யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
அவுஸ்திரேலியாவில் டி 20 உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியில் தமிழர்கள் யாரும் இல்லை. இலங்கை அணி அந்த கிண்ணத்தை கைப்பற்றுமா அல்லது ரசிகர்களிற்கு ஏமாற்றமளிக்கும் வகையில் தோல்வியைத் தழுவுமா என்பதெல்லாம் அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இலங்கையில் விளையாட்டு என்பது கொழும்பை மையப்படுத்தியதாகவும் சிங்கள மக்களிற்கான ஒன்றாகவுமே பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தேசிய அணிகளில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அல்லது அவர்களுக்கு இடமென்பது தற்போதுதான் எட்டிப் பார்க்கின்றது. 50 ஓவர்களைக் கொண்ட உலகக் கிண்ணத்தை ஒரு முறை இலங்கை வென்றிருந்தாலும், அந்த அணியில் தன்னை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாத முத்தையா முரளிதரனைத் தவிர தமிழர்கள் யாரும் இடம்பெறவில்லை.
அடிப்படையில் தேசிய அணிகளைத் தேர்வு செய்யும் போது, நாடு முழுவதும் தேர்வுகளை நடத்தி பக்கச்சார்ப்பற்ற முறையில் அறிவியல் ரீதியான வகையில் தெரிவை மேற்கொண்டு நாட்டிற்கு கீர்த்தியைத் தேடித் தரும் அணியை தேர்வு செய்வதே உலக நடைமுறை. இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். அந்த அணியில் இடம்பிடிப்பது என்பது மிகவும் சவாலானது, அதே நேரம் திறமையிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தேசிய அணிக்கு தேர்தெடுக்கப்படும் நபர் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், எந்த இனத்திலிருந்தும், என்ன மொழி பேசுபவராக இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டும்.
இதே நிலைதான் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், பிரேசில், இத்தாலி, கனடா போன்ற நாடுகளிலும், ஏன் இந்தியாவிலும் கூட பின்பற்றப்படுகிறது.
உதாரணமாக இந்திய துடுப்பாட்ட அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தனர். கிருஸ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அணியின் தலைவராகக் கூட இருந்தார். தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் இலங்கை அணியில் தமிழர்கள் கணிசமாக இடம்பெறுவதெல்லாம் சாத்தியமாகாது என்று உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் அறிவேன். எனினும் அப்படியான ஒரு விஷயத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளி இருக்கத்தானே வேண்டும்.
இதன் காரணமாகவே வடக்கே யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்பட்டது. அது ஓரளவு சித்தியாகக் கூடும் என்று கருதும் நிலையில் புதிய சர்ச்சை ஒன்று இப்போது எழுந்துள்ளது.
தற்சமயம் கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம என்ற விடயம் பேசு பொருளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஒக்டோபர் மாத அமர்வு கடந்த 17ஆம் திகதி சபை மண்டபத்தில் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கோண்டாவிலில் தற்போது மாநகர சபையின் ஆளுகையில் உள்ள குடிநீர் விநியோக கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள 11 ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கும் யோசணை ஒன்று மாநகர முதல்வரால் முன் வைக்கப்பட்டது.
இதனை உறுப்பினர்கள் பலர் நிராகரித்து விட்டனர். இவ்வாறு நிராகரித்தமைக்கு இதன் பின்னால் உள்ள ஆபத்துக்களே காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
இதேநேரம் இத்திட்டத்தை சபை ஏற்றுக்கொண்டால் சபை ரீதியிலான ஏனைய அனுமதிகள் பெறப்படும் அதேவேளை குடாநாட்டின் 25 ஆயிரம் இளைஞர்களின் துடுப்பாட்ட ஆசைக்கு ஓர் களமாகவும் நகரை மட்டுமன்றி புறநகர்ப் பகுதியும் மிகப் பெரும் அபிவிருத்தி கானும் என்பதுடன் மாநகர சபையின் வருமானமும் அதிகரிக்கும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது.
ஆனால் கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அப்பகுதி விவசாயம் முழுமையாக அழிவடையும் என அப்பகுதி மக்கள் கோரியதன் பெயரிலேயே அத்திட்டத்தை நிராகரித்தோம் என திட்டத்தை எதிர்த்த தரப்புக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் இ.ஆனல்ட் கனடா உதயனிடம் கருத்து தெரிவிக்கையில், “இந்த யோசணையின் பின்னாலும் பல யோசணைகள் உள்ளன. அதாவது தீவகத்தில் சர்வதேச மைதானம் என அந்த மக்களிற்கு ஆசை காட்டிவிட்டு தற்போது அதனை கோண்டாவிவில் அமைத்தால் அந்த மக்களின் மனம் பாதிக்கப்படும் என்பது ஒரு விடயம். அதேநேரம் தீவுப் பகுதியிலே சர்வதேச மைதானம் அமைக்காமல் விடுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்டது சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைந்தால் அதற்கு சாதாரண நாட்களில் 25 ஆயிரத்திற்கு குறையாத நீரும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் நாட்களில் 40 ஆயிரம் லீற்றருக்கும் மேற்பட்ட நீரும் வேண்டும் அதனை பெறுவதில் உள்ள நெருக்கடியே பிரதானமானதாக காணப்பட்டது”.
அதுமட்டுமின்றி தீவகத்தில் மைதானம் அமைக்கும்போது அதனை விளையாட்டு வலயத்திற்கு அருகிலுள்ள வயல் காணிகளையும் கோரியதும் நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தற்போது குடாநாட்டில் கோண்டாவில் பகுதியினையும் தாண்டி குடியிருப்பு நிலம் பரப்பு 50 லட்சத்தை தொட்டு நிற்கும் நிலையில் இவ்வாறான ஓர் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் வந்தால் அதனைச் சூழ மேலும் வர்த்தக மையங்களே எழுமே அன்றி குடியிருப்புச் சூழல் பாதிக்கப்படுவதோடு பாமர மக்கள் குடியிருக்க காணியை பெறும் சந்தர்ப்பமே அற்றுப்போகும் எனவும் மாநகர சபை உறுப்பினர் இ.ஆனல்ட் வலியுறுத்தினார்.
இதற்கும் அப்பால் மிக ஆபத்தான விடயமாக தறபோது கோண்டாவில், கோப்பாய், திருநெல்வேலிப் பகுதிகளே விவசாய நிலமாக இருக்கும் சூழலில் இந்த 3 கிராமங்களும் தோட்டச் செய்கையை மறக்கும் நிலையே ஏற்படும் எனவும் மாநகர சபை உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இவை மக்களின் பிரச்சணை எனில் மாநகர சபையின் நிர்வாக நெருக்கடிகளாக குறித்த நிலம் ஓர் பொதுப் பயன் பாட்டிற்காக இன்னுமோர் அரச திணைக்களத்தில் இருந்து பராதீனப்படுத்தல் சட்டம் மூலம் (வெஸ்ரிங் ஓடர்) மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட சொத்தாகும். இருப்பினும் அதன் தற்போதைய சந்தைப் பெறுமதி நூறு கோடி ரூபாவைத் தொட்டு நிற்கும்.
ஓர் அரச சொத்து பராதீனப்படுத்தல் சட்டம் மூலம் (வெஸ்ரிங் ஓடர்) வழங்கப்பட்டு அந்த தேவை அன்றி வேறு தேவைக்கு வழங்குவதானால் மாநகர சபை கட்டளைச் சட்டம் 40இன் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என உள்ளது. இங்கே அந்த அனுமதி பெறப்படவும் இல்லை.
மேலும் ஒரு பிரச்சனையாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தில் முத்தரப்பு ஒப்பந்தம் எழுதி இந்திய அரசினால் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் தற்போது மாநகர சபையிடம் கையளித்தால் அதனை பராமரிக்கும் வல்லமை இல்லை என்னும் தொனியில் கையளிக்காது இழுத்தடிக்கப்படுவதோடு அதற்கு என்ன முடிவு என இதுவரை கண்டறியப்படவே இல்லை.
`இத்தனை பட்டறிவு, சட்ட ஏற்பாடு, எமது மக்களின் வாழ்வியல் என்பவற்றைக் கருத்தில்கொள்ளாது கோண்டாவில் நிலத்தை சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு வழங்கினால் மைதானம் அமைத்து முடிவுறும் தறுவாயில் அதனை பராமரிக்கும் வல்லமை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கிடையாது எனவே அதனை துடுப்பாட்ட சபையிடம் கையளியுங்கள் என்றோ அல்லது சர்வதேச மைதானங்கள் அனைத்தும் மத்திய விளையாட்டு அமைச்சின் கீழ் என்றோ பறி போகாது எனபதற்கு என்ன உத்தரவாதம்? என்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இளைஞர்கள் துடுப்பாட்டத்தில் ஆர்வமாக உள்ள நிலையில் அங்கு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவ்வகையில் வடக்கை மையமாகவோ யாழ்ப்பாணம் எனில் தீவகம் அல்லது குடிசண நெருக்கடி அற்ற பிரதேசத்திற்கோ மைதானத்தை நகர்த்தி அங்கும் அபிவிருத்தியை ஏறபடுத்துவதே பொருத்தமானதாக அமையும் என்ற நோக்கிலேயே கோண்டாவிலில் துடுப்பாட்ட மைதானம் வேண்டாம் எனக் கூறப்பட்டது.
இது ஒருபுறம் எனில் மறுபுறம் சபையின் 11 ஏக்கரில் மைதானம் அமைத்தால் அதற்கு அருகிலே இதற்கான வாகனத் தரிப்பிடங்களிற்குகூட போதுமான இடங்கள் இன்மையால் அதனை எவ்வாறு ஏற்படுத்துவது? இதற்கான இதர கட்டுமானங்கள் என எழும்போது கண்டிப்பாக அயலில் உள்ள விவசாய நிலங்கள் அல்லது குடியிருப்பு நிலங்கள் பாதிப்படையும் என்பதும் திண்ணம்.
வடக்கின் மையப் பகுதியான மாங்குளம் பகுதியில் ஓர் சர்வதேச துடுப்பாட்டு மைதானத்தை தாருங்கள் என நீண்ட காலமாக கோரிக்கை விடும் முல்லைத்தீவு கிளிநொச்சி மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்கும் வகையில் எமது தீர்மானம் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவுமே நாம் கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் வேண்டாம் என்று கூறுகின்றோமே அன்றி துடுப்பாட்ட மைதானம் வேண்டாம் என தமிழ் தேசியக் கூடமைப்பு சார்பில் எவருமே தடுக்கவில்லை என்று அக்கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவை இவ்வாறிருக்க இலங்கையில் துடுப்பாட்டத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏன் இதர விளையாட்டுகிளிற்கு அளிக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
தீவு நாடான இலங்கையில் கணிசமான அளவிற்கு கடலோரப் பிரதேசங்களில் மக்கள் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக அன்றாடம் கடலுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீச்சல் மற்றும் நீர்விளையாட்டுகள் கைவந்த கலையாக உள்ள நிலையில், ஏன் நீச்சல், வாட்டர் போலோ, நீரில் பாய்தல் (டைவிங்), போன்ற விளையாட்டுகளையும், வீரமறவர்களான தமிழர்களுகு இயல்பாகவே வரக்கூடிய குதிரையேற்றம், வாள் சண்டை போன்ற விளையாட்டுகளையும் ஏன் அரசு முன்னெடுக்க கூடாது என்ற கேள்வி நியாயமானதாக இருந்தாலும், பதில் வராது என்பதே யதார்த்தம்.