இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவது, இலங்கையின் வடபகுதியில் இருந்து தமிழக கடலோர பகுதிகளை நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பது என சீனாவின் ஆதிக்கமும் அத்துமீறலும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சீன ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை மிகவும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாட்டின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை சில நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிநவீன உளவு கருவிகள், செயற்கைக் கோள்கள், ஆளில்லா டிரோன்களுடன் சீன ராணுவத்தினர் நிலை கொண்டிருக்கின்றனராம். ஆகையால் அனைத்து கடலோர பகுதிகள், மாவட்டங்கள், நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இலங்கையில் கடல் அட்டை பண்ணைகள் அமைத்து சீனா இத்தகைய உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறதாம். இலங்கை அரசியல் கட்சிகள் உதவியுடன் சீன ராணுவ உளவாளிகள் சிலர் கடல்வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியதைத் தொடர்ந்து இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் அண்மையில் நிலை கொண்டிருந்டது. அப்போதும் இதேபோல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் இருந்து தென்னிந்திய ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை எளிதாக உளவு பார்க்கக் கூடிய நவீன சாதனங்கள், செயற்கை கோள்களுடன் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்தியாவின் எதிர்ப்பை மீறியே சீன உளவுக் கப்பலை இலங்கை அனுமதித்தது.
தற்போது இலங்கையில் தமிழர்களின் தாயக நிலப் பகுதிகளான முல்லைத்தீவு, அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சீனர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இலங்கையின் வடக்கே மீசாலை, சாவகச்சேரி பகுதிகளிலும் மீனவர்களுடன் சீனர்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கை வடபகுதி கடல் வளத்தை கபளீகரம் செய்யவே சீனா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவுக்கு செக் வைக்கிறதாம்
இலங்கையின் வடபகுதி தமிழர் தாயகப் பகுதி. இப்பகுதியில் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கும் ஈழத் தமிழருக்குமான நெருக்கமான வரலாற்று ரீதியான பிணைப்பைத் துண்டிக்கும் சதியுடன் சீனா அங்கே ஊடுருவி நிற்கிறது. வடக்குப் பகுதியைப் போலவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு பகுதிகளிலும் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாம்.
இலங்கையில் ஈழத் தமிழ் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்க நிதி உதவி செய்கிறது; ஆனால் சீனாவோ இலங்கை மாணவர்களுக்கு இலங்கையிலேயே உயர் கல்வி கற்க நிதி உதவி செய்கிறது. இலங்கையில் சீனா எதிர்காலத்தில் நிகழ்த்த திட்டமிட்டுள்ள நாசகார திட்டங்களுக்கு இலங்கை நாட்டவரை பயன்படுத்துகிற அப்பட்டமான உள்நோக்கமே இது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணியில்தான் தமிழகத்தில் கடலோர பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்தில் கீழ் இருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.