யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வலம்புரி நட்சத்திர விடுதியில் ஒரு நிகழ்வு இடம் பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அரசியலும் இருந்தது. ஓராண்டுக்கு முன் கொழும்பில் உயர்நீர்த்த திருமதி கௌரி தவறாசாவை நினைவு கூர்ந்து அவருடைய நினைவு நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அது. திருமதி கௌரி தவறாசா நாடறிந்த ஒரு வழக்கறிஞர். அவரும் அவருடைய கணவனும் ஒன்றாகச் சேர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகப்பட்டவர்கள் பலரை விடுவித்திருக்கிறார்கள். தமிழ் சட்டத்துறைப் பரப்பில் குறிப்பாக தலைநகரில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஒரு பெண் ஆளுமையாக அவரைக் கூறலாம். அதுபோலவே தமிழ்ப் பரப்பில் பெருந்தொற்று நோய் காவு கொண்ட ஒரு முக்கிய பெண் ஆளுமையாக அவரைக் கூறலாம். தமிழ் சட்டத்துறையில் இப்பொழுது பெண்கள் அதிகமாக வருகிறார்கள். எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவப் படுத்தியவர்களில் திருமதி கௌரி சங்கரி முக்கியமானவர்.
இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட பின்னரான கடந்த சுமார் ஏழு தசாப்த காலத்தில் ஒப்பிட்டளவில் அதிக காலம் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அசாதாரண சட்டங்களின் கீழ்தான் ஆளப்பட்டு வருக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையம் தொகுத்த ஒரு நூல் உண்டு. இந்த ஆங்கில நூல் சட்டத்துறை வல்லுநர்களின் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இந்நூலின் முன்னுரையில் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.. 1947 ஆம் ஆண்டிலிருந்து சிறிய இடைவெளிகளைத் தவிர்த்துப் பார்த்தால் இலங்கை தீவில் அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் தொடர்ச்சியாக அமுல் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால் அசாதாரண சட்டமே சாதாரண சட்டமாக பயிலப்படும் ஒரு நிலைமையை காணலாம். இதனால் சாதாரண சட்டங்களும் அசாதாரண சட்டங்கள் போல செயலாற்றும் ஒரு நிலைமையையும் காணலாம்.
அதுதான் உண்மை. தமிழ் மக்கள் மத்தியில் சாதாரண உரையாடல்களில் ஒரு பொருளின் அல்லது ஒரு சம்பவத்தின் சிறப்பை கூறுவதற்கு ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு. “சட்டப்படி “. இங்கு சட்டப்படி என்ற வார்த்தை சட்ட ரீதியிலான பரிமாணத்தில் பயன்படுத்தப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட பொருள் அல்லது குறிப்பிட்ட சம்பவத்தின் தரச் சிறப்பை கூறுவதற்கு அது பயன்படுத்தப்படுகிறது. அம்சமானது அல்லது சிறந்தது என்ற பொருளில்தான் அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கடந்த சுமார் 7 தசாப்தகால தமிழ் அரசியல் அனுபவத்தை தொகுத்துப் பார்த்தால். சட்டப்படி என்பது ஒரு நல்ல வார்த்தை அல்ல.அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் முதலாக பெரும்பாலான சட்டங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் கருவிகளாகத்தான் நடைமுறையில் உள்ளன.
மேற்கத்திய ஜனநாயகப் பரப்புகளில் ஓர் அரசைக் கட்டமைக்கும் மூன்று முக்கிய தூண்களான சட்டவாக்கத்துறை, (அல்லது அரசாங்கம்). நீதிபதிபாலனத்துறை, படைத்தரப்பு ஆகிய மூன்றுக்கும் இடையே வலு வேறாக்கம் உண்டு. அதாவது ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய சுயாதீனத்தோடு இயங்க முடியும் என்று பொருள். ஆனால் இலங்கைத் தீவில் தமிழ் அனுபவம் அதுவல்ல. ஜனநாயக செழிப்புமிக்க அரசியல் பரப்புகளில் வலு வேறாக்கம் பிரயோகத்தில் உண்டு. ஆனால் இலங்கை தீவில் இருப்பது இன நாயகம்தான். எனவே ஜனநாயக இதயம் செழிப்பாக இராத நாடுகளில் சட்டவாக்கத்துறை, நீதிபதிபாலனத்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய மூன்றுக்கும் இடையே வலுவேறாக்கம் இருக்காது. மாறாக அங்கு அரசின் கொள்கை எதுவோ அதை அமுல்படுத்தும் உபகரணங்களாகவே நீதிபதிபாலனத் துறையும் படைத்துறையும் இயங்கும். இதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
இலங்கைத்தீவின் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பானது அதன் ஒடுக்கும் தேவைகளுக்காக சட்டங்களை உருவாக்கும். அதை நீதிபதிபாலனத் துறையும் படைத்துறையும் அமல்படுத்தும். இங்கு சட்டம் எனப்படுவது ஒடுக்குமுறையின் ஒரு கருவியாகத்தான் பிரயோகத்தில் உண்டு.அரசின் கொள்கை ஒடுக்குமுறையாக இருந்தால் சட்டம் அதன் கருவியாக செயல்படும் என்பதே பிரயோக தர்க்கம் ஆகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒடுக்குமுறையை வெளிப்படையாக முன்னெடுப்பது பெருமளவுக்கு அரச படைகள்தான். படைத்தரப்பு அரசின் உபகரணங்களில் ஒன்றுதான். அது போலவே திணைக்களங்களும் நீதிபரிபாலனக் கட்டமைப்பும் அரசின் உபகரணங்கள்தான். 2009க்கு பின் அரச திணைக்களங்கள் ஏதோ ஒரு விதத்தில் சிங்கள பௌத்த அரசுக் கொள்கையை முன்னெடுத்து வருகின்றன. உதாரணமாக வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், நில அளவை திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கடத்தொழில் திணைக்களம் போன்றவற்றை இங்கு சுட்டிக் காட்டலாம். அதாவது அரசு திணைக்களங்கள் எனப்படுகின்றவை அரசின் உபகரணங்கள்தான். அவை அரசுக் கொள்கையை அமல்படுத்தும் உபகரணங்களே. அரசின் கொள்கை ஒடுக்குமுறையாக இருக்குமிடத்து அரசு திணைக்களங்களும் ஒடுக்கு முறையின் கருவிகளாகவே செயல்படும்.
இப்படிப்பட்டதோர் வரலாற்று பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டம் மட்டும்தான் தமிழ் மக்களை ஒடுக்கியது என்பதல்ல, அண்மை ஆண்டுகளில் பெரும் தொற்று நோய்க் காலத்தில் தனிமைப்படுத்தற் சட்டத்தையும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியதை இங்கு நினைவூட்டலாம். நினைவு கூர்தலுக்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகளை அவர்கள் கைது செய்ய முற்பட்டபொழுது தனிமைப்படுதல் சட்டத்தை ஒடுக்கும் சட்டமாக அவர்கள் பயன்படுத்தினார்கள். அதுபோலவே சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியகச் சட்டமும் ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்டதுதான். அதாவது தொகுத்துக் கூறின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு தமிழ் மக்களையும் தனக்கு எதிராகப் போராடுகின்றவர்களையும் ஒடுக்குவதற்கு ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அது பயங்கரவாத தடைச் சட்டமாகவோ, திருத்தி அமைக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமாகவோ,அவசரகாலச் சட்டமாகவோ, அல்லது தனிமைப்படுத்தல் சட்டமாகவோ,அல்லது புனர்வாழ்வு பணியகச் சட்டமூலமாகவோ இருக்கலாம்.
இவ்வாறான ஒரு சட்டப் பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து பார்க்கும் பொழுதே தமிழ் சட்டப்பேரப்பில் தவராசா+கௌரி தம்பதிக்கு உள்ள முக்கியத்துவத்தை கணிப்பிடலாம்.அவர்கள் இருவரும் பயங்கரவாதத் தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வென்றெடுத்த 40 வழக்குகளைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய நினைவு நூல் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.அந்த வழக்குகளின் விபரங்களை படிக்கும் எவரும் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கியது, இப்பொழுதும் ஒடுக்குகிறது என்பதனை கண்டுபிடிக்கலாம். அதுமட்டுமல்ல கௌரி சங்கரி மனித உரிமைகள் என்ற விடயத்தில் மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதனையும் அந்த நூல் நமக்கு காட்டுகிறது.
இது அந்த நூலுக்குரிய முக்கியத்துவம். இதைவிட அந்த நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வேறு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னவெனில், நிகழ்வில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் நிற்கும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோரைத்தவிர அவர்களுடைய கட்சிகளை சேர்ந்த ஏனைய பெரும்பாலான உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வடக்கு-கிழக்கில் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அங்கே காணமுடிந்தது.அண்மை ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஒரு நிகழ்வில் ஒன்றாகக் காணப்பட்டமை என்பது அசாதாரணமானது. அந்த அடிப்படையில் அந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நிகழ்வின் முடிவில் கௌரி சங்கரியின் கணவர் தவராசா ஆற்றிய உரை உணர்வுபூர்வமாக இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அரசியல் செய்தியும் இருந்தது. அதாவது அது ஒரு நினைவு கூர்தல் நிகழ்வு மட்டுமல்ல, அதன் மூலம் ஏதோ ஒரு தரப்புக்கு ஏதோ ஒரு அரசியல் செய்தியை உணர்த்தும் உள்நோக்கமும் அதில் இருந்ததா?
அதே சமயம் அந்த நூல் வெளியீட்டு நிகழ்வின் பின் கௌரிசங்கரியின் கணவரும் தமிழரசுக் கட்சியின் கொழுப்புக் கிளை முக்கியஸ்தருமான தவறாசா ஓர் ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரனுக்கு எதிரானவைகளாகக் காணப்பட்டன. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் சுமந்திரனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரான தவராசா தெரிவித்த கருத்துக்களையும் தொகுத்து பார்க்கும் பொழுது கூட்டமைப்புக்குள் உட்கட்சி பூசல்கள் புதிய வடிவத்தை அடைகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒருபுறம் பெருந்தொற்று நோயினால் காவு கொள்ளப்பட்ட ஒரு முக்கிய பெண் ஆளுமையை நினைவு கூரும் நிகழ்வில் எல்லா கட்சிகாரர்களும் ஒன்றாக காணப்பட்டார்கள். இன்னொருபுறம் அந்நிகழ்வின் பின் நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இருப்பவற்றில் பெரிய கட்சியான கூட்டமைப்பு ஓர் இறுக்கமான கட்டமைப்பாக இல்லை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்தின. ஒரே நாளில் தமிழ் மக்களுக்கு கிடைத்த இரண்டு முரணான செய்திகள் அவை.