‘என்ன செய்யினம் இஞ்சை
மெய்யாவே ஒண்டுமாய் விளங்கேல்ல’
பக்கத்தில ஒரு தங்கச்சி பெருங் கோபத்தோட – ஏனெண்டு
கேட்கவும் கொஞ்சம் சங்கடந்தான்- ஆனாலும்
‘ஏன் தங்கச்சி என்னோ பிரச்சினையோ?’ – கேட்டபோது
‘என்னெண்டு செல்லுறது இவையளை
காசைத்தான் கறக்கினம் கண்டபடி,
வேறை ஒண்டும் நடக்குதில்லை
அப்பாவின் தலையைப் பாருங்கோ
எப்படி இருக்கெண்டு பாருங்கோ
ஓட்டோவில வந்து இறங்கினம்
காட்டினார்கள் அந்த கவுண்டறை
சீலை கட்டின சிங்காரங்கள்
ஏனெண்டும் கேக்கேல்லை கனநேரம்,
“அப்பாவுக்கு தலையிடி தாங்கேலாது “-
எண்டன்
“இப்பவும் இருக்குதோ? “கேட்டார் ஒருவர்
‘இல்லாட்டி வாறமே ‘சொல்லத்தான் நினைச்சனான்
வில்லங்கம் ஏனெண்டு விட்டுட்டன்
தந்தினம் ஒரு துண்டு
அங்கேபோய் கட்டுங்கோ எண்டினம்
‘ஓ பி டி இல காட்டலாமோ?’ எண்டன்
‘ ஓ பி டி தேவையில்ல – உங்களுக்கு
நரம்பியல் நிபுணர் வைத்தியர் – அவர்
இருக்குமிடம் தெரியும் அங்கேபோனால்’ எண்டினம்
‘ நரம்பியல் நிபுணர் தலையிடிக்கு?’ – மிக
வியப்போடு அவவைக் கேட்டேன்
‘ காசைக் கட்டிப்போட்டு துண்டை – அந்த
மேசையில காட்டுங்கோ’ எண்டினம்
கட்டின துண்டைப் பாத்திட்டு
பெட்டைகள் இரண்டுபேர் புத்தகமொன்று
கொட்டை எழுத்தில பெயர்பொறிச்சுத் தந்து – பின்
நீட்டுக்குப் போனால் வைத்தியர் அறையென
காட்டிவிட்டுப் போட்டினம்- அங்கு
கூட்டமோ அன்று மிக அதிகம்
‘முப்பத்தாறாம் இலக்கம் எப்ப வரும்
இப்பத்தான் இலக்கம் நாலு போகுது’
எண்டொரு அண்ணர் சொல்ல
‘வேண்டாம் இண்டைக்கு காட்டேலாது
வா போவம் வீட்டுக்கு ‘- என
கூசாமல் சொன்ன அப்பா
‘தலை வெடிக்குது ‘ எண்டும் சொல்ல
சிலைபோல இருந்திட்டன் – அப்போ
தூணோடை நின்ற தம்பி – சக
தோழியரைக் கேட்டு கொஞ்சம்
முன்னாடி விட்டதனால வைத்தியரை – கொஞ்சம்
முன்னுக்கே பாத்தாச்சு – அவர்
நரம்பியல் வைத்தியர் தான் – ஆனால்
அலம்பாமல் கதைச்சிருந்தார் – அவர்
காண்டத்துச் சாத்திரிபோல எல்லாத்தையும் கேட்டுப்போட்டு
‘கண்டுவிட்டேன் நோய் இதுதான்’
எண்டு சொன்னார்- ‘ஆனாலும்
பரீட்சிக்கப் பலவுமுண்டு புத்தகத்தில் பெயர்களுண்டு
பரீட்சித்த பின் மீண்டும் வரவேண்டும்’ என்றார்
ஒவ்வொரு சோதனைக்கும் ஒவ்வொரு காசு
அவ்வப்போது றிசீற்றோடு போகவேணும்
கோவிட் சோதனை முதல்
இதயச் சோதனை வரை
எல்லாத்துக்கும் சல்லடை போட்டுத்
நல்லாத் தேடித்தான் கட்டினது
தானாகச் சோதிக்க நாலைஞ்சு பெட்டி
வீணாகக் கிடக்குது வீட்டில
மூவாயிரத்து ஐந்நூறு குடுத்தாச்சு
தேவையற்ற கோவிட்டுக்கு ம்……’ ஒரு தரம் பெருமூச்சு விட்டபடி – அந்த
தங்கச்சி தொடர்கிறார்
‘ இரத்தமும் குடுத்தாச்சு அதோட – வராட்டியும்
வரவைச்சு மற்றதையும் குடுத்தாச்சு
“ஈ சி ஜி எடுக்க எந்த இடம்?” – கேட்டதற்கு
கூடிநின்று கதைச்ச வெள்ளைச் சட்டை ஒண்டு
“இஞ்சை காட்டுங்கோ பொப்பியை”எண்டுதான் சொல்லி
“அங்கை நில்லுங்கோ வருவினம்”எண்டது
கனநேரம் காவல் நிக்க – பின்
ஒருவாறு அழைக்கப்பட்டார் -அப்பா
போனவர் உள்ளிருந்து பூம்பனியில் – தலை
பூராவும் நனைந்ததுபோல் வெளியில் வந்தார்
“தலையில் என்ன! “ என்று கேக்க
“பிழையான சோதனைக்கு உட்படுத்தப் பாத்தார்கள்
நல்ல காலம் சோதிக்க முன்
மெள்ளமாகக் கேட்டதனால் விடுபட்டன்” என்று சொன்னார்’
‘ அப்ப என்னதான் நடந்தது? என்று கேட்டதற்கு
‘ஈ சி ஜி பரிசோதனைக்கு
ஈ ஈ ஜி செய்யப் பாத்தினமாம் 😳
(முன்னையது இதயத்திற்கு
பின்னையது மூளைக்கு)
அதுதான் கோபம் கோபமாய் வருகிறது’ என்றாள் அத் தங்கையவள்
அதுவரையில் பேசாமல் இருந்த ஐயா
வேதனையிலும்,
‘ கொத்துக் கொத்தாய் வெடிகுண்டுகள்
நித்தம் நித்தம் வந்து விழ – தாங்கள்
செத்துப் போனாலும் பரவாயில்லை – மக்களை
காக்க வேணும் என்று
அல்லும் பகலும் சேவை செய்த
நல்ல மருத்துவத் தெய்வங்களோடு
கடமை உணர்வு கொண்ட
கடவுளுக்கும் நிகரான தாதியர் பலரையும்
பெற்ற இப்பூமி இப்ப ம்…………’என்று
விட்டார் ஒரு பெருமூச்சு பெரு நெருப்பாய்.
(உண்மை இது கற்பனை அல்ல)
உமா மோகன்- Montreal- Canada