மலாயாவில் முதன்முதலில் முடிதிருத்தியவர்கள் தமிழர்கள்
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.10:
நாடு, இனம், மொழி, கல்வி, தொழில், பொருள், புகழ், சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் கடந்து ஒரு மனிதரை சட்டென அடையாளப்-படுத்துவது அவரின் முடி அலங்காரம்தான்.
ஓட்டமும் நடையுமான அன்றைய வாழ்க்கைப் பயணத்தில்கூட, தமிழர்கள் முடியை சிங்காரப்படுத்தி, தம் நாகரிக வாழ்வை வெளிப்படுத்தினர். பெண்களைப் போலவே ஆண்களும் முடியை வளர்த்தாலும் முடியை அலங்காரப்படுத்தி வாழ்வதில், உண்மையில் உலக மக்களுக்கே தமிழர்கள்-தான் முன்னோடி.
பண்டைத் தமிழருக்கு இணையான நாகரிக வாழ்வை கிரேக்க மக்களும், எகிப்தியர்களும் எட்டியிருந்தாலும்கூட, அரச மட்டத்தில் வாழ்ந்தவர்கள் அதற்கு அடையாளமாக தமிழ் மன்னர்களின் மணிமுடியைப் போன்ற மகுடம் அல்லது தலைப்பாகையை அணிந்து கொண்டாலும் பொதுமக்களில் ஆண்கள் அனைவரும் தலைவிரி கோலமாகத்தான் வாழ்ந்துள்ளனர்.
ஆனால் தமிழர்களில் அந்த நிலை கிடையாது; புலவர், சிற்பி, பொற்கொல்லர், வணிகர், படகோட்டி என அந்தந்த தொழிலுக்கு ஏற்றவாறு தமிழர்கள் தங்களின் நீள்முடியை அலங்காரம் செய்து வாழ்ந்தனர். விவசாயிகள் தலையில் மட்டும் மன்னர்தம் தலையில் மணிமகுடம் இருப்பதைப் போல முண்டாசுக்கட்டு எந்த நேரமும் குடிகொண்டிருக்கும்.
முடியை கத்திரித்து செம்மைப்படுத்திக் கொள்ளும் வழக்கம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானபொழுது, அது ஏறக்குறைய உலகெங்கும் ஒரே சமயத்தில் பிரதிபலித்தது. இதற்கு அடிப்படையாக அமைந்தது ஆங்கிலேய நாகரிகம்தான் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனாலும், இந்தத் தலைமுடி நாகரிகத்தில், ஆங்கிலேயர்களுக்கு முன்னோடி
தமிழர்கள்கள்தான்; காரணம், முடியை சுறுக்கிக் கொள்ளுதல் அல்லது மட்டமாக அல்லது சீராக வெட்டிக்கொள்வது பாரம்பரிய மருத்துவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது.
தற்பொழுது பாரம்பரியத் தொழிலாக முடிதிருத்தும் தொழிலை செய்வோரின் முன்னோர்கள் அக்காலத்தில் வட்டார மருத்துவர்களாகவும் செவிலியராகவும் விளங்கி உள்ளனர். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சித்த மருத்துவத்-திலும் சுகப்பிரசவம் பார்ப்பதிலும் தேர்ந்தவர்களாக விளங்கியுள்ளனர். அதனால், இவர்களுக்கு மருத்துவர்-மருத்துவச்சி என்ற பெயர் நீண்ட காலம் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்று இருந்தது.
குறிப்பாக, இந்த மருத்துவர் குடும்பப் பெண்கள் கருவிகள் ஏதுமின்றி கைவைத்தியத்திலேயே எளிதாக பிரசவம் பார்ப்பது; மகப்பேற்றுக்குப் பின் தாயையும் சேயையும் பராமரித்தல்; குழந்தை மருத்துவம் என்றெல்லாம் திறமையாக வாழ்ந்துள்ளனர்.
இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், ஆண் நோயாளிகளுக்கு வைத்தியம்செய்யும் வேளையில் தேவை ஏற்பட்டால் தலைமுடியை வெட்டுவதற்கான கருவியையும் உடன் வைத்திருப்பார்கள். இப்படித்தான், முடிவெட்டும் தொழில் தொடக்கத்தில் உருவானது.
காலவோட்டத்தில், பாகவதர் முடி, அண்டர் கட், ஸ்டெப் கட்டிங்க், ஹிப்பி ஸ்டைல், சடைமுடி, நீண்ட முடி, மொஹாக், மொட்டைத் தலை என்றெல்லாம் அவரவரும் தத்தம் விருப்பத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப முடி அலங்காரம் செய்து கொள்கின்றனர்.
இன்றைய நாட்களில் முடிக்கு வண்ணம் பூசிக்கொள்ளும் புது வழக்கம் மலர்ந்துள்ளது.
மலேசியாவைப் பொறுத்தவரை முதன்முதலில் பல இன மனிதர்களுக்கு முடி அலங்காரம் செய்தவர்கள் தமிழர்கள்தான். சீன ஆண்கள், தங்களின் நீண்ட முடியை பெண்களைப் போல சடை பின்னி அலங்காரம் செய்யும் வழக்கம், அண்மைக் காலம்வரை நீடித்தது. சீன ஆண்களின் நீள்முடி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியவர்கள் சிகை அலங்காரத் தொழில்செய் தமிழர்கள்தான்.
முடிதிருத்திக் கொள்ள வரும் வாடிக்கையாளர்கள் சிந்தனையை ஓரிடத்தில் நிலைநிறுத்தி அமைதியாக இருப்பதற்கு ஏதுவாக கவர்ச்சிப் படங்களை சுவற்றில் பதிய வைத்திருப்பார்கள். அதைப்போல, கவர்ச்சி இதழ்களையும் வைத்திருப்பார்கள். இதன் ஒரு கூறாக, செய்தித் தாள்களையும் வைத்து வாசிக்கும் பழக்கத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் காலந்தோறும் செயல்படுகின்றனர். இதை ஒரு சமூகக் கடப்பாடாகவே அவர்கள் கைக்கொண்டுள்ளனர்.
மலாயா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே மாநில அளவிலும் மண்டல அளவிலும் செயல்பட்டு வந்த சிகை அலங்கார தொழில் புரிவோர், தொழிலாளர் தட்டுப்பாட்டுச் சிக்கலை எதிர்கொண்டபோது, மத்தியக் கூட்டரசை நாடுவதற்காக தேசிய அமைப்பாக உருமாற வேண்டிய அவசியம் எழுந்தபோதுதான், மலேசிய இந்தியர் சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கம் உருவானது.
அப்படி உருவான இந்த சங்கத்தின் 21-ஆம் ஆண்டுக் கூட்டம் நவம்பர் 11-ஆம் நாள், சிலாங்கூர் பத்துமலை, Jalan Ipoh PT-7(Pekan Lama Batu 7), SHENGA Conventional Hall- என்னும் மண்டபத்தில் பகல் 12:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
டாக்டர் சுதந்திரன் தலைவராகவும் இராஜசேகரன் பொதுச் செயலாளராகவும் இருந்து வழிநடத்தும் மலேசிய இந்தியர் சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்திற்கு, இந்த அமைப்பின் மூத்தத் தலைவர் பண்டிதர்-டாக்டர் மதிராசன் ஆலோசகராக செயல்படுகிறார்.
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர் டத்தோ என்.கோபால கிருஷ்ணன், மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ த. மோகன் ஆகியோரின் சிறப்பு வருகையுடன் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் எதிர்காலம் கருதி நவம்பர் 20-ஆம் நாள் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் சமர்ப்பிப்பதற்கான கோரிக்கை விண்ணப்பம் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.