(எமது யாழ் செய்தியாளர்)
இலங்கையில் 200 ஆண்டுகால வரலாறு கொண்ட யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முதல் தடவையாக ஓர் பெண் அதிபராக நியமனம் செய்யப்படுகின்றார்.
1823 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியின் 17 ஆவது அதிபராக ஓர் பெண் பொறுப்பேற்கவுள்ளவர் என அக்கல்லூரியின் பணிப்பாளர் சபை தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
திருமதி ருஷிரா குலசிங்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகச் செயல்படுவார் எனவும் அக்கல்லூரியின் பணிப்பாளர் சபை குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணக் கல்லூரியின் முதல் பெண் அதிபராக திருமதி ருஷிரா குலசிங்கம் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் வட்டுக்கோட்டையில் உள்ள தோமஸ் பேராலயத்தில் 2022 நவம்பர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.
திருமதி ருஷிரா குலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு BA பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் MA பட்டமும் பெற்றுள்ளார்.
தொழில்முறை தகுதிகளில் பணியாளர்கள் மற்றும் கல்வி மேம்பாட்டுச் சங்கம் (SEDA) ஆசிரியர் அங்கீகாரம் (UK), கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர் கல்வி கற்பித்தல் சான்றிதழ் (CTHE) மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் (UK) வணிக நோக்கங்களுக்காக ஆங்கிலம் கற்பித்தல் சான்றிதழ் ஆகியவை அடங்குகின்றன.
இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் நிலையத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் அலகிலும் பயிற்றுவிப்பாளர் மற்றும் விரிவுரையாளர் பதவிகளை வகித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவின் தலைவராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கிங் செஜோங் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், நுகேகொடை சேகிஸ் வளாகத்தில் மொழிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திருமதி குலசிங்கம் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் பிரிவை முழு அளவிலான கல்வித்துறையாக தரமுயர்த்துவதில் அவரது முன்னணி பங்களிப்பிற்காக பாராட்டப்பட்டவர்.
திருமதி குலசிங்கம் ஆலோசகராக உயர் கல்வி அமைச்சினால் ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்குப் பங்களித்தார். கூடுதலாக, 2011 இல் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலம் தொடர்பான ஜனாதிபதி செயலணியிலும் பணியாற்றியவர்.
திருமதி ருஷிரா குலசிங்கம் CMS பாடசாலைகளின் நிர்வாக சபையில் கடமையாற்றியதுடன் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது தந்தை சாளி குணநாயகம் இலங்கை வங்கி யாழ்ப்பாணக் கிளையின் முகாமையாளராக பணியாற்றினார். தாயார் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பரம்பரையில் இவர் மூன்றாவது அதிபராகியுள்ளார்.