*-நக்கீரன்*
கோலாலம்பூர், நவ.05:
ஓர் ஊடக நடுவம் என்னும் நிலையைக் கடந்து மலேசிய இந்திய சமுதாயத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்கும் அளவுக்கு செயல்படும் மின்னல் பண்பலை வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தளபதி இல்லாத படைவீரர்களைப் போல செயல்படுகின்றனர்.
அண்மைக் காலம்வரை அதை வழிநடத்திய கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக-சந்தைப் பிரிவுக்கு மாற்றலாகி விட்டதாகத் தெரிகிறது. அவர் பதவி உயர்வில் அங்கு அமர்த்தப்பட்டுள்ளாரா அல்லது பணிமாற்றம் செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் மின்னல் வானொலிக்கு அடுத்த நிருவாகியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் என்பது தெரியவில்லை. ‘கிரேட் 44’ என்ற நிலையில் இருக்கும் ரேகாதான் இடைக்கால நிருவாகியாக இருப்பதாகவும் அதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் போகிறபோக்கில் ஒருவர் சொன்னார்.
அதற்கு மேல் அவர் பேச விரும்பாமல், இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். பொதுவாக, மின்னல் பண்பலை வானொலியில் பணியாற்றுபவர்-களுடன் அண்மைக் காலமாக பேசமுடியவில்லை; நன்கு அறிமுகம் ஆனவர்கள்கூட பின்னங்கால் பிடறியில் படும் அளவிற்கு தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.
ஒரு நிருவாகக் கட்டமைப்பில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லைதான். ஆனால், மலேசிய அரசியல், பொருளாதார, சமூக, கல்வித் தளங்களில் இந்திய சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு துடிப்பான உயிரோட்டமிக்க தகவல் நடுவமான மின்னல் பண்பலை வானொலியின் நிருவாகப் பிரிவிற்கு புதிய தலைவர் யார் என்பதை சமூகத்திற்குத் தெரிவிக்காமல் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
மின்னல் பண்பலை வானொலியின் நிருவாகியர் பணிமாறுவதோ அல்லது பதவி உயர்வுடன் விலகுவதோ மிகவும் இயல்பானது; அதைப்போல புதியவர் அப்பொறுப்புக்கு வருவதும் அதிசயமல்ல; கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளதுதான்.
ஆனால், இப்பொழுது இதைப்பற்றி சமூகத்திற்கு தெரிவிக்காமல் மறைத்து வருகின்றனர்.
தற்பொழுது மின்னல் வானொலிக்கு புதிய நிருவாகி யார்? அல்லது இடைக்கால நிருவாகி யார்? அல்லது தலைமைப் பொறுப்பில் எவரும் நியமிக்கப்படவில்லையா என்பது குறித்து ஒன்றும் தெரியவில்லை.
ஒருவேளை, ரேகா என்பவர் இடைக்கால நிருவாகியாக இருந்தால், அவரை வரவேற்று, அதுகுறித்து சமூகத்திற்கு தெரிவிக்கப்படும். தவிர, அவரின் அருமை பெருமைகளை அறிந்து அவருக்கு எத்தனைக் கொம்பு முளைத்திருக்கிறது என்பதும் சுட்டப்படும்.
ஆனால், அவரின் தொலைபேசி எண்ணைக் கொடுக்க அனைவரும் தொடைநடுங்குவது ஏன் என்றுதான் தெரியவில்லை.
ஒன்றுமட்டும் தெரிகிறது; அந்த வட்டாரத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது; அந்தவொன்று என்னவென்பதை சமுதாயமே அறிந்து கொள்ளட்டும்.