக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடுமையான எதிர்ப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.மேற்படி ஆறு கட்சிகளும் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு கேட்கின்றன என்றும், அவை இந்தியாவின் ஏஜென்ற்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டுகளோடு அவர்கள் நிற்கவில்லை,மேற்படி 6 கட்சிகளுக்கும் எதிராக இரண்டு பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் வுனியாவிலும் இடம்பெற்றன. இதில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிட்டுப் பூங்காவில் ஒரு பிரகடனம் வாசிக்கப்பட்டது. அப்பிரகடனம் மேற்படி ஆறு கட்சிகளுக்கும் எதிரானதாக காணப்பட்டது.
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அதற்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் போன்றவற்றின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆறு கட்சிகளும் இந்தியாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பின. ஆனால் அக்கடிதத்துக்கு இந்தியா இன்று வரை பதில் கூறவில்லை. கடந்த ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் அங்கே கூட்டமைப்பை சந்தித்தார். சந்திப்பின்போது டெலோ இயக்கத்தின் தலைவர் மேற்படி கடிதம் தொடர்பாக அவரோடு பேசியிருக்கிறார். அக்கடிதத்தை அனுப்புவதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளை அந்த இயக்கம்தான் முன்னின்று முன்னெடுத்தது. எனவே அவர் அது தொடர்பாக ஜெய்சங்கரோடு உரையாடியுள்ளார். எனினும் இந்திய மத்திய அரசாங்கம் இன்று வரையிலும் கடிதத்திற்கு பதில் கூறவில்லை.
யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட பின் பல மாதங்களாக திறக்கப்படாதிருக்கும் கலாச்சார மண்டபத்தை திறப்பதற்கு இந்திய பிரதமர் மோடி கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு வருவார் என்று கூறப்பட்ட்து. அவ்வாறு வரும்பொழுது மேற்படி ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மோடியும் வரவில்லை ஆறு கட்சிகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. இவ்வாறு பலத்த எதிர்ப்பின் மத்தியில் ஆறு கட்சிகள் அனுப்பிய கோரிக்கைக்கு இந்தியா பதிலளித்திருக்காத ஒரு பின்னணியில், மீண்டும் அவ்வாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைப்பதற்கு தமிழ் கட்சிகளில் அனேகமானவை தயாராக இருக்கவில்லை. சிவில் சமூகங்களும் தயாராக இருக்கவில்லை.
எனவே ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கி தமிழகத்தில் இருந்தும் பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை,ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்படவில்லை.
இதனால் நடந்து முடிந்த ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சில செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
அவ்வாறு ஈழத்தமிழர்களும் தமிழகமும் இணைந்து இந்திய மத்திய அரசாங்கத்தை நோக்கிகோரிக்கைகளை முன் வைப்பதால் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாமா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இந்திய மத்திய அரசாங்கத்தை கையாளும் விடயத்தில்,தமிழக ஈழத் தரப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களையும் ஏமாற்றகரமான இடைவெளிகளையும் மேற்படி முயற்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழகத்தால் முடியும் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் மூத்த அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். இது நாலாங்கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் வெளிவந்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தை கையாள்வதற்கான திறப்பு தமிழகத்திடம் உண்டு என்ற அடிப்படையில் “புது டெல்லிக்கான திறப்பு தமிழகம்”என்று அவர் அந்த கோட்பாட்டுக்கு விளக்கம் கூறியிருந்தார்.ஆனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சில செயற்பாட்டாளர்கள் தன்னார்வமாக முன்னெடுத்த நிகழ்ச்சிகள் வெற்றி பெறாதது நமக்கு எதைக் காட்டுகிறது?