முள்ளிவாய்க்கால் இனப்புடுகொலை நினைவாலயம் பிரம்ரன் மாநகரில் விரைவில் திறந்து வைக்கப்பெறும்-
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரம்ரன் மாநகர மேயர் பெற்றிக் பிரவுண் உறுதி
எனது கடந்த பதவிக் காலத்தில் அத்திவாரம் இடப்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்புடுகொலை நினைவாலயம் பிரம்ரன் மாநகரில் விரைவில் திறந்து வைக்கப்பெறும்- இதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன். இந்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் கனடாவிலிருந்து மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலிருந்தும் கனடாவிற்கு வருகை தரும் தமிழ் மக்கள் அதனை தரிசித்துச் செல்வார்கள் என்பது உண்மையே’ இவ்வாறு தெரிவித்தார். கடந்த 24ம் திகதி பிரம்ரன் மாநகருக்கான தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரம்ரன் மாநகர மேயர் பெற்றிக் பிரவுண் அவர்கள். நேற்று முன்தினம் புதன்கிழமை26ம் திகதி பிரம்ரன் மாநகரில் நடைபெற்ற ‘பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தின்’ 9வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த மேயர் பெற்றிக் பிரவுண் அவர்கள் அங்கு சிறப்பன முறையில் வரவேற்கப்பெற்றார்.
பின்னர் அவர் ‘பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தின் தலைவர் டாக்டர் ராதாகிருஸ்ணன் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்கள் சூழ்ந்து நிற்க அவர் உரையாற்றினார். சபையோர் நிறைந்த வழிந்த அந்த மண்டபத்தில் மேயர் பெற்றிக் பிரவுண் உரையாற்றுகையில் ‘ நான் மேயர் பதவிக்கு போட்டியிட்ட கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் பிரம்ரன் வாழ் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்து எனது வெற்றிக்கு பலம் சேர்த்துள்ளார்கள். எனவே நான் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளேன். எனவே எனது பதவிக் காலத்தில் தமிழ் மக்களின் எந்த வேண்டுகோளையும் நிறைவேற்ற தயாராக இருப்பேன். ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு உங்களிடமிருந்து வந்தால் உடனே நான் அதற்கான நடவடிக்கை எடுப்பேன்.’ என்றார்
மேற்படி விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அத்துடன் அங்கு சமூகமளித்த உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மற்றும் ‘யுகம் வானொலி’ கணபதி ரவீந்திரன் மற்றும் கிருஸ்ணா ரெலிகாஸ்ட் ஊடகத்தை நடத்தும் தென்புலோலியூரு;; கிருஸ்ணலிங்கம் ஆகியோர் ‘பிரம்ரன் தமிழ் மூத்தோர் கழகத்தின் இயக்குனர் சபையினரால் கௌரவிக்கப்பெற்றனர்.
கழகத்தின் உறுப்பினர்கள் பலர் இசை நடனம் நடிப்பு ஆகியவற்றில் நல்ல ஆர்வத்துடன் இருப்பதையும் திறமை வாய்ந்தவர்களாக விளங்குவதையும் காணக்கூடீயதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது