வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் இருந்து குரல் எழும்பியுள்ளது.குறிப்பாக இந்தக் குரல் தமிழரசுக் கட்சியில் இருந்து எழுந்துள்ளது.தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதுவரை காலமும் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏணைய கட்சிகளே இந்தக் கோரிக்கையினை கடந்த காலங்;களில் முன் வைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளும் இந்தக் கோரிக்கையினை தொடர்ச்சியாக முன்வைத்தன.
ஆனால் கூட்டமைப்பின் தலைமையும் தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவதை தவிர்த்து வந்தனர். இறுதியில் இந்தக் கோரிக்கையை முன் வைத்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பல வெளியேறின அல்லது வெளியேற்றப்பட்டனர்.அதைப்பற்றி எல்லாம் கணக்கில் எடுக்காத தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கூடாக தமிழரசுக் கட்சியின் அரசியலை முன்னெடுப்பதிலும் பலப்படுத்திக் கொள்வதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியது.
• Big Brother பாணியில் தமிழரசுக் கட்சி
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விவகாரம்குறித்த எந்தவித நிகழ்ச்சி நிரலும் இன்றி தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்கும் அரசியலையே பிரதானமாகக் கொண்டு செயற்பட்டது.தமிழரசுக் கட்சி பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பிற்குள் Big Brother பாணியில் ஆட்சி நடத்தியது. இதன்மூலம் தமிழரசுக் கட்சி பெரிதாக ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை.இறுதியில் கூட்டமைப்பை சிதைத்ததாகவும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்ப்பதுமாகவே கூட்டமைப்பின் நகர்வுகள் அமைந்தன.
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் குறித்தோ தமிழர் விவகாரத் தீர்வு குறித்தோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் குறித்தோ தென்னிலங்கையின் தமிழர்களுக்கு எதிரான போக்கை தடுத்து நிறுத்தும் நிலையிலோ சிங்கள இராஜதந்திரத்துக்கு ஈடு கொடுக்கும் நிலையிலோ கூட்டமைப்பின் செயற்பாடுகள் இருக்கவில்லை.
•தலையாட்டி பொம்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இதனால் தமிழர் தரப்புக்கு தாயகத்திலும் சாவதேசரீதியிலும் தொடர்ந்தும் தோல்விகளே கிடைத்தன. மொத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் ‘தலையாட்டி பொம்மையாக’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்தன.
அதேவேளையில் 2009 இல் போர் மௌனிக்கப்பட்டபின் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக அங்கீகரித்து இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்திற்கும் பிரகடனப்படுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மதிக்காது செயற்படவே கூட்டமைப்பின் ‘தமிழ்த் தேசியத்தில்’; நம்பிக்கை இழந்து மக்களில் ஒரு பகுதியினர் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்பட்டனர். இதனால் கூட்டமைப்பின் ஆசனங்களில் வீழ்ச்சி கண்டது.
• 2004 பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனத்துடன் 22 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
• 2010 பொதுத் தேர்தலில் 13 ஆசனங்களுடன் 1 போனஸ் ஆசனத்துடன்14 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
• 2013 பொதுத் தேர்தலில் 13 ஆசனங்களுடன் 1 போனஸ் ஆசனத்துடன்14 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
• 2015 பொதுத் தேர்தலில் 14 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனங்களுடன் 16 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
• 2020 பொதுத் தேர்தலில் 9 ஆசனங்களுடன் ஒரு போனஸ் ஆசனம் பெற்று 10 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றது.
இனிவரும் காலங்களில் கூட்டமைப்பின் அரசியல் நிலைமை இன்னும் மோசமாகலாம்.
• இது மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு இழந்த ஆசனங்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகளின் கைகளில் வீழ்ந்துள்ளன.
• வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியில் ஆட்சியாளர்களால் பிரிக்கப்பட்டபோதும் மக்கள் தமிழ்த் தேசிய உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது மக்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்கப்பால் வடக்குக் கிழக்கென இரு துருவங்களாகிவிட்டனர். கிழக்கு தமிழ் மக்கள் தனி வழி பற்றி ஆழமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்
• வடக்குக் கிழக்கில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் போராட்டத்துடன் கைகோர்த்துப் பயணித்தவர்கள். ஆனால் தற்போது ‘ஆற்றைக் கடக்கும்வரை அண்ணண் தம்பி ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ நான் யாரோ’ என்ற கதையாக நடத்தப்படுவதாக குமுறிக் கொண்டிருக்கின்றனர். தற்போது ‘வடக்கு மலையக மக்கள்’ என்ற ஒரு உருவாக்குவதில் முனைப்பாக உள்ளனர்.
• இதுவரை கிழக்கு கரையோர மாகாண சபைகுறித்த கருத்தியலில் இருந்த முஸ்லிம்தரப்பு தற்போது கிழக்கு மாகாண சபைகுறித்த கருத்தியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
•இதுவரை தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்பட்ட தமிழர் தரப்பு இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசாங்கத்தின் அனுசரனையுடன் உள் நாட்டு வெளி நாட்டு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களில் ஒரு பகுதியினரும் ‘தமிழ்த் தேசியம் பேசுவோரும்’ தமிழ்ச் சமூகத்தை நாசப்படுத்தும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
• அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை இல்லாமல் ஒழிப்பதற்கான வேலைத் திட்டங்களையும் ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இன்றைய நிலைமைக்கேற்ப ஒரு புது ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இது 13வது திருத்தத்தை இல்லாமலாக்குவதற்கான முயற்சியென அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையை மதிக்காது பயணித்தமையினாலும் கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டமையினாலும் கள நிலவரம் திசைமாறிப்போகக் காரணமாகியது.
மொத்தத்தில் தமிழ்த் தேசியம் பரந்த வடக்கு கிழக்கு கருத்தியலில் இருந்து சுருங்கி யாழ் பெருந் தேசியவாதமாக உருமாறிவிட்டது. 2009 இல் போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்கள் பெற்றதெல்லாம் இழப்புக்களும் தோல்விகளும் தமிழ் மக்களிடையே முற்றிப்போன முரண்பாடுகளுமாகவே உள்ளன.
ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்குமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004 தேர்தலுடன் தேர்தல் திணைக்கள வெளியீடுகளில் Tamil National Alliance என்ற பெயர் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழரசுக்கட்சி என்றே பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி விழுங்கியுள்ளதையே தேர்தல் வெளியீடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. வீட்டுச் சின்னமும் தேர்தல் விதி முறைப்படி கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தமையினால் தேர்தல் திணைக்களம் இந்த முடிவை எடுக்கக் காரணமாகின.
•தமிழ்த் தேசியத்தை ‘படு கொலையாக்கிய’ வரலாராறு
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த 13 வருடகால வரலாறு தமிழ்த் தேசியத்தை ‘படு கொலையாக்கிய’ வரலாராகவே உள்ளது.
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கூடாக முன்னெடுத்த அரசியலால் தமிழரசுக் கட்சியும் வாழவில்லை கூட்டமைப்பையும் வாழவிடவில்லை என்ற நிலையே உருவாகியுள்ளது.
இந்த ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதுகுறித்த கோரிக்கையை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன் வைத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதால் மாத்திரம் திசைமாறிக் கிடக்கின்ற தமிழர் அரசியலை நிமிர்த்திவிட முடியாது. கூட்டமைப்பின் ஒட்டு மொத்த அரசியலும் தமிழரசுக் கட்சியின் பிடியில் இருந்து விடுபட்டு சுயாதீனமான அமைப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
1.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
2.கூட்டமைப்புக்கென யாப்பு உருவாக்கப்பட வேண்டும்
3.கூட்டமைப்புக்கென பொதுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும்.
4.சம பிரதிநிதித்துவம் கொண்ட அதி உயர் சபை உருவாக்கப்பட வேண்டும்.
5.நிதி விடயங்களைக் கையாள்வதற்கென ஒரு நிதிக் குழு உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் புலம் பெயர் தமிழர்கள் வாரி வழங்குகின்ற நிதிக்கு என்ன நடக்கின்றதுஇ எவர் கைகளில் நிதி முடக்கப்படுகின்றது என்பன குறித்து ஆராயப்பட வேண்டும். கடந்த பல வருடங்களுக்கு முன் தமிழ் அரசியல்வாதி ஒருவரிடம் கனடாவில் வழங்கப்பட்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்று கனடா வாழ் தமிழ் மகன் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அந்த அரசியல்வாதி வழங்கிய பதில் இது. ‘பிரபாகரனிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டீர்களா? என்னிடம்வந்து கணக்குக் கேட்கின்றீர்கள்’ என்று திருப்பி கேள்வி கேட்டுள்ளதாக கனடாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
6.கூட்டமைப்பிற்கென தேர்தல் நியமனக் குழு அமைத்தல்.
7.தமிழர் விவகாரத்துக்கென தீர்வுப் பொதியை முன் வைத்தல்.
8.இலங்கை தரப்பையும் சர்வ தேசத்தையும் கையாளக் கூடிய குழுவை அமைத்தல்.
9.தமிழர் விவகாரத்துக்கென நிபுணத்துவ குழு {Think Tank) உருவாக்குதல்.
10.தாயகத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல்.
– இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதில் நடைமுறையில் சிக்கல்கள் இருந்த போதும் கூட்டமைப்பின் இலக்குகளில் ஒன்றாக நீண்ட கால நோக்கில் உள்வாங்கப்பட வேண்டும்.
11. தமிழ்ச் சமூகம் திட்டமிடப்பட்ட போதைப் பொருள் பாவணைக்குள் இழுத்துவிடப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றது. தமிழ்ச் சமூகம் தான் கொண்டிருந்த சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை இழந்தள்ளதன் விளைவே இது.
12. அணைத்துத் தரப்பினரும் இணைந்து கொள்ளும்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீள் உருவாக்கம் அமைய வேண்டும். இதற்கு தமிழரசுக் கட்சி பச்சைக் கொடி காட்டுமா என்பது கேள்விக் குறியே. இருள் சூழ்ந்த குகைக்கள் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் முரண்பாடுகளை களைந்த ஓரணியில் பயணிக்க வேண்டிய இன்றைய கால கட்டத்தில் மக்கள் பல பிரிவுகளாக சிதறிப்போவது தென்னிலங்கை அரசியலின் நகர்வுகளுக்கு பச்சைக் கம்பளம் விரிப்பதாகவே அமையும். கூட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு தமிழரசுக் கட்சி தயாரில்லையெனில் மாற்றுத் தலைமை நோக்கி நகர்ந்தாக வேண்டும்.
•1977 இல் தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். இந்த ஆணையை தமிழ்த் தலைமைகள் தேர்தல் அறுவடையுடன் முடக்கிவிட்டனர்.
•இந்த மக்கள் ஆணையை தமிழ் இளைஞர்கள் கைகளில் எடுத்தனர்.2009 இல் அது மௌனிக்கப்பட்டது.
•2009 க்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். கூட்டமைப்பு தாம் பெற்ற ஆணையை மதிக்கத் தவறியதனால் தலைமைத்தவத்தில் பெரிய வெற்றிடம் தோன்றியுள்ளது.
•மக்களின் இன்னொரு ஆணை பெற தமிழ் மக்களுக்கான தலைமை மீள் உருவாக்கப்பட வேண்டும். மீள் உருவாக்கம் பெறும் தலைமை ரயில் தண்டவாளம் போன்று நாடாளுமன்ற அரசியல் மற்றும் நாடாளுமன்ற அரசியலுக்கப்பால் என இரு தண்டவாளத்தில் பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அரசியல் தலைமைகளுக்கு அப்பால் தமிழ்த் தேசியத்தை நேசிப்போர் சிவில் சமூகத்தினர் பல்கலைக் கழக மாணவர்கள் என அணைத்து தரப்பினரும் கைகோர்த்துப் பயணிக்க முன் வரவேண்டும். இது தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரது கடமையாகும். இல்லையேல் தமிழ்ச் சமூகம் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஊழியத்திற்குள் சிக்க வேண்டி வரும்.