முல்லையும் இல்லை குறிஞ்சியும் இல்லை – இங்கு
நல்ல வெய்யிலால் இயல்பது மாறி
தொல்லை தரு பாலையது உருவாக
அவ்வளவாய் வாய்ப்பும் இல்லை
ஆனாலும் பாலையானேன்!
ஐம்பதிலும் அறுபதிலும் என்னிலை வேறு – அன்று
குன்றும் குழியும் பற்றையும் பறுகும் – அதனால்
கொள்ளையும் கொலைகளும் நிகழ்ந்தது உண்மையே – அதை
தெள்ளத் தெளிவாக சொன்னவர் கணபதிப்பிள்ளையே – அவர்
‘மணிக்கன் தோட்ட மருவி வாழும்
அம்மையன் கந்தன் ஆட்குத்தி நாகன்
என்போர்த் தலைஇய வன்றொழிற் கள்வர்
இருநெடும் பாதை மறைவி லிருந்து
வழியிற் போகும் மாந்தரை மறித்துக்
குத்தியு மடித்துங் கொல்லுங் கொடுந்தொழில்
செய்தூன் வளர்க்குஞ் செயிர் வினையாளர்’
என்று சொன்னதால் அன்றும் கள்வர் – இவ்வழி
நின்றே கொள்ளை அடித்ததால் – பொல்லாப்
பாலைக்குரிய பழியைச் சுமந்தேன்
எண்பது தொண்ணூற்றில் எத்தனை மாற்றம் – இம்
மண்ணது காணாத கவலையும் உள்ளதா போரினால் – ஆனாலும்
உண்ணவழி இல்லையேயென்று கொள்ளையர் எவரையேனும்
கண்டதில்லை என்வழியில் வல்லை வெளியில்
நல்லிருளிலும் நகைகளோடு நடமாடிய
தொல்லையில்லாக் காலமொன்று இருந்தது அன்று – இன்றோ
செப்பனிட்ட நேர்த்தியான பாதை – அழகாய்
கட்டப்பட்ட வரவேற்பு வளைவு – அன்றுபோல்
பாதையோரப் பிள்ளையாரும் தனிய இல்லை
நேராய்யொரு ஆஞ்சநேயர் அழகான கூரையின்கீழ்
அக்கம் பக்கம் பொட்டிக் கடைகள்கூட – அப்போ
எப்பக்கமும் எதுவும் இன்றித் தனித்திருந்து
தீங்கெதுவும் நீகழாது பாங்குடனே அருளிய ஆனைமுகன்
தாங்கிக் கொண்டார் தன்மீதும் குண்டுகளை
அன்று அதைப் போட்டவர்கள்
இன்று மிக அருகில் இருக்கின்றார்கள்
கண்ணை இமை காப்பதுபோல்
என்னேரமும் மக்களின் நலத்திற்காய் என்றவாறாம் – ஆனாலும்
நேரான அப்பாதை வழி நின்மதியாய்
போவாரார் இப்போது? என்பது போல்
போதைக்கு அடிமையாகி பிறர் உடைமைகளை – இப்
பாதையிலும் நின்றுதான் பறிக்கிறார்கள்
ஆரிட்டைச் சொல்வதென்று தெரியாத
போராட்டம் மக்களிற்கு நீடிக்கும் நிலையிருக்க
எனக்கும் பெருங்கவலை “பாலை” என்ற
விருப்பமில்லாப் பெயரொன்றைச் சுமப்பதுதான்.
உமா மோகன்