எமது யாழ். செய்தியாளர்.
ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கிற்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள ஸ்ரீதர் சினிமா தற்போது ஆஸ்திரேலியாவின் வசித்துவரும் மஹேந்திரரவிராஜிற்கு சொந்தமானது.
உள்நாட்டுப் போர் 1990களின் தொடக்கப் பகுதியில் உச்சகட்டத்தை எட்டியிருந்த நிலையில்1991 ஆம் ஆண்டு ஸ்ரீதர் சினிமாவை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் ஒன்று அதை தமது கிடங்காகப் பயன்படுத்தி வந்தது. அந்த தனியார் நிறுவனம் அங்கிருந்து வெளியேறிய பிறகு தனிப்பட்ட பாதுகாப்பு நபர்களை தான் நிறுத்தியிருந்ததாகவும், அவர்களை துப்பாகி முனையில் மிரட்டி வெளியேற்றி 1996 ஆம் ஆண்டு தமது பூர்வீகச் சொத்தான அந்த இடத்தை ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வலிந்து ஆக்கிரமித்ததாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதை காலி செய்யுமாறு 25 கடிதங்கள் மற்றும்1000 தொலைபேசி அழைப்புகளுக்கு மேலாகச் செய்தும் அமைச்சர் அதை மீண்டும் தம்மிடம் கையளிக்கவில்லை என்று மஹேந்திரரவிராஜ் ஆதங்கப்படுகிறார்.
ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அந்த இடத்தை தனது அலுவலகமாகத் தொடர்ந்து பயன்படுத்திவரும் நிலையில் ஸ்ரீதர் திரையரங்கிற்கான மின்சாரக் கட்டணத்தை 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபை கூறுகிறது.
அவ்வகையில் 1698170408 என்ற மின் இணைப்பு எண் கொண்ட அந்த திரையரங்கிற்கான மின்சாரக் கட்டணம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் என்று காணப்பட்டதாகவும் 2014ஆம் ஆண்டிற்கு பின்பு தற்போது 2022 ஆம் ஆண்டுவரையில் மாத சிட்டைக்கான கொடுப்பனவு மட்டுமே செலுத்தப்படும் நிலையில் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு செலுத்தாத 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதத்திற்கும் தற்போது 8 ஆண்டுக்கால வட்டிப் பணத்துடன் ஒரு கோடி ரூபாவினை தாண்டியதன் அடிப்படையிலேயே தற்போது மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணத்தைச் செலுத்துமாறு கோரி 2014ஆம் ஆண்டு முதல் மின்சார சபை கடிதம் அனுப்பியபோதும் அதற்கான பணம் இதுவரை செலுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதால் அதை கட்சி அலுவலகமாக தான் பயன்படுத்துவதாகவும், வலிந்த ஆக்கிரமிப்பு ஏதும் இடம்பெறவில்லை, அதை உரிமையாளரிடம் மீண்டும் கையளிப்பதில் தங்களுக்குத் தயக்கம் ஏதுமில்லை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்கோள் காட்டி ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.
























