( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 02)
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
வன்னி மண் கொடுத்துச் சிவந்த மண். அதற்குச் சரித்திர சான்றுகள் ஏராளம். அதன் அளப்பரிய வளங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்துள்ளன. வந்தாரை வாழவைக்கும் பூமி வன்னி பெருநிலப்பரப்பு.
ஆனால், குன்றாத வளங்கள் இருந்தும் அங்குள்ள மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது வரலாற்றுச் சோகம். போர்க்களமாக இருந்த அந்த பூமியில் இரண்டு தலைமுறையினர் சிக்கினர். ஒரு தலைமுறையினர் போருக்கு பிந்தைய காலத்தில் பிறந்தவர்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகள் உள்ளன. போர்க் காலத்தில் கட்டுமான வளங்கள் அழிந்தன. அது உண்மை. பாடசாலைகள், மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டு இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின.
போருக்குப் பின்னரான காலத்தில், `வடக்கின் வசந்தம்` என்ற திட்டத்தின் கீழ் சில அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றன.
எனினும், இந்த அபிவிருத்திகளால் யார் பயனடைந்தார்கள் என்பது மிகப்பெரும் கேள்வி. அதேவேளை அந்த முன்னேற்றம் இராணுவத்தினரின் பயணம் மற்றும் நிலப்பயன்பாட்டை அதிகரித்தது. காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களையும், வளங்களையும் பறிகொடுக்கும் நிலை மெல்ல மெல்ல, ஆனால் சீராகத் தொடர்ந்து நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள், தலங்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு அபகரிக்கும் பணிகள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டன/முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு குருந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய இடத்தில் சட்டத்தையும் மீறி ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது ஒரு சிறந்த உதாரணம். அந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள குளத்தில் பாரம்பரியமாக மீன்பிடித்து வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் தமிழர்களின் உரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய இடத்தில் மக்கள் சுதந்திரமாக தமது தொழிலைச் செய்ய முடியாத சூழல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகிறது என்பதே யதார்த்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 1,38,516 மக்களிற்கு மட்டும் நிலப்பற்றாகுறை நிலவவில்லை அந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் 1,17,801 கால்நடைகளிற்கும் மேய்ச்சல் பரப்போ அல்லது மாரி மழையின்போது மாற்று இடமின்மை காரணமாகவும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் அதன் உரிமையாளர்களின் கண் முண்ணே இறந்து விழும் அவலம் இன்றுவரை இடம்பெறும் அந்த மாவட்டத்தில் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலத்திற்கு அரச நிர்வாக இயந்திரமே காரணமாக உள்ளதில் அதிக பங்கு வகிக்கும் திணைக்களங்களான வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன உள்ளதை முதல் பாகத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
அதற்கான ஆதாரமாக மாவட்டத்தில் இந்த இரு திணைக்களத்தின் நிலை தொடர்பான புள்ளிவிவரம் பலரை தலைசுற்ற வைக்கும். ஏனெனில் மாவட்டத்தின் மொத்த பரப்பளவானது 2,41,500 ஹெக்டேயர் அல்லது 5,96,505 ஏக்கர் அளவீட்டைக் கொண்ட நிலப்பரப்பாகும். இதிலே வனவளத் திணைக்களமானது 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் 81,881 ஹெக்டேயர் நிலங்களை உரிமைகோரி அரச இதழ் பிரசுரித்துள்ளதோடு 2009ஆம் ஆண்டிற்கும் 2015 ஆண்டிற்கும் இடையில் 67,806 ஹெக்டேயர் நிலங்கள் தமது திணைக்களத்தின் ஆளுகை என அரச இதழ் பிரசுரித்துள்ளனர்.
இவற்றின் பிரகாரம் 3,69,726 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. இதிலே 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச இதழ் வெளியிட்ட நிலங்களிற்கு இன்றுவரை நில அளவைகூட செய்யப்படவில்லையென மாவட்டச் செயலகமும் உறுதி செய்கின்றது.
இதேபோன்று இலங்கையில் நிலவிய `நல்லாட்சி` எனச் சொல்லப்பட்ட காலத்திலும் நிலங்களை அபகரிக்க இந்த திணைக்களம் தவறவில்லை. இக்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 17,259 ஹெக்டேயர் அல்லது 42,623 ஏக்கர் நிலம் மேலும் சுவீகரிக்கப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் தற்போது முல்லைத்தீவில் மட்டும் ஒரு 1,66946 ஹெக்டேயர் அல்லது 4,12,356 நிலம் வனவளத் திணைக்களத்திடம் மட்டும் உள்ளது.
இதேபோன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகையின் 8,517.9 ஹெக்டேயர் அல்லது 21,037 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. அரச திணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன்களைப் புறந்தள்ளி இவ்வாறு வன்னி பெருநிலப்பரப்பிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வளமான பகுதிகளைக் கையகப்படுத்தியுள்ளது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.
ஆனால் இந்த திணைக்களங்கள் தாம் கையகப்படுத்திய நிலங்களை எந்தளவிற்கு நாட்டிற்கும் மக்களிற்கும் பயனுள்ளதாக மாற்றியமைத்தது என்ற கேள்விக்கு எவரிடமும் பதிலில்லை.
இலங்கையைப் போன்றே உள்நாட்டு யுத்தத்தில் சிக்கித் தவித்து பிறகு மீண்டெழுந்த பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அங்கிருந்த அபரிமிதமான காடுகளை, அவற்றை அழிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு எப்படிக் கொண்டு வந்து குறிப்பாகக் கரையோர மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தியது என்பதை அறிந்து இலங்கை ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும்.
இந்த இரு திணைக்களங்களின் பிடியில் மட்டும் மாவட்டத்தின் 67.08 வீதமான நிலப்பகுதிகள் வனப் பகுதியாக மட்டுமே முல்லைத்தீவில் பேணப்படும் சூழலில் எஞ்சிய 32.92 வீதமான பகுதியே நிர்வாக, வாழ்வாதார, தொழில் முயற்சி மற்றும் கற்றல் செயற்பாட்டு நிலங்களாக காணப்படுகின்றது. இந்த 32.92 வீதமான நிலங்களிலும் 2.18 வீதமான நிலங்கள் சதுப்புநிலங்களாக எந்தவொரு பாவனைக்கும் ஏற்புடையதற்றுக் காணப்படுவதனையும் மாவட்டச் செயலக புள்ளிவிவரம் உறுதி செய்கின்றது. அதன் அளவு மட்டும் 14,493 ஏக்கரைத் தொட்டு நிற்கின்றன. இவற்றின் அடிப்படையில் மாவட்டத்துன் மொத்த நிலமான 5,96,505 ஏக்கர் நிலத்தில் இரு திணைக்களத்திடம் 4,33,393 ஏக்கரும் சதுப்பு நிலம் 14,493 ஏக்கருமாக மொத்தம் 4,47,886 ஏக்கர் நிலம் போனால் எஞ்சிய நிலமாக 1,47,112 ஏக்கர் நிலம் மட்டுமே எஞ்சிய அனைத்து விதமான செயல்பாட்டிற்கு உள்ளன.
இவை அனைத்திற்கும் அப்பால் மாவட்டத்தில் 35,403 ஹெக்டேயர் அல்லது 87,447 ஏக்கர் நிலம் விவசாய நிலமாக காணப்படுகின்றது.
அதாவது மாவட்ட நிர்வாக அலகின் ஆளுகையில் இருப்பதாகக் கூறப்படும் 1,47,112 ஏக்கர் நிலத்திலும் 87,477 ஏக்கர் விவசாய நிலம் தவிர்க்கப்பட்டால் அல்லது விவசாய பாவனையெனில்- வெறுமனே 61,172 ஏக்கர் நிலம் மட்டுமே அங்கே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய காணப்படுகின்றது.
புள்ளி விவரங்கள் வாசிப்பதற்கு உளைச்சலாகவும் தலைச்சுற்றுவதாகவும் இருக்கலாம். ஆனால் ஆழமான புரிதல் மற்றும் பிரச்சனைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அந்த எண்ணிக்கைகள் மிகவும் அவசியமானவை. எதிர்காலத் திட்டமிடலுக்குப் புள்ளி விவரங்கள் இன்றியமையாதவை என்பதாலேயே மிகவும் சிரமங்களுக்கு இடையே சேகரிக்கப்பட்ட தரவுகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்த 61,172 ஏக்கர் நிலத்திலேயே மக்களின் 30 ஆயிரம் வரையான வாழ்விடங்கள் உள்ளன. இதிலிருந்து மிகவும் விலாசமான நிலப்பரப்புள்ள ஒரு மாவட்டத்தில் மக்கள் எப்படியான சன நெருக்கடியில் வாழ்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியும். குறைந்த நிலப்பரப்பில் மக்கள் செறிந்து வாழும் போது, வளங்கள் இருந்தும் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அந்த நெருக்கடியைத் தீர்க்க அரசு ஏன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
திட்டமிடலில் என்ன குளறுபடிகள் என மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கேட்டாலும், அதற்கு உரிய பதில்கள் அளிக்கப்படுவதில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம் தேவைக்கும் அதிகமாக அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவப் பிரசன்னமே காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் ஏனைய பொதுப்பயன்பாடுகளுக்கென முல்லைத்தீவு மாவட்டத்திலே 300ற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த 300 குளங்களில் 100 குளங்கள் வனவளத் திணைக்கள பகுதிகளில் இருந்தாலும் எஞ்சியவை வெளிப் பிரதேசத்திலும் உள்ளன. மூன்றில் ஒரு பங்கு நீர் ஆதாரம் வனவளத் திணைக்களப் பகுதியில் இருந்தாலும், வனப் பாதுகாப்பிற்குப் பாதகம் வராமல் அந்த நீரை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும். வனவள திணைக்களத்தின் நிர்வாகப் பகுதிகளில் மக்கள் எட்டியும் பார்க்க முடியாதபோதும் இராணுவத்தினர் மட்டும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி சென்றுவர முடியும். அது அன்றாடம் நடைபெறுகிறது.
இதே நேரம் நிர்வாக ரீதியிலான நிலத்திலேயே மாவட்டத்தின் இரு கல்வி வலயங்களான துணுக்காய், முல்லைத்தீவு ஆகியவற்றின் கீழ் மாணவர்களிற்கான 127 பாடசாலைகளும், மாவட்டச் செயலகம், 6 பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் அலுவலகம் அல்லது பொது நோக்கு மண்டபம், பிரதேச சபைகள், கமநல சேவை நிலையங்கள், மத்திய மாகாண அரச திணைக்களங்களிற்கான அலுவலக கட்டிடங்களும் அமையப் பெற்றுள்ளன. இவற்றிற்கும் கணிசமான நிலங்கள் போகும்.
இவ்வாறு மேற்சொன்ன புள்ளி விவரங்களே அந்த மாவட்டத்தின் வறுமைக்கு பிரதான காரணமாகவுள்ளது.
அரச நிர்வாக இயந்திரமே என்ற எனது கூற்றை மெய்ப்பிக்கும் தற்போது பலரும் ஏற்பீர்கள் என நம்புகின்றேன்.
இந்த நிலையில் மனித பாவனைக்கும் கால் நடைகளின் உணவுத் தேவைக்கும் என வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்துள்ள நிலங்களில் இருந்து உடனடியாக 17,710 ஹெக்டேயர் அல்லது 43,743 ஏக்கர் நிலத்தை மீள விடுவிக்க வேண்டும் என மாவட்ட செயலகம் அவசரமாக கோரி நிற்கின்றது.
மாவட்டச் செயலகத்தில் கோரிக்கை கொழும்பிலுள்ளவர்கள் காதில் விழுமா?
இந்த அவலங்கள் இவ்வாறு இருக்க அங்கே முன்னேற்றங்களுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் செயல்பாடட்று அல்லது கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன. அந்த அவலங்களை இத்தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
( அவலப் பட்டியல் நீளும்)
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 01
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 02
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 03
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 04
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 05
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 06