வடக்கு, கிழக்கு என்ற பிரிவினை இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்..
வடக்கு கிழக்கு மாகாண சபை உருவாக்கம் பெற்ற பின்னர் இனவாதிகளால் வடக்கையும் கிழக்கையும் பிரித்து அதன் மூலம் தமிழ்த் தேசியத்தையும் சிதைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் இன்னும் தொடரும் நிலையில் தற்போது வடக்கு, கிழக்கு என்ற பிரிவினை இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அதிகளவு வரவேற்பு கிட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் மாணவ ஒன்றிய தலைவரும், கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான தர்சன் இந்த செயற்பாட்டில் முன்னின்று உழைத்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமையன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வலி. வடக்கில் 2467 ஏக்கர் பரப்பளவினை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இதனை மக்கள் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கின்ற போதிலும் தற்போது அந்த இடத்தினை இராணுவத்தினர் வசப்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. மாணவர் சக்தியாக நாங்கள் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வடக்கில் இருந்து கிழக்கும், கிழக்கில் இருந்து வடக்குக்குமாக இன்றும் இந்த பயணம் தொடர்கிறது. இன்று முதல் வடக்கு, கிழக்கு என்று எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் அன்றைய தினம் யாழ்ப்பாண .பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு ஒன்றியங்களுக்குமிடையிலான எதிர்கால திட்டமிடல்கள், தமிழ் தேசிய பரப்பினுள் மாணவர் ஒன்றியங்களாக ஆற்ற வேண்டிய செயற்திட்டங்கள் போன்ற ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.