தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியம்(IFTF) ,கணபதிநிதியம் ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன்,IMHO, USA ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யா/மந்துவில் றோ.க.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் நவம்பர் 07ம் திகதி குதூகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வித்தியாலய அதிபர் திரு. ந.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக கணபதி நிதிய இணைப்பாளர் திரு.க.ராஜேந்திர அவர்களும் தென்மராட்சிக்கல்வி வலய விஞ்ஞான பாட வளவாளர் திரு.சி.சக்திதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவ மாணவிகள் திறன் பலகையில் தமது பாடங்களை நிகழ்த்திய பாங்கு நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்ததை காணமுடிந்தது.ஆசிரியர் ஒருவரும் திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்நிகழ்வில் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.
உதவியளித்திருந்த அமைப்புக்களுக்கு அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்படுத்தும் ஆசிரியர்களுக்கான உபாயங்களும் வழங்கப்பட்டன.அத்துடன் மாணவர்கள் தமது ஆராய்வூக்கம் மற்றும் ஆக்குதிறன் முயற்சிகளுக்காக எவ்வாறு திறன் பலகையை பயன் படுத்தி சிறப்பாக துலங்கலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் விருந்தினர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மாணவி ஒருவரது நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.