சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
சில சம்பவங்கள் ஒரே சமயத்தில் சந்தோஷத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். நாம் நிகழ்வின் எப்பக்கம் நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அது அமையும்.
அதே போன்று தான் கேலிச் சித்திரமும். பொதுவாகவே ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்றால், கேலிச் சித்திரம் பத்தாயிரம் வார்த்தைகளுக்குச் சமமாகும் என்பது பொதுவான புரிதல்.
ஒரு சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றை அண்மையில் சமூக` ஊடகங்களில் காண நேர்ந்த போது இதயம் கனத்தது. அந்த சம்பவம் எதை வெளிப்படுத்தியது-அங்கீகாரத்தையா அல்லது அவமானத்தையா என்பதைப் பகுப்பாய்வு செய்ய எனக்கு ஓரிரு நாட்கள் தேவைப்பட்டன.
இறுதியாக ஒரு வகையில் அவமானமாகப் பார்க்கப்பட்டாலும், அங்கீகாரம் என்பதே அதில் விஞ்சியிருந்தது என்று நான் கருதுகிறேன்.
இலங்கையின் மிக உயர்ந்த அரச இலக்கிய விருது 14 ஆண்டுகளாக அரசியல் கைதியாகச் சிறையில் இருக்கும் சிவலிங்கம் ஆரூரனுக்கு வழங்கப்பட்டதையடுத்து, அவர் அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தைக் காணொளி வாயிலாக சமூக ஊடகத்தில் பார்த்த போதே எனக்குள் அந்த தாக்கம் ஏற்பட்டது.
அவருக்கு விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது படைப்பை வாசித்துள்ளவன் என்கிற வகையில் அதில் எனக்கு சந்தோஷம். ஆழமான கருத்துக்களை யதார்த்தமான சூழல்களை மையப்படுத்தி, வாசிப்பவர்களை உருகச் செய்யும் எழுத்து வன்மை அவரிடம் உள்ளது. அவரது முதல் படைப்பான `யாழிசை` புதினத்தை வாசித்தவர்களுக்கு அது புரியும்.
அதே காணொளி எனக்குள் ஒரு வகையான சங்கடத்தை ஏற்படுத்தியது. நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய விருதான சாகித்திய விருதை அவர் பெறும் போது, அவர் ஒரு அரசியல் கைதியாகச் சிறையில் இருப்பவர் என்பதற்காக அவரை மேடைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி அழைத்து சென்று விருதைப் பெற்றவுடன் உடனே மீண்டும் அழைத்து வந்தது எனக்கு நெருடலை ஏற்படுத்தியது.
அவரை அரசியல் கைதியாக நீண்டகாலமாகச் சிறையில் அடைத்துள்ளது சரியா தவறா என்பதை பார்ப்பதற்கு முன்னர், பரிசளிப்பு விழாவில் நடத்தப்பட்ட விதம் சரியா என்ற கேள்வி எழுகிறது. அது தவறு என்று நான் கருதுகிறேன். அடிப்படையில் அந்த பரிசளிப்பு உள்ளரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, மேலும் உள்ளேயும் வெளியேயும் போதியளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்படியிருக்கும் போது அவர் மேடைக்குச் சென்று விருது பெறும் அந்த மிகக் குறுகிய நேரத்திற்கும் கூட ஒரு பொலிஸ் அதிகாரி உடன் சென்று, அவர் ஒரு `கைதி` என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமா என்பதே எனது கேள்வி.
அது தேசிய விருது பெறும் ஒரு படைப்பாளியைச் சிறுமைப்படுத்துவது போலாகாதா? சிறையில் இருந்தாலும் இலக்கிய பங்களிப்புச் செய்த அவரை விழா மேடையிலிருந்தவர்களோ பரிசளித்தவர்களோ வாழ்த்தி உரையாற்றினார்களா என்பது எனக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சியின் முழுமையான காணொளியை நான் பார்க்கவில்லை என்பதே உண்மை.
இலங்கையில் நீண்டகாலமாகவே இந்த `அரசியல் கைதிகள்` பிரச்சனை பெரும் பிரச்சனையாகவுள்ளது. தொடர்ச்சியாக வந்த அரசுகள் நாட்டில் `அரசியல் கைதிகள்` என்று யாரும் இல்லை என்கிற ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழ் தரப்போ அவர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் பழிவாங்கும் நோக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று வாதிடுகின்றனர்.
அதேவேளை அரச தரப்போ சிறையில் இருப்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறுகிறது.
ஒருவர் நாட்டின் சட்டத்தின் கீழ் தவறிழைத்திருந்தால், அது முறைப்படி சட்டரீதியாக நியாயமான விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தால், அதற்கான வரையறுக்கப்பட்ட தண்டனை அளிக்கப்பட்டு அந்தக் காலம் முடிந்த பிறகு விடுவிக்கப்பட வேண்டும். அல்லது அவர் குற்றமற்றவர் என்றால் விடுதலை செய்யப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதுவே உலகப் பொது முறை.
இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அரசுகள், தமிழர்கள் தமது உரிமைகளைக் கோரும் போது, அவர்களை அடக்குமுறை வழிகளைக் கையாண்டு, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தியதும், சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது, இன்றளவும் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சில வேளைகளில் பெரும்பான்மையின சிங்களவர்களும்-அதிலும் குறிப்பாக அரசிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களை கடுமையாக தாக்குவதை பண்டாரநாயக்க தொடங்கி ரணில் அரசு வரை செய்து வருகிறது.
அண்மையில் கூட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு புத்தபிக்கு கூட கைது செய்யப்பட்ட பிறகு மோசமாக நடத்தப்பட்டுள்ளார், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் கோரி வருகின்றனர். ஆனால் ராஜபக்சக்களின் `பினாமியாக` ஆட்சி செய்யும் ரணில் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
சரி, மீண்டும் சிவலிங்கம் ஆரூரன் விஷயத்திற்கு வருவோம். அவர் பொறியியல் படித்த பட்டதாரி. அதிலும் விமானவியல் பொறியாளர் என்று அறிகிறேன். அவர் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. அவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார், வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறதா என்பதெல்லாம் பொது வெளியில் இல்லை. குறைந்தபட்சம் அவர் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் என்பதையாவது அரசு தெரிவித்திருக்க வேண்டும். நானறிந்தவரை அவர் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் அவரை இன்னும் எவ்வளவு காலம் அரசு சிறையில் வைத்திருக்கும் என்பதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்களுக்கே வெளிச்சம்.
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக குரல் கொடுக்கும் பிளவுபட்டு நிற்கும் தமிழ் கட்சிகள் கூட, `அரசியல் கைதிகள்` என்று அவர்கள் கூறுபவர்கள் குறித்து முறையான ஆவணங்களைத் தொகுத்து பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு தேர்தல் காலம், அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து அழுத்தம் வரும் போது, அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்துப் பேசுவார்கள்.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பொதுவாகப் பேசுகிறார்களே தவிர, பொதுவான ஒரு நிலைப்பாடு அல்லது செயற்திட்டமோ இல்லை. அடிப்படையில் அவர்களிடம் ஒற்றுமையில்லை என்பதே கசப்பான உண்மை. அனைத்து கட்சியிலும் உள்ள சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை இதற்கென தனியாக அமைத்து, தொடர்ச்சியாக அதை பின் தொடர்ந்து, தனித்தனியாக அலசி ஆராய்ந்து முடிவு காண்பது கடினமான காரியமாக இருக்க முடியாது. ஆனால் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அதைச் செய்வதற்கு அவர்கள் முன்வருவார்களா என்பதே கேள்வி.
`பயங்கரவாத நடவடிக்கைகளில்` ஈடுபட்டார்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்று அரசு கூறினாலும், கைது செய்யப்பட்டவர்களை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்குவதிலோ, அல்லது அரசால் `புனர்வாழ்வு நடவடிக்கைகள்` என்று அவர்களால் வெளியுலகத்திற்குக் கூறப்படுவதற்கு உட்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விடுவித்து சமூகத்தில் மீண்டும் இணைய வழி செய்யலாமே.
அண்மையில் அபூர்வமாக சில தமிழர்களை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு விடுவித்தது. அதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவரும் அடங்குவார். கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்டிருந்தார் என்று கூறி மட்டக்களப்பைச் சேர்ந்த ரகுபதி சர்மா அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப்போது அவரை விடுவிக்கலாம் அதில் தனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று சந்திரிகா அரசிற்கு கடிதம் எழுதியதை அடுத்து அவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இனி அவருக்கு வாழ்க்கை என்று ஏதாவது உள்ளதா?
எனினும் சிவ ஆரூரனின் நிலைமை சற்று வித்தியாசமானது என்று நான் கருதுகிறேன். பொறியாளரான அவர் விடுவிக்கப்பட்டால் அவரால் நாட்டிற்கு நல்லதொரு பங்களிப்பை அளிக்க முடியும். அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த படைப்பாளி. அவரது இலக்கிய பங்களிப்பு நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தரக் கூடும். அவரது படைப்புகள் ஆங்கிலம், சிங்களம் உட்பட இதர மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம். அப்படியான சூழலில் அவரது கைது பேசுபொருளாகும் போது, அரசிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதாவது படைப்பாளிகளை ஒடுக்கும் அரசு என்ற அவப்பெயர் ஏற்படும்.
எனவே, நாட்டிற்குச் சிறந்த இலக்கிய பங்களிப்பையும், தனது கல்வியின் மூலம் மேலும் பங்களிப்பையும் செய்யும் வாய்ப்பு உள்ள ஒருவரை விடுதலை செய்வது நல்லதொரு முன்னெடுப்பாக இருக்கும்.
அதை ரணில் அரசு முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒரு பன்னாட்டுச் செய்தியாளர் என்ற வகையில் முன்வைக்கிறேன். அப்படி அவர் செய்ய வருவாராயின் ஓரளவேனும் தமிழ் மக்களுக்கு ஆறுதலை அளிக்கும் நடவடிக்கையாகவும், நல்லிணக்கத்திற்கான ஒரு சிறிய நகர்வாகவும் இருக்கும்.
இதேவேளை இன்றைய தமிழ் இலக்கிய பிதாமகர்களில் ஒருவரும், அற்புதமான படைப்பாளியும், கனடா இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, உலகெங்கும் உள்ள தமிழ் படைப்பாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து கௌரவித்து, தமிழிற்கும் இலக்கியச் செறிவிற்கும் சிறப்பு சேர்க்கும் ஐயா அப்பாத்துரை முத்துலிங்கம் சிவ ஆரூரனின் இலக்கிய பங்களிப்பை அங்கீகரித்து, அவருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் விருதைளிக்க வேண்டும் எனவும் கனடா உதயனின் இந்த கட்டுரை மூலம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்கிறேன்.
அவரது முதல் படைப்பான `யாழிசை` புதினத்தை ஒருமுறையல்ல இருமுறை வாசித்து நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியவன் என்ற வகையிலும், முன்னெப்போதும் இருந்திராத வகையில் முதல் முறையாக பிபிசி தமிழோசையில் அந்த புத்தகத்தை நூல் மதிப்புரை செய்தவன் என்கிற வகையிலும் அவரது எழுத்தின் வீச்சையும் வசீகரத்தையும் நான் அறிவேன். ஒரு முன்னாள் போராளியைப் போருக்கு பிறகு சமூகம் எப்படிப் பார்த்தது, ஒருவரை போராளியாக போற்றிய சமூகம் போர் முடிந்த பிறகு அவர்களை எப்படி நிர்கதியாக கைவிட்டது என்கிற கருவை ஒரு பெண் போராளியின் பார்வையிலிருந்து அற்புதமாக எழுதியிருப்பார் சிவலிங்கம் ஆரூரன். இதுவரை வாசிக்காதவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன்.