எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் படையினரின் பிடியில் இருக்கும் 3 ஆயிரத்து 427 ஏக்கர் நிலத்தில் இருந்து எந்தவொரு பகுதியும் மிஞ்சாதோ என்ற அச்சம் காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தயாராகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போதும் படையினரிடம் இருக்கும் நிலத்தில் அதிக நிலம் வலி. வடக்கில் உள்ளது இங்கே 2,467 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது. இதில் இராணுவத்தினரின் பிடியில் 1,614 ஏக்கர் நிலம் உள்ள அதே நேரம் எஞ்சியவை ஏனைய பாதுகாப்பு பிரிவுகளிடம் உள்ளது.
இவ்வாறு வலி. வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களிற்குச் சொந்தமான 1,614 ஏக்கர் நிலத்தையும் முழுமையாகச் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 2022-09-23 அன்று காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு ஓர் கடிதம் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டது. வலி. வடக்கு தொடர்பில் அதன் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து விட்டு அதன் முடிவிற்காக காத்திருக்கும் நிலையில் அடுத்த தவணை விசாரணை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி உள்ளது.
இதேநேரம் வலி. வடக்கில் மீனவர்களின் முக்கிய இறங்குதுறையானது `நல்லாட்சி` என சொல்லப்பட்ட காலத்தில் நீண்ட முயற்சியின்பால் விடுவிக்கப்பட்டபோதும் அதன் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கும் படையினர் வசம் உள்ள நிலம் தான் காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த துறைமுகத்தைப் பயன்படுத்திய பல நூற்றுக் கணக்கான மீனவர்கள் இன்றும் முகாம்களிலும் உறவுகள் வீடுகளிலும் வாழும்போதும் அவர்களிற்குச் சொந்தமான 212 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினர் வசமே உள்ளது, இதனை விடுவிக்குமாறு கோரியபோது கொள்கை அளவில் ஆமோதித்த இராணுவம் தற்போது மறுக்கின்றது.
இதேபோன்று வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் எனச் சொல்லப்படும் பகுதியில் தற்போதும் பலாலி வீதிக்குக் கிழக்கே உள்ள 612 ஏக்கர் நிலம் வலிந்த அபகரிப்பில் உள்ளது. இந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாகவும் நீண்ட பேச்சுக்கள் இடம்பெற்றதோடு இறுதியாக கோட்டாபய அரசின் கீழ் தற்போதைய மீன்பிடி அமைச்சர் மாவட்ட மேலதிக அரச அதிபரை (காணி) கொழும்பு வரை அழைத்து விடுவிக்கப்பட வேண்டிய நில விபரங்களைத் திரட்டியதோடு தனியான வரைபடமும் தயார் செய்யப்பட்டது. அவை படத்துடனேயே முற்றுப்பெற்றதே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆகிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் இவ்வாறெல்லாம் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூண்டோடு இராணுவ மயமாக்கும் முயற்சியாக அளவீட்டை மேற்கொள்ள பிரதேச செயலாளருக்கு அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வலி வடக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் தனியார் நிலங்கள் இராணுவத்தினர் வசம் 41 இடங்களும் கடற்படையினர் வசம் 59 இடங்களும் பொலிசார் வசம் 20 இடங்களும் உள்ளன.
போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் நிலங்களை மட்டுமன்றி வீதிகளைக்கூட விடுவிக்க படையினர் மறுக்கின்றனர். குறிப்பாக கட்டுவன் அச்சுவேலி வீதியைத் திறந்து விடுவதன் மூலம் பல ஆயிரம் பேரின் போக்குவரத்திற்கு உதவ முடியும் என 10 ஆண்டுகளாக கோருகின்ற போதும் இராணுவம் அதற்கு மறுக்கின்றது. இதனால் 10 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டிய மக்கள் 35 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் அவலம் இடம்பெறுகின்றது.
வலி. வடக்கில் இருந்து 1990-06-15 அன்று மக்கள் இடம்பெயர்ந்து வலிகாமத்தின் ஏனைய பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த சிறுவர்களும் அதன் பின்பு பிறந்தவர்கள்கூட திருமணமாகி தனியான குடும்பங்களாக இருக்கும் நிலையில் அவர்களை தொடர்ந்தும் முகாம்களில் தங்க விட்டால் முகாம் வாழ்வு அவலம் தொடர்கிறது என்ற சர்வதேச அழுத்தம் தொடரும் எனக் கருதிய அரசு, குடும்பத்திற்கு 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து வழங்கி இந்தப் பிரச்சனையைத் தீர்ப்போம் என முயல்கிறது.
இராணுவமும், கடற்படையும் இவ்வாறெனில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே சிவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொலிசாரும் நில அபகரிப்புச் செய்யத் தவறவில்லை. இவர்களும் வலி வடக்கில் இராணுவம் விடுவித்த பிரதேசத்தில் மட்டும் 31 ஏக்கர் உட்பட குடாநாடு முழுவதும் 20 இடத்தில் 45 ஏக்கர் நிலங்களை உரிமையாளர்களின் சம்மதம் இன்றியே தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் பல பொலிஸ் நிலையங்களும் உள் அடங்குகின்றன.
இவ்வாறு மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் படைக் கட்டுப்பாட்டில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் இன்றும் தோட்டச் செய்கையில் ஈடுபடுவதற்காகவே பெரும்பகுதி நிலங்களை ஒதுக்கியுள்ளனர். அதாவது எவரின் நிலத்தில் உணவு உற்பத்தி இடம்பெறுகின்றதோ அவர்களிற்கே அதை விற்பனை செய்யும் அவலம் இடம்பெறுகின்றது.
இதேபோன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை திறப்பதாக 2019இல் சர்வதேசத்திற்கு படம் காட்டிய பின்பு இழுத்து மூடப்பட்ட விமான நிலையத்தைச் சூழ உள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க மறுக்கும் படைத் தரப்பு விமான நிலைய கட்டிடத் தொகுதிகள் அமைக்க என்ற பெயரில் அதாவது வரி விலக்கு கடைகளை அமைப்பதற்காக தெற்கின் தனவந்தர்களிற்கு இடத்தை வழங்க தற்போது திட்டமிடப்படுகின்றது.
அவ்வாறான விமான நிலைய கட்டடத் தொகுதியை அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தாருங்கள் என்றால் அதனை அமைக்கும் வல்லமை இந்த நில உரிமையாளர்களிடம் இல்லை என்ற கூற்றின் மூலம் மறுத்து அந்த நிலம் தெற்கின் பண முதலைகளிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதேபோன்றே விமான நிலையத்திற்கான பாதை அமைந்துள்ள கட்டுவன் மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளத்திற்கு 8 ஏக்கரை விடுவிக்க மறுத்து வீதியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அந்த வீதிக்குப் பதிலாக தற்போது தனியாரின் காணி ஊடாக சட்ட விரோத வீதி அமைத்துள்ளனர்.
இவற்றையும் தொடர் போராட்டங்கள் மூலம் மட்டுமே பெற முடிந்தமையினால் இனியும் மௌனம் காப்பது வேலைக்கு ஆகாது என்ற முடிவிற்கு மக்கள் தள்ளப்பட்டு அடுத்த கட்ட போராட்டம் பற்றி சிந்திக்கின்றனர்.