வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- ‘தீர்வு’ சாத்தான்கள்; ஓதும் வேதம்.
‘அரசியல் தீர்வு‘ மீண்டும் பேசு பொருளாக வந்துள்ளது. ஐ.தே.க.தலைவரும் ஜனாதிபதியுமான ரணில்விக்ரமசிங்க அதனை தொடக்கி வைத்துள்ளார். வழமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஒவ்வொரு புது வருடத்தின் போதும்இ தீபாவளியின் போதும் பொங்கல் பண்டிகையின் போதும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வருவதாக ஆரூடம் கூறிக் கொண்டிருந்தார்.இந்த ஆரூடம் பலிக்காது போகவே சத்தமின்றி அதனை அவர் நிறுத்திக் கொண்டார். தற்போது சம்பந்தன் ஐயாவின் பாணியில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க இவ்வருட தீபாவளி நாளில் தொடக்கி வைத்துள்ளார். ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமர் தினேஸ் குணவர்தனவும் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுக்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்றும் தமிழர் தரப்பு இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது என்றும் தமிழர் தரப்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
- கூட்டமைப்பு வரவேற்பு
ஜனாதிபதியின் அரசியல் தீர்வு குறித்த அறிவிப்பு வந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. வரவேற்று ஜனாதிபதியின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனும் வரவேற்பதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் மலையகம் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தீர்வுப் பொதிக்குள் மலையகத்தையும் உள்ளடக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக மனோ கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும் .ஒருவருடத்திற்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு புதிய அரசியலமைப்பின் மூலம் கிடைக்கும். இது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியும் வருகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் ரணில் – மஹிந்ததரப்பினர் தமக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை நோக்கி காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர்.
தீர்வை முன் வையுங்கள் என்றால் தமிழர் தரப்பு கோபித்துக் கொள்கின்றது.தீர்வை முன் வைத்து இனவிவகாரத்துக்குத் தீர்வு காணுங்கள் என்று அரசாங்கத்தரப்பிடமும் தென்னிலங்கை சக்திகளிடமும் கோரிக்கை முன் வைத்தால் தமிழர் தரப்பு இனவாதத்தை வளர்ப்பதாகவும் நாட்டைப் பிளவுபடுத்த முயல்வதாகவும் கண்டனக் கருத்துக்கள் சீறிப் பாய்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தீர்வை முன்வைத்து இனவிவகாரத்துக்கு முடிவுகட்டி தென்னிலங்கை பேசுகின்ற ‘ தமிழ்ப் பயங்கரவாதத்தை ஓரம் கட்டுங்கள் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டபோது தமிழ்ப் பத்திரிகையாளர் மீது புலி முத்திரை குத்தப்பட்டது.
அமைதி திரும்பியதாகக் கூறப்படும் இன்றைய நிலையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷஇ அதிகாரப் பகிர்வு என்பனகுறித்துப் பேசினால் அது நாடு பிளவுபடுவதற்கு வழிவகுப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஏனெனில் தென்னிலங்கையின் கருத்தியலில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அபிலாiஷஇ அதிகாரப்பகிர்வுகுறித்த கோரிக்கை என்பன பிரிவினைவாதமாகச் சித்தரிக்கப்படுகின்றது.
பிரிவினைவாத முத்திரை குத்தப்படுகின்றது என்பதற்காக தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாiஷகளை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது தமது அதிகாரப் பகிர்வுகுறித்த கோரிக்கையை சலுகை அரசியலுக்காக தாரை வார்த்துக் கொடுக்கவோ தயாராக இல்லை என்பதை தமிழ் மக்கள் தமது அரசியல் பயணத்தில் பலமுறை பதிவு செய்துள்ளனர்.
இதனை மையமாக வைத்தே அரசியல் தீர்வுப் பொதியை தமிழ்த் தலைமைத்துவங்கள் முன்வைக்கவேண்டும்இ அரசாங்கத்தரப்புடன் பேச்சு வார்த்தைக்குச் செல்லும்போது தமிழர்தரப்பு வெறும் கையுடன் பேச்சு வார்த்தை மேசைக்கு செல்லாது தீர்வுப் பொதியுடன் செல்ல வேண்டுமென எனது அரசியல் பத்தியில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை சில தமிழ்த் தலைமைத்துவங்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக அவ் வேளையில் இருந்தது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் ( 10.02.2012) அன்று பழம்பெரும் தமிழ்க் கட்சியொன்றின் மூத்தஇ பழுத்த அரசியல்வாதியுமான ஒரு புத்திஜீவி இவ்வாறு தெரிவித்தார்.
- தீர்வுகுறித்த பொதி இன்றி தமிழ் தலைமைத்துவங்கள்
‘இன்றைய தமிழ்த் தலைமைகளிடம் அரசியல் தீர்வுகுறித்த எந்தவிதமான யோசனைகளும் அவர்கள் கைவசம் இல்லை.தீர்வு இருப்பதாக கூட்டங்களிலும் ஊடகங்களிலும் கூறினாலும்கூட அந்த ஆவணத்தை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. மக்களை முட்டாள்களாக்கி தொடர்ந்தும் ‘கதிரை அரசியல்‘ நடத்த முனைகின்றனர் என்று தெரிவித்தார்.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை இன்றைய தமிழ் தலைமைத்துவ பரம்பரை தமிழர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கல்ல அரசியல் மக்களின் சேவைக்கே அரசியல் தேவை என்ற அடிப்படையில் மக்களுக்காக இதய சுத்தியுடன் பணியாற்றக் கூடியவர்களின் அரசியல் பிரவேசமே இன்றைக்குத் தேவை. ஏனெனில் இன்றைய தமிழ்த் தலைமைத்துவங்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்தை மீட்கும் நிலையில் இல்லை என்றும் தெரிவித்தார்.
– 2012 இல் தமிழர் தரப்பில் கூறப்பட்ட கருத்தியலைத்தான் இன்று தென்னிலங்கை மாற்றத்தை விரும்பும் சக்திகளான ‘அரகலய‘ பேசுகின்றது.
2009 இல் போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக மார்தட்டிக் கொண்டிருந்த வேளை 2012 ஆம் ஆண்டு மேற்கூறிய வார்த்தைகள் வெளிவந்திருந்தன. அதற்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இன விவகாரத் தீர்வுக்கென பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியில் பேச்சு வார்த்தை வெற்றி அளிக்கவில்லைஇ ஒரு அங்குலம்தானும் நகரவில்லை என்பனபோன்ற வார்த்தைகளுடன் கூட்டமைப்பு முடித்துக் கொண்டது.
2009க்கு பிந்திய கடந்த 13 வருடங்களும் இவ்வாறே கடந்து போயுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை தாமே கொண்டு வந்ததாக பெருமை பேசிய கூட்டமைப்பு தலைவர்களால் இன விவகாரத்துக்கான தீர்வினை நல்லாட்சி காலத்தில் ஒரு அங்குலம்தானும் நகர்த்த முடியாது போயிற்று.
தற்போதைய ரணில் – மஹிந்த அரசாங்கத்தின் ‘ஒட்சிசன்‘ மஹிந்த தரப்பினரே அன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்ல. அந்தவகையில் இன விவகாரத் தீர்வுக்கான பொதியுடனான அரசியலமைப்பு உயிர் பெறுமா என்பது சந்தேகமே. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய அறிவிப்பு ரணில் – மஹிந்த அணியினரின் அரசியல் எதிர்காலத்தை நோக்கிய நகர்வுக்கான வியூகமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இந்த வியூகத்தை நகர்த்தவே ‘சொல்ஹெம் பொறி‘ களம் இறக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல்வாதிகள் காலத்துக்குக் காலம் ஓதுகின்ற ‘சாத்தான் வேதத்தை‘ வைத்து இன்றைய தமிழ்த் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களை எவ்வளவு காலத்துக்கு இருட்டுக் குகைக்குள் தீர்வைத் தேடும் பயணத்தைத் தெடரப் போகின்றன. எவ்வளவு காலத்திற்கு பேரினவாத வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையைக் கூறப்போகின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி இடப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இன்று தேவை ஒரு சர்வசன வாக்கெடுப்பு.அது தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் ஒருசேர நடத்தப்பட வேண்டும்.
இந்த வாக்கெடுப்பு தமக்கான அரசியல் தீர்வை தமிழ் மக்களே தீர்மானிப்பதாகவும் இருக்க வேண்டும். இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் இந்தத் தீர்வு ஒட்டு மொத்த சர்வதேசத்திற்கும் செய்தியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் 2012 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு தமது நிலைப்பாடுபற்றி தெரிவிக்கையில் ‘நாட்டன் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வென்பது எமது கைகளில் இல்லை.அதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களையே எம்மால் வழங்க முடியும் என்று தெரிவித்தது.
ஆனால் சர்வதேச பூகோள அரசியல் கள நிலவரம் அதுவல்ல என்பது தமிழ் மக்கள் அறிவர். தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக சர்வதேசமே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
சர்வதேசத்துக்கான செய்தியாக வாக்கெடுப்பு செய்தி அமையட்டும்!
Email : vathevaraj@gmail.com