(மன்னார் நிருபர்)
(8-11-2022)
-அத்து மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27 மற்றும் இந்த மாதம் 5ம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும் படகையும் இலங்கை கடற்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை வசம் இருக்கும் 22 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.அதே போல 2017 ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் . பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் விதமாகவும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் , கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (8) தங்கச்சிமடம் வலசை தெருவில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 15இ000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.