(உதயனின் சிறப்புக் கட்டுரை)
ஆபத்துக்கள் நிறைந்த துணிச்சலான தனது பயணம் பற்றி: யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
பருத்தித்தீவின் விலகாத மர்மத்தில் 1990ஆம் ஆண்டு வரை வாழ்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கே? அவ்வாறானால் இந்த தீவிலுள்ள நிலங்கள் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட தேடுதலை மேலும் மேற்கொண்டபோது அதிலும் பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தன.
பருத்தித்தீவை தோண்டாமல் பருத்தித்தீவு தொடர்பில் தோண்டவே பல ஆக்கங்களை உருவாக்கும் அளவிற்கு விடயங்கள் வெளிவருகின்றன. 240 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த பருத்தித்தீவில் 1959 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த மக்களிற்கு 1961, 1969, ஆம் ஆண்டு முதல் அரசினால் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் 1975-05-18 அன்று 60 ஆம் இலக்கத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் அந்த தீவு முழுவதும் தமக்குச் சொந்நம் என வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அங்கே வாழ்ந்த 11 குடும்பங்களின் ஒப்புதல் இன்றி பிரசுரித்தமையே போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் அந்த மக்கள் மீளக் குடியமர முடியாமல் தவிப்பதற்குக் காரணமாகவுள்ளது.
இவ்வாறு வர்த்தமானி வெளிவந்த பின்பும் 11 குடும்பங்களும் அங்கேயே வாழ்ந்தனர். ஆனால் இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு யூன் மாதம் அனைத்துக் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேறி எழுவை தீவு மற்றும் யாழ் நகரிற்குச் சென்று விட்டனர்.
அவ்வகையில் இடம்பெயர்ந்த மக்கள் தம்மை தமது சொந்த தீவிற்கு அனுமதிக்குமாறு 1997 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்தபோதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதேநேரம் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தக் காலத்திலும் கோரிக்கை விடுத்தும் அதுவும் பலனளிக்காத நிலையில் அப்போது இலங்கையில் பணியில் இருந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் அங்கே வாழ்ந்த மக்கள் முறையிட்டனர். அதன் பயனாகப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முயற்சியால் அந்த மக்கள் அங்கே ஒரு தடவை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் பின்பு 2006இல் மீண்டும் போர் தொடங்கி 2009இல் முடிவுற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் அந்த தீவில் குடியமர 11 குடும்பங்களும் முயன்ற சமயம் ஆரம்பத்தில் கடற்படையினர் அதற்கு அனுமதி மறுத்தனர். அதன் பின்பு கடற்படையினர் அந்த தீவை விட்டு முழுமையாக வெளியேறி விட்டனர். இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்கள் காட்டி சில ஆண்டுகள் மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டது. அதன் பின்பு அந்த மக்கள் மீள்குடியேற முயன்றபோது வன ஜீவராசிகள் திணைக்களம் தனது வர்த்தமானி அறிவித்தலைப் பயன்படுத்தியே மீள் குடியேற்றத்தை தடுத்து வந்தனர். தற்போதும் தடுத்து வருகின்றனர்.
இதனால் அங்கே வாழ்ந்த மக்கள் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வடக்கு மாகாண ஆளுநர் என பல விண்ணப்பங்களைச் செய்து அலைந்து திரிந்த நிலையில் பல கூட்டங்கள் இடம்பெற்று இறுதியாக 2021-02-08 அன்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய பருத்தித்தீவில் வாழ்ந்த 11 குடும்பங்களையும் பிரதேச செயலாளர் ஆவணங்களுடன் உறுதிப்படுத்த அந்த குடும்பங்களை அங்கே குடியமர அனுமதிப்பதாக வன ஜீவராசிகள் திணைக்களம் இணக்கம் தெரிவித்தது.
இந்த தீர்மானத்தின் பிரகாரம் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு 2021-03-02இல் உறுதிப்படுத்தல் ஆவணம் சகிதம் கடிதம் எழுதியுள்ளார். இருந்தபோதும் அந்த 11 குடும்பங்களும் மீள் குடியமர இன்றுவரை அனுமதிக்கப்படவில்லை. தற்போது பருத்தித்தீவில் ஒரேயொரு வீடு அமைத்து குடியேறியுள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எழுவைதீவு வட்டார உறுப்பினரின் தந்தையும் தீவில் வாழ்ந்த 11பேரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுமார் 240 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பருத்தித்தீவில் வாழ்ந்த 11 குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர், ஆலயம் பாதை என சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு மக்களின் உரித்தாகவும் எஞ்சிய 225 ஏக்கரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தாலும் உரிமைகோரும் நிலையில் இன்றுவரை விலகாத பல மர்ம ஆச்சரியங்கள் கொண்ட தீவாகவே காணப்படுகின்றது. பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தும் ஆவணத்தில்-காணி அனுமதிப்பத்திரம் மட்டுமன்றி 1982 ஆம் ஆண்டு நில அளவை செய்யப்பட்ட வரைபடத்துடன் இந்த 11 குடும்பங்களின் விபரமும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளமை மேலும் ஒரு சான்றாக அமைகின்றது.
இவ்வாறு காணப்படும் சுமார் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பை கொண்ட பருத்தித்தீவில் வாழ்ந்த மிக்கேல்பிள்ளை மரியதாஸ், வயது 70, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ”எனக்கு 7 பிள்ளைகள் இவர்களில் நால்வர் அந்த தீவில் வசித்த காலத்திலும் எழுவை தீவிற்கு இடம்பெயர்ந்த பின்னர் 3 பிள்ளைகளுமாக 7 பிள்ளைகளுடன் பெரும் சிரமத்துடன் வாழ்வதோடு எமது காணியும் கடற்றொழில் செய்வதற்கு ஏற்ற வளமான பிரதேசத்தில் எப்போது மீண்டும் குடியேறுவோம் என்ற ஆவலுடனேயே காலத்தை கழிக்கின்றோம். பிள்ளைகளுடன் எழுவை தீவில் இரு இடத்தில் 7 பரப்பு காணி இருந்தாலும் அதிலும் 4 பரப்பு காணி கடற்படை வசம்தான் உள்ளது. எஞ்சிய 3 பரப்புக் காணியிலேயே வாழ்வாதாரத்தை நடாத்துகின்றோம். தற்போது இருக்கும் 3 பரப்பு காணியும் மிகவும் பள்ளமான காணியாகும் இந்தக் காணியை நம்பியே தற்போதும் 3 பிள்ளைகளும் நானும் மனைவியும் வாழ்வதனால் எனது காலத்தில் அந்த பருத்தித்தீவிற்கு போவதே எதிர்பார்ப்பு” என்றார்.
அதேவேளை இதே எழுவைதீவில் வசிக்கும் பருத்தித்தீவைச் சேர்ந்த தாயார் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ”பருத்தித்தீவில் நான் 14 ஆண்டுகள் வாழ்ந்தேன். அந்த தீவிலே நாமே தொழில் செய்து உற்பத்தியை விற்பனைக்கு கொண்டு சென்று திரும்பி வரும்போது தேவையானவற்றையும் கொள்வனவு செய்து வருவோம். மிகவும் சந்தோசமான வாழ்க்கை நடாத்திய தீவை இன்று எம்மால் பார்க்கவும் முடியவில்லை. ஆனால் அந்த தீவின் வரும்படியை யாரோ எடுக்கின்றனர். எனது கணவர் பிள்ளைகள் உறவுகள் தொழில் செய்த கடலிற்கு நாம் போக முடியாதாம் ஆனால் எவரோ எல்லாம் வந்து சீனாக்காரனை கூட்டிவந்து கடலட்டை வளர்க்கிறார்கள். பெண்ணாக இருந்தபோதும் சிறுவயது முதலே வலை தெரிவிற்கு செல்வதோடு பாடசாலைக்குப் படகில் சென்று வந்தேன். இந்த இனிமையான காலம் இனி எமக்கு இல்லை என்றதை நினைத்தே எனது கணவரின் உயிரும் போய்விட்டது நானும் எவ்வளவு காலமோ தெரியாது பொமிற்றைத்தான் பொத்திப் பொத்தி வைத்திருக்கிறன்” எனத் தெரிவித்து கண் கலங்கி நின்றார்.