( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 01)
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
நீர் வளம் உண்டு, நில வளம் உண்டு, நிம்மதி ஒன்றுதான் இல்லை.
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
என்று-அன்று புலிகள் பாடிய மண்ணின் நிலை தொடர்பான பாடல் முல்லை மண்ணின் அவலத்தை அப்படியே இன்றும் தொட்டு நிற்கின்றது.
கொடூரமான ஒரு போர் முடிந்த 13 ஆண்டுகளிற்கும் மேலானாலும், இந்த பாடலும் அது தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்ச்சியும், தாக்கமும் மிகவும் ஆழமானது.
அடிப்படையில் வளம் மிகுந்த பூமியில் இருக்கும் மக்கள் வறுமையில் வாடுவதையும், அதிலிருந்து மீண்டு சுதந்திரமாக வாழ்வதையுமே அந்தப் பாடல் அடிநாதமாகக் கொண்டிருந்தது எனலாம்.
முல்லைத்தீவு வலி சுமக்கும் ஒரு பூமி-அதுவொரு சிவந்த மண். எக்காலத்திற்கும் போர் வடுக்களைத் தாங்கி நிற்கும் ஒரு நிலம். அதுமட்டுமல்ல அந்த நிலப்பரப்பு சாதனை மற்றும் வேதனைகளுக்கு அழியாத சாட்சியாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
இதற்குச் சிறந்த உதாரணமாக வட்டுவாகல் பாலத்தைக் கூறலாம். அங்கு நடைபெற்ற அவலங்களுக்கு அந்தப் பாலம் ஒரு மௌனமான சாட்சி. அந்த பாலத்தின் ஊடாகக் கடந்து `அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு` வந்த ஆயிரக்கணக்கானவர்களை இன்றும் அவர்களது உறவினர்கள் தேடுகின்றனர்.
முல்லைத்தீவு இன்றும் அவலங்கள் சுமந்து நிற்கிறது. நாட்டில் ஒப்பீட்டளவில் அதிகமாக இராணுவப் பிரசன்னம் இங்குதான் உள்ளது என்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டம் சனத் தொகைகளில் குறைந்த மாவட்டமாகக் காணப்படுகின்றபோதும் வறுமையில் முதலித்தில் உள்ளது.
வறுமையைப் போக்க அரச நிர்வாக இயந்திரங்கள் செயல்பட வேண்டிய நிலையில் அந்த வறுமைக்கு அரச நிர்வாக இயந்திரமே காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
வளங்கள் பல இருந்தும் மக்கள் வறுமையில் வாடுவது ஏன்?
இதனை இந்தச் சிறப்புத் தொடர் அலசுகிறது. ஊடக அறத்தை கடைப்பிடித்து, பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அதன் மூலம் தீர்வு காண முயலும் மக்கள் நலன் சார்ந்த ஒரு தொடராகும் இது.
இத்தொடரின் மூலம் வலியைச் சுமக்கும் அந்த மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் சிறிதேனும் ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும் என்பதே நம்பிக்கை.
முல்லைத்தீவு மாவட்டமானது 2415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டு 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் 136 கிராம சேவகர் பிரிவுகளில் தற்போது 45 ஆயிரத்து 927 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 516 மக்கள் வாழ்கின்றனர்.
நீர்வளம், நில வளம் இருந்தும்- வறுமையில் இருந்து மீளாத முல்லைத்தீவும் தீராத பிரச்சணைகளுமாக காணப்படுவதனை- அலச ஆரம்பிக்கும்போது இறுதி யுத்தமும் முள்ளிவாய்க்கால் அவலமும் மட்டும் கண் முன்னே தோன்றவில்லை.
போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் அரச நிர்வாக இயந்திரத்தினால் சீர் அமைக்க முடியாது ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையின்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வட்டுவாகல் பாலத்தின் மீது பயணிக்கும் போது இறுதி யுத்தத்தில் மட்டுமல்ல இன்னும் உயிரைக் குடிக்கவே காத்திருக்கின்றேன் எனக் கூறுவது போன்று காட்சி தருகின்ற வகையில் அந்தப் பாலத்தின் ஆயுள் ஊசலாடுகின்றது. அடிப்படை வாழ்வாதாரத்திற்கான குளம் முதல் வாழ்வே முடிந்த பின்பு தகனம் செய்யும் சுடலைகூட இராணுவத்தின் பிடியில் நிற்கும் அவலப் பட்டியலும் நீள்கின்றது.
இத்தனைக்கும் மத்தியில் எஞ்சியிருக்கும் சொற்ப நிலங்களும் தொல்லியல் எனவும் மகாவலி என்றும் ஒரே தீராத தலைவலியாக உள்ள முல்லைத்தீவு மக்கள் பெரும் போராட்டத்துடனேயே இன்றும் வாழ்கின்றனர். மக்களோ சிவ பெருமானுக்கும் புத்த பகவானுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர்.
அந்த மாவட்டத்தின் வறுமைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து எழுத ஆரம்பித்த வேளை எந்த அவலத்தை முதலில் பட்டியலிடுவது என்பதில் பெரும் குழப்பமாகவும் உள்ளது. ஏனெனில் அவலத்தின் பட்டியல் அந்த அளவிற்கு நீளமாகவுள்ளது. இருப்பினும் வறுமையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச நிர்வாக இயந்திரங்களே வறுமைக்கான காரணங்களில் முதலிடமாகவுள்ளது என்பதையே இக்கட்டுரையின் மையப் பொருளாக தொட்டமையினால் அதனூடாகவே பட்டியலிட்டு ஆரம்பிக்கின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டமானது 2415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு என்னும் வகையில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 500 ஹெக்டயர் அல்லது 5 லட்சத்து 96 ஆயிரத்து 505 ஏக்கர் என்ற அளவீட்டைக் கொண்ட நிலப்பரப்பாகும். அவ்வாறானால் இங்கே வாழும் 45 ஆயிரத்து 927 குடும்பங்களில் நிலம் அற்றவர் என எவருமே இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கே ஒரு துண்டு நிலம்கூட இல்லை என்பதனையும் மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்துகின்றது. இதேபோன்று இந்த மாவட்டத்தில் காணப்படும் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகள் சுமார் 120,000 கால்நடைகளிற்கும் ஒரு மேய்ச்சல் தரைகூட கிடையாது.
2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேலை வாய்ப்பற்றோருக்கு சுய தொழிலை ஊக்குவிக்க தேசிய ரீதியில் ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு விரும்பியவர்களை விண்ணப்பிக்குமாறு அரசு கோரியபோது நாடு முழுவதும் விண்ணப்பித்தனர் இதில் முல்லைத்தீவில் மட்டும் 28 ஆயிரத்து 676 பேர் விண்ணப்பித்தனர். எனினும் அவர்களிற்கு வழங்க நிலம் இல்லை என்று கூறப்படுகின்றபோதும் வடக்கு கிழக்கு முழுமையாக இத் திட்டம் கிடப்பில் உள்ளது. இவ்வாறு பெரிய ஒரு மாவட்டத்தில் எதற்குமே நிலம் இல்லை எனில் இருக்கும் நிலத்தை என்ன கடல் விழுங்கி விட்டதா என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால் அந்த கேள்விக்கான விடையே இந்தக் கட்டுரைக்கான பெரும் பதிலாகவும் அமையும்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக அரச நிர்வாக இயந்திரங்கள் பெயரளவிற்கு வெறுமனே நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகிய 3 திணைக்களங்கள் அநுராதபுரத்தில் இருந்து முல்லைத்தீவு தொடர்பில் கன கச்சிதமாகவே செயல்பட்டுள்ளமை தற்போதைய தரவுகள் மூலம் உறுதியாகின்றன.
இந்த மூன்று திணைக்களங்களை விட மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அரசின் மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாகவும் அந்த மாவட்ட மக்கள் கருதுகின்றனர். இந்த திணைக்களங்கள் அன்று தொட்டு இன்றுவரை வடக்கு கிழக்கை அபகரிக்க அனைத்தையும் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணத்தையும் இணைக்கும் முல்லைத்தீவில் அதிக கவனம் செலுத்தியே வந்தனர் என்பதனையும் இதற்கான தரவுகள் சான்றுகளையும் அடுத்த வரும் பகுதிகளில் புள்ளி விபரத்துடன் பார்க்கலாம்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அங்கே வாழ்ந்த மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து வவுனியாவிற்கும் அரிசி அனுப்பிய மண் முல்லைத்தீவு. இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்காலில் இரத்த ஆறு ஓடும்வரை நெருப்பெரிந்த நிலத்தில் அன்று ஓலைக் குடிசையிலும் தறப்பாள்களின் கீழும் குப்பி விளக்குகளுடன் மன நிறைவோடு வாழ்ந்த மக்கள் கல் வீடுகளின் உள்ளே மின் விளக்குகள் ஒளிர மின் விசிறியின் கீழ் நிம்மதியின்றி தவிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அரச நிர்வாக இயந்திரம் ஏற்படுத்தும் அழுத்தங்களே காரணமாக உள்ளது என்பதே மக்கள் கூற்றாகவுள்ளது.
கடற்தொழில், விவசாயம், கைத் தொழில் மட்டுமன்றி அனைத்து வகையிலும் எந்த உணவுப் பொருளையும் பணம் இன்றி உற்பத்தி செய்த மண்ணில் இன்று பணம் இருந்தாலும் அதை போராடியே பெறவேண்டிய அவலமே காணப்படுகின்றது.
1983ஆம் ஆண்டு விரட்டப்பட்டு மக்கள் வெளியேறிய இடங்கள் பல இன்றும் விடுவிக்கப்படாமல் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது. அரச நிர்வாக இயந்திரச் செயல்பாட்டைப் பொருத்தவரை கட்டடங்கள் உண்டு அதிகாரிகள் இல்லை. பல கட்டடங்கள் திறப்பு விழா கண்டதோடு எவருமே வந்து செயல்படாத `பேய் வீடு` போலுள்ளது. `ஆட்கள் வந்தால் தானே அலுவல்கள் நடக்கும்` என்று மக்கள் புலம்புகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நிர்வாக மையங்களும் நகரை அண்டியதாகவே காணப்படுகின்றது. இதனால் ஏ-9 வீதிக்கு மேற்கே உள்ள 25 ஆயிரம் மக்களின் நெருக்கடிகள் ஏனைய பிரதேசங்களை விடவும் உச்சமானதாகவே என்றும் உள்ளது.
குறிப்பாக துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச செயலாளர் பகுதியின் புறநகர்ப் பகுதியில் ஓர் அனர்த்தமோ அல்லது பிரச்சனை என்றாலோ அதற்கான தீர்வைப் பெறும் நோக்கில் எந்த நிர்வாக அலுவலகங்களிற்கும் ஒரு வழிப்பாதையாக 75 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும். அதாவது யாழ் நகரில் இருந்து கிளநொச்சிக்குப் பயணிக்கும் தூரம். அவ்வாறெனில் சென்று வர 150 கிலோ மீற்றர் தூரம். இதற்கு தீர்வாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக இயந்திரங்களை மாங்குளத்தில் அமையுங்கள் என அந்த மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக எமக்கு தெரிந்து கோரிக்கை விடுத்தாலும் இதற்கு முன்பும் பல ஆண்டுகளாக முன்வைப்பதாகப் பட்டியலிடுகின்றனர்.
25 ஆயிரம் பேரிற்கு போக்குவரத்து இடையூறு என செயலகங்களை மாங்குளம் மாற்றினால் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்போது 15 கிலோ மீற்றரில் தமது பணியை நிவர்த்தி செய்யும் நிலையில் அவர்களை 40 அல்லது 50 கிலோ மீற்றர் அலைய விடமுடியாது ஏனெனில் குடிசண அடர்த்தி கொண்ட பிரதேச செயலகங்கள் மாவட்டத்தின் 60 வீதமான மக்கள் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் வாழ்கின்றனர் என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த இழுபறியினால் நட்டாங்கண்டல், சிராட்டிகுளம், பாலைப்பாணியில் ஓர் வெள்ளிக் கிழமை கிணற்றிற்குள் வீழ்ந்தவரை திங்கள் கிழமைதான் கிணற்றிற்கு வெளியே எடுத்த அவலமும் அண்மையில் இடம்பெற்றது. ஏனெனில் திடீர் மரண விசாரணை அதிகாரி முள்ளியவளையிலேயே உள்ளார். அதேபோன்று ஐயங்குளத்தில் ஓர் அனர்த்தத்திற்கு உள்ளானவரை மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றி அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்ற சமயம் பாதிக்கப்பட்ட நோயாளர் படுத்திருந்த கட்டில் ஏ-9 வீதியில் ஓடிய அவலமும் இடம்பெற்றது. மாங்குளம் சந்தியால் கிளிநொச்சி நோக்கித் திரும்பி கொக்காவிலை அண்மித்து பயணித்த சமயம் நோயாளர் காவு வண்டியின் கதவு கயிற்றினால் கட்டப்பட்டிருந்தபோது நோயாளர் காவு வண்டி 18ஆம் போர் ஏற்றத்தில் ஏறியதனால் கட்டில் கதவில் இடித்தபோது கயிறு அறுந்து கதவு திறந்தது. நோயாளர் படுத்திருந்த கண்டில் நோயாளருடன் 50 மீற்றருக்கும் அதிக தூர் கட்டிலுடன் ஓடினார்.
முல்லைத் தீவு மாவட்டத்தில் நிலவும் அவலங்களின் ஒரு மேலோட்டமே இது
( அவலப் பட்டியல் தொடரும்….)
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 01
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 02
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 03
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 04
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 05
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 06