(எமது யாழ் செய்தியாளர்)
இலங்கையில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆனாலும், போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை குறித்த கவலைகளும், கேள்விகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
அரசு அதற்கான உரிய பதிலைக் கூறாமல், காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்நாடு மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகிறது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.
நாடாளுமன்ற தீர்மானம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஓ எம் பி எனப்படும் அலுவலகம் `ஒன்றிற்கும் உதவாத அலுவலகம்` என்ற அவப்பெயரைச் சம்பாதித்துள்ளது.
யிரக்கணக்கானவர்கள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், வலிந்து காணாமலும் காணாமலும் ஆக்கப்பட்டிருந்த சூழலில், அந்த அலுவலகம் ஒருவரைக் கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், கோத்தாபய அரசாங்கமும் அதற்கு அடுத்து வந்த ரணிலின் ஆட்சியும் உண்மையைக் கண்டறிந்து அதைத் தெரிவிப்பதற்குப் பதிலாக `அற்பக் காசாக` இரண்டு லட்சம் ரூபாய் பணமும், மரணச் சான்றிதழும் அளிக்கவே முனைப்பாகச் செயல்படுகின்றன என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோபாவேசமாகக் கூறுகின்றனர்.
வயது போன தாய்மார்கள் தலைமையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் போராட்டம் 2000 நாட்களைக் கடந்தும் வலுக் குறையாமல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (31) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.
இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே திடீரென மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்துக்குள் உள்நுழைந்தனர்.
ஆனால், அந்த சமயத்தில் நீதி அமைச்சர் அங்கு இல்லை. எனினும், நீதி அமைச்சர் அங்கு இல்லாத நிலையிலும் நடமாடும் செயலமர்வு இடம்பெற்றது.
பொலிசார் போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்காத நிலையில். ஒரு மணி நேரம் வரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்துக்குள் கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
பின்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நடமாடும் செயலமர்வு அலுவலகத்தின் முன்பாகவும் சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
”ஒ எம் பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு” என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.