(மன்னார் நிருபர்)
(30-10-2022)
தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.
இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று இறுதி நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வுகள் பல ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றது.
சரவணப் பொய்கையில் ஆறு திரு முகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (30) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.
-திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மேளதாளம், வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய வளாகத்தில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.