அப்பல்லோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி பொய்யான அறிக்கை வெளியிட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அப்பல்லோ வெளியிட்டது பொய்யான அறிக்கை என்றும் ஆறுமுகசாமி அணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் குழப்பம் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்பட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சசிகலா, கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. ஓ.பன்னீர் செல்வமும் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது எடப்பாடி பழனிச்சாமி அரசு. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திமுக ஆட்சி காலத்திலும் விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அவர் இட்லி சாப்பிட்டார்..பேசுகிறார்..பிசியோ தெரபி பயிற்சி அளிக்கப்படுகிறது என அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதாவிற்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை தரவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தும் கடைசி வரைக்கும் அதை செய்யவே இல்லை என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா உறவினர்கள் 10க்கும் மேற்பட்ட அறைகளை ஆக்கிரமித்திருந்தனர். ஜெயலலிதாவிற்கு எந்தமாதிரியான சிகிச்சை தரப்பட்டது என்று பற்றி வெளிப்படையாக கூறவேயில்லை. ரகசியம் காக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் எனவும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான உடல்நிலையில் இருந்ததாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் நடைபெறாமல் இருக்க, அவருக்கு காய்ச்சல் என்று பொய்யான அறிக்கை வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், விசாரணைக் கமிஷன் முன் ஆஜராக வேண்டுமென அப்பலோ மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும். இதுவரை தனக்கு எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொய்யான அறிக்கை அளித்த பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.