(14-11-2022)
பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.
அறிக்கை கிடைத்த உடன் சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து தனியான விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படும் போது தண்டனை விதிக்கப்படுவது டன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து நீக்கப்படுவார் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டரின் செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாணந்துறை கொரகாபொல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பதாகையுடன் நடந்துவந்த 2 பெண்களை கைது செய்யுமாறு அழுத்தம் விடுத்த குறித்த பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கழுத்தை நசுக்கி பிடித்து நாகரிகமற்ற முறையில் செயற்பட்டிருந்தார்.