தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாகப் பழமுதிர்ச்சோலை என்ற திட்டத்தை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளது. ஆலயங்கள் தோறும் பழமரங்கள் நாட்டுவோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (07.11.2022) சம்பிரதாயபூர்வமாகப் பூநகரியில் இடம்பெற்றுள்ளது.
பூநகரி ஸ்ரீ சர்வவிக்கின விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலய அறங்காவலர் குழுவினர்களிடம் பழமரக்கன்றுகளை வழங்கியதோடு, மரக்கன்றுகளை நாட்டியும் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பூநகரி பிரதேசமருத்துவமனை மருத்துவ அதிகாரி ஸ்ரீ. அனந்தஸ்ரீயும் கலந்துகொண்டிருந்தார். தொடர்ந்து, பூநகரி ஞானிமடம் கொட்டிலுப் பிள்ளையார் ஆலயம் மற்றும் பூநகரி பிரதேசமருத்துவமனைக்கும் பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகையை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. கார்த்திகை மழைவீழ்ச்சிகூடிய மாதம் என்பதோடு தமிழ்த்தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். தமிழ்மக்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்யும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளனர். மாவீரர்களை நினைவேந்தும் நாட்களும் இம்மாதத்திலேயே அடங்குவதால் இம்மரநடுகை மாதத்தைப் பொதுஅமைப்புகளும் பொதுமக்களும் ஆண்டுதோறும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.